தேர்தலில் விஷால் போட்டியிட சூர்யா, ஆர்யா ஆதரவு!


தேர்தலில் விஷால் போட்டியிட சூர்யா, ஆர்யா ஆதரவு!

‘பூஜை’, ‘ஆம்பள’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். படத்தின் பெயருக்கு ஏற்றதுபோல் இவரின் நடவடிக்கைகளும் புலி பாய்ச்சலாகவே உள்ளது. திரையில் மட்டுமல்ல திரைக்கு பின்னாலும் முன்னாலும் அப்படியே நடந்தேறி வருகின்றன.

இதற்கிடையில் கடந்த மாதம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து மன்றத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். அதனை தொடர்ந்து  ‘அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ என்று மாற்றங்கள் செய்து புதிய கொடியை அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற முத்தமிழ் நாடக சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்குள்ள நாடக நடிகர்களிடம் கலந்துரையாடினார். அதன்பின்னர் அளித்த பேட்டியில் விஷால் கூறியதாவது…

“பெரிய பெரிய ஜாம்பவான்களின் உழைப்பால் உருவான நடிகர் சங்க கட்டிடம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. இதனை உருவாக்கிய எம்ஜிஆர், சிவாஜி தற்போது இருந்தால் அவர்கள் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பார்கள்.

நடிகர் சங்க இடத்தை தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட பதவியில் இருப்பவர்கள் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் நடிகர் சங்கமே கட்டிடம் கட்ட வேண்டும். இதற்கு முன் வருபவர்களை நான் வணங்கி வரவேற்பேன். அதுபோல் அங்கு திருமண மண்டபம் கட்டவேண்டும். அங்கு நாடக நடிகர்களின் வாரிசுகளுக்கு கட்டணம் பெறாமல் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கலாம்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் வரை நான் ஓயப் போவதில்லை. தாலி கட்டப் போவதுமில்லை. பதவியில் இருப்பவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் நடிகர் சங்கத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். இதைத் தவிர வேறு வழியில்லை.

கேரள நடிகர்கள் இணைந்து நடித்த படத்தில் கிடைத்த வருவாய் ரூ. 15 கோடியை கொண்டு அவர்களின் சங்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். அதேபோல் இங்கும் செய்யலாம். என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் சூர்யா, ஆர்யா, ஜீவா மற்றும் மூத்த நடிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர். நாங்கள் இணைந்து நடிக்கும் படத்தில் கிடைக்கும் வருவாயை தருகிறோம்” என்றார்.