‘இது நம்ம ஆளு’ இயக்குனருடன் இணையும் விஷ்ணுவர்தன்!


‘இது நம்ம ஆளு’ இயக்குனருடன் இணையும் விஷ்ணுவர்தன்!

‘குறும்பு’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ போன்ற தரமான படங்களை கொடுத்த விஷ்ணுவர்தனுக்கு அஜித்தின் ‘பில்லா’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ‘ஆரம்பம்’ படத்திற்காக அஜித்துடன் இணைந்தார்.

ஆர்யா, கிருஷ்ணா நடித்த ‘யட்சன்’ திரைப்படம் இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபா இருவரும் கதை வசனம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் விஷ்ணுவர்தன்.

இப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதவிருக்கிறார். மூத்த எழுத்தாளர் பாலகுமாரனுடன் பணிபுரியவுள்ளது தனக்கு பெரும் சந்தோஷத்தை வழங்கியுள்ளதாக விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

தமிழில் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியவர் பாலகுமாரன். மேலும் ‘நாயகன்’, ‘குணா’, ‘ஜென்டில்மேன்’, ‘பாட்ஷா’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவை தவிர பாக்யராஜ், ஷோபனா நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.