ஷங்கருக்காக காத்திருக்கும் ஓகே கண்மணி ரம்யா!


ஷங்கருக்காக காத்திருக்கும் ஓகே கண்மணி ரம்யா!

சில வருடங்களுக்கு முன்பு மார்க்கெட் இழந்த நடிகைகள் சிறு சிறு வேடங்களில் நடித்து ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார்கள். பின்பு அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் வாய்ப்பு கிடைத்தால் கலைச்சேவையை தொடர்வார்கள்.

ஆனால் தற்போது திருமணத்திற்கு பிறகும் ஒரு சில நடிகைகளுக்கு வாய்ப்புகள் தேடி வருவது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியர், ஜோதிகா, அமலா பால் இவர்களின் வரிசையில் தற்போது தொகுப்பாளினி ரம்யாவும் இணைந்துள்ளார். திருமணத்திற்கு முன்பு வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்து வந்த இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அப்பட வாய்ப்பு குறித்தும் தன் திரையுலக பிரவேசம் குறித்தும் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது…

“திருமணத்திற்கு முன்பு எனக்கான சினிமா வாய்ப்புகள் காத்திருந்தன. ஆனால் எனக்கு சினிமாவில் விருப்பம் இல்லாததால் மறுத்து வந்தேன். எனக்கு விவரம் தெரிந்து ரசித்து பார்த்த படம் ‘தளபதி’. அதுபோல காதல் திருமணத்தை எனக்கு புரிய வைத்த படம் ‘அலைபாயுதே’. இது போன்ற படைப்புகளால் மணிரத்னத்தின் தீவிர ரசிகையாகி விட்டேன். அப்படிப்பட்ட ஒரு சிறந்த இயக்குனரின் அழைப்பை மறுக்க மனமில்லை.

சினிமா பயணம் ஒரு வித்தியாசமான பயணம். இதில் தொடர்ந்து பயணம் செய்ய விரும்புகிறேன். என் விருப்பத்திற்கு ஏற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஷங்கர், பாலா போன்ற மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை. அவர்களின் அலைபேசி அழைப்பிற்காக எந்நேரமும் காத்திருக்கிறேன்” என்றார்.