கௌதம் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாராவின் ‘துருவ நட்சத்திரம்’


கௌதம் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாராவின் ‘துருவ நட்சத்திரம்’

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிப்பதற்காக மற்ற படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார் ஆச்சர்ய நாயகன் விக்ரம். படம் வெளியானதை அடுத்து தற்போது மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து முடித்து வருகிறார். ’கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில்  ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க இமான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

இதனையடுத்து, ‘அரிமா நம்பி’ பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ‘மர்ம மனிதன்’ என்ற படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வந்துள்ளன. விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கவிருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கிய கௌதம் மேனன் தற்போது, சிம்பு நடிக்க ‘அச்சமென்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருவது தாங்கள் அறிந்ததே. இப்படத்தை முடித்தவுடன் விக்ரமுடன் கைகோர்க்க இருக்கிறார் கௌதம்.

ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க விக்ரம் மற்றும் நயன்தாரா முதன் முறையாக இணையும் இப்படத்திற்கு ‘துருவ நட்சத்திரம்’ எனப் பெயரிட்டுள்ளனர். இது குறித்தும் படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்தும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.