அப்பாவை போல் ‘காதல் கோட்டை’ கட்டும் விஜயலட்சுமி!


அப்பாவை போல் ‘காதல் கோட்டை’ கட்டும் விஜயலட்சுமி!

‘சென்னை 28′ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இப்படத்தினை தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’, ‘வனயுத்தம்’, ‘வெண்ணிலா வீடு’, ‘பிரியாணி’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் ‘வான்மதி’, ‘காதல் கோட்டை’, ‘கோகுலத்தில் சீதை’, ‘விடுகதை’ படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகள் என்பது தாங்கள் அறிந்ததே. தற்போது நடிகை விஜயலட்சுமிக்கு உதவி இயக்குனரான பெரோஸ் என்பவர் மீது காதல் மலர்ந்துள்ளதாம். இவர் ‘வல்லினம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இந்நிலையில் இவர்கள் காதல் விவகாரம் அறிந்த பெற்றோர் உடனே சம்மதம் சொல்லி விட்டார்களாம். விரைவில் திருமணம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

அகத்தியனின் மூத்த மகளும் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளருமான கார்த்திகா, ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் திருவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கோட்டை கட்டிய இயக்குனர் காதலை இடித்து விடுவாரா என்ன?