‘சின்ன தல’ விஜய் சேதுபதியா? அப்போ சிம்பு..?


‘சின்ன தல’ விஜய் சேதுபதியா? அப்போ சிம்பு..?

தமிழ் சினிமாவின் தனிக்காட்டு ராஜாவாக சூப்பர் ஸ்டார் இருக்கும் போதே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற பஞ்சாயத்து அடிக்கடி நடந்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன், ஒரு சிலர் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என்று பகிரங்கமாக கூறியும் வந்தனர்.

அதுபோல் ஒரு பிரபல வார இதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என பிரபல நடிகர் ஒருவரை குறிப்பிட்டிருந்தனர். ஆனால், எவரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாத நிலையில் தற்போது அடுத்த பஞ்சாயத்து தொடங்கியுள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன், விஜய் சேதுபதி போலீஸாக நடித்த சேதுபதி படம் வெளியானது. இப்படத்தை வரவேற்கும் வகையில் இவரது ரசிகர்கள் ஆங்காங்கே பேனர்கள் வைத்திருந்தனர்.

அதில் விஜய் சேதுபதியை ‘சின்ன தல’ என்றே குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தனர். அதற்கு அவர்கள் அஜித்தை போல எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் உயர்ந்தவர் விஜய் சேதுபதி. எனவேதான் நாங்கள் அவரை சின்ன தல என்று அழைக்கிறோம் என்ற ஒரு காரணத்தை கூறி வருகின்றனர்.

கடந்தாண்டு ‘வாலு’ வெளியானபோது அஜித்தின் தீவிர விசிறி என கூறிவரும் சிம்புவை அவரது ரசிகர்கள் ‘சின்ன தல’ என்று கூறிவந்தனர் என்பது இங்கே கவனித்தக்கது.