‘சிம்புவை நாங்கள் விட மாட்டோம்…’ – நாசர்


‘சிம்புவை நாங்கள் விட மாட்டோம்…’ – நாசர்

தன்னுடைய இக்கட்டான காலக்கட்டத்தில் நடிகர் சங்கம் தனக்கு எந்த விதமான ஒத்துழைப்பையும் கொடுக்கவில்லை எனக் கூறிய சிம்பு, நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் தன் சமீபத்திய பேட்டியில் கூறியது…

“சிம்புவின் அறிவிப்பு தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மூலம் அறிந்தோம். ஆனால் சிம்பு தரப்பிலிருந்து இது குறித்து கடிதமோ செய்தியோ வரவில்லை. யூகங்கள் அடிப்படையில் எதையும் முடிவு செய்ய முடியாது.

இதற்குமுன் நடிகர் சங்கத்தில் இருந்து எந்தவொரு நடிகரும் விலகியது இல்லை. எனவே, நாங்கள் சிம்புவை அப்படி செய்ய விடமாட்டோம்.

அவரை அழைத்து எந்தவிதமான பிரச்சினை என்றாலும் கேட்டறிந்து தீர்க்க முயற்சிப்போம்.

நட்சத்திர கிரிக்கெட்டிற்கு எல்லாருக்கும் முறைப்படி அழைப்பிதழ் அனுப்பி விட்டோம். ராதிகா, சரத்குமார் இவர்களை அழைக்கவில்லை என்றால் நிரோஷா, ராம்கி, விஜயகுமார் இவர்கள் எல்லாம் எப்படி வந்தார்கள்?

நடிகர் சங்கத் தேர்தலின் போது கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மைதான். அதற்காக சங்கத்தை யாராலும் பிரிக்க முடியாது. அதுவரை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்றார்.