விஜய்க்கு கட் அவுட்… ரசிகர்களுக்கு கெட் அவுட்… இது ’தெறி’கூத்து..!


விஜய்க்கு கட் அவுட்… ரசிகர்களுக்கு கெட் அவுட்… இது ’தெறி’கூத்து..!

ரசிகர்கள் இல்லையென்றால் எந்தவொரு நடிகராலும் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. சினிமாவையும் தாண்டி, நடிகர்களின் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆனால் இவ்விழாவில் கலந்துக் கொள்ள ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடையும் விதிக்கப்பட்டு இருந்தது.

இவையில்லாமல், அரங்கினுள் நுழைய முயன்ற சில ரசிகர்களை அங்கு குவிக்கப்பட்டிருந்த பவுன்சர்கள் அடித்து துரத்தி வந்தனர். இந்த காட்சிகள் தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சில விஜய் ரசிகர்கள் கூறியதாவது…

நடிகர்களும் அவர்கள் நடிக்கும் சினிமாக்களும் எங்களுக்காகதான். ஆனால் இன்று எங்களை போன்ற ரசிகர்களை அனுமதிக்க மறுக்கின்றனர். கட் அவுட் வைக்கும் எங்களையே கெட் அவுட் என்கின்றனர்.

இசை விழாவுக்கு மறுக்கும் இவர்கள் படங்கள் வெளியாகும் நாளில் இதுபோன்று செய்வார்களா? காரணம் அவர்களுக்கு படங்கள் ஓட வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி தொடர்கின்றன. நாங்கள் தெறி படத்தை பார்க்க மாட்டோம். சம்பந்தபட்டவர்கள் இதற்கான விளக்கம் அளித்தால் அதன் பின்னர் பார்க்கலாம்” என்று கோபத்துடன் தெரிவித்தனர்.