கமலின் உதவியாளர் இயக்கும் படத்தில் விக்ரம்!


கமலின் உதவியாளர் இயக்கும் படத்தில் விக்ரம்!

விக்ரம் நடித்து விஜய்மில்டன் இயக்கத்தில் உருவான ‘10 எண்றதுக்குள்ள’ படம் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தன் படத்திற்கு தயாராகி வருகிறார் விக்ரம். ‘மர்ம மனிதன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்புதிய படத்தை ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த சர்மா இயக்கவுள்ளார். இதில் விக்ரமுடன் காஜல் அகர்வால் மற்றும் பிந்து மாதவி நடிக்கின்றனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ‘கரிகாலன்’ என்ற பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வந்தார் விக்ரம். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெரும் பொருட்செலவில் தொடங்கப்பட்ட இப்படம் பல காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு வேறு ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் விக்ரம்.

இப்படத்தை ‘ராஜதந்திரம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அமித் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் ‘ராஜதந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் தற்போது இயக்குனரை மாற்றிவிட்டாராம் விக்ரம்.

சசிகுமார் நடித்த ‘பிரம்மன்’ படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இப்படத்தை இயக்குவார் என்று தகவல்கள் வந்துள்ளன. இவர் கமலின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மர்ம மனிதன்’ படத்தை முடித்துவிட்டு விக்ரம் இவருடன் பணியாற்றவிருக்கிறாராம்.