நேற்று – கமல் படத்தில் சிவகார்த்தி; இன்று – ரஜினி படத்தில் விஷால்!


நேற்று – கமல் படத்தில் சிவகார்த்தி; இன்று – ரஜினி படத்தில் விஷால்!

பழைய படங்கள் மற்றும் பழைய பாடல்களை ரீமேக் செய்வது அல்லது பழைய படத்தின் டைட்டிலை பயன்படுத்திக் கொள்வது தற்போதைய டிரெண்டாகவிட்டது. அதுவும் ரஜினி பட தலைப்பை வைத்துக் கொள்வதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்கின்றனர் இன்றைய தமிழ் திரையுலகினர்.

‘கழுகு’, ‘பொல்லாதவன்’, ‘மாப்பிள்ளை’, ‘முரட்டுக் காளை’, ‘நான் மகான் அல்ல’, ‘பில்லா’, ‘தீ’, ‘தில்லு முல்லு’, ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற படங்களை தொடர்ந்து தற்போது விஷால் படத்திற்கு ரஜினி பட டைட்டிலை வைத்து விட்டனர். ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த்-ராதா நடித்த ‘பாயும் புலி’ படம்  1983ஆம் ஆண்டு வெளியானது.

சூப்பர் ஹிட்டான இப்படத் தலைப்பை தற்போது விஷால்-சுசீந்திரன் கூட்டணியின் அடுத்த படத்திற்கு பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிறார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஷால் நடிக்க இவரது அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

சமீபத்தில் கமல் பட தலைப்பான ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அப்படத்தலைப்புக்காக ஒரு பெரிய தொகையை சத்யா முவீஸிடம் தயாரிப்பாளர் தனுஷ் கொடுத்திருந்தார் என்பதும் தற்போது ஏவிஎம் தயாரிப்பு படமான ‘பாயும் புலி’ தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.