சூர்யா, ஜெயம் ரவி ரேஸில் விமல் அவுட் ஆனது ஏன்?


சூர்யா, ஜெயம் ரவி ரேஸில் விமல் அவுட் ஆனது ஏன்?

வருகிற கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிச. 24ஆம் தேதியே நிறைய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதில் பாண்டிராஜ் இயக்கியுள்ள சூர்யாவின் ‘பசங்க 2’ படம் மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூலோகம்’ படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இதே நாளில் வெளியாகும் என கூறப்பட்ட விமலின் ‘அஞ்சல’ படம் தற்போது ரேஸில் இருந்து விலக இருக்கிறதாம். இப்படத்தை வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

மஞ்சப்பை படத்திற்கு பிறகு மாப்ள சிங்கம் படத்தை நிறையவே எதிர்பார்த்தார் விமல். அது தயாராகியும் ரிலீஸ் ஆனபாடில்லை. தற்போது அஞ்சல படமும் நம்மை இப்படி அவஸ்தை படவைத்துவிட்டதே என்று சோகத்தில் இருக்கிறாராம் நாயகன் விமல்.

சமீபத்தில் அஞ்சல படத்தில் இடம்பெற்ற டீ போடு பாடல் வெளியானது. இப்பாடலில் சிவகார்த்திகேயன், ஜீவா, பாபி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட 14 நட்சத்திரங்கள் இடம்பெற்று இருந்தனர். எனவே இப்படத்தின் வரவை அதிகம் எதிர்பார்த்து இருந்தனர் ரசிகர்கள். ஆனால் படம் வெளியாவதற்குள் அந்த ‘ஸ்டார்ஸ் டீ’ ஆறிவிடும் போலவே…