அடுத்து ஒரு ‘காக்கிசட்டை’ பார்சல்; விஜய்சேதுபதியுடன் மீண்டும் ரம்யா


அடுத்து ஒரு ‘காக்கிசட்டை’ பார்சல்; விஜய்சேதுபதியுடன் மீண்டும் ரம்யா

ஒரு படம் வெற்றி பெற்றால் அதில் இணைந்து நடித்த நாயகன்-நாயகி அல்லது இயக்குனர்-நாயகன் அல்லது  தயாரிப்பாளர்-நாயகன் இப்படி ஏதாவது ஒரு வகையில் கூட்டணி அமைத்துக் கொண்டு அடுத்த வெற்றியை இலக்காக கொண்டு மீண்டும் இணைந்து பணியாற்றுவர். ஒரு சில நேரங்களில் அந்தக் கூட்டணிக்கு மீண்டும் வெற்றி கிட்டும். சில நேரங்களில் தோல்வியை தழுவும்.

இந்நிலையில், ’பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் இணைந்த இயக்குனரும் நாயகனும் மீண்டும் இணைக்கின்றனர்.  அப்படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை முதல் முறையாக வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியுடன்  ‘பீட்சா’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்த ரம்யா நம்பீசனும் இந்தப் படத்தில் இணைகிறார்.

அனைத்து முன்னணி கதாநாயகர்களை போல விஜய் சேதுபதிக்கும் காக்கி சட்டை மோகம் வந்து விட்டது போலும். இப்படத்தில் முதல்முறையாக ஒரு நேர்மையான போலீசாக நடிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு  தொடங்கப்படவுள்ளதாம்.

விஜய் சேதுபதி நடிப்பில்  ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘நானும் ரவுடிதான்’ போன்ற படங்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.