‘என்னை அறிந்தால்’ போலீஸ் போல ‘காக்கிசட்டை’ போலீஸ் கலக்குவாரா?


‘என்னை அறிந்தால்’ போலீஸ் போல ‘காக்கிசட்டை’ போலீஸ் கலக்குவாரா?

இந்த புத்தாண்டு முதல் காக்கி யூனிபார்ம் பற்றித்தான் பேச்சாக இருந்தது. ‘ஆம்பள’ படத்தில் விஷால், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித், ‘காக்கிசட்டை’ படத்தில் சிவகார்த்திகேயன் போன்ற படங்களில் இவர்கள் அணிந்திருந்த யூனிபார்ம் இவர்கள் ஏற்றிருக்கும் வேடம் பற்றி நமக்கு சொல்லியது.

இந்நிலையில் இரண்டு படங்கள் வந்துவிட்டன. ‘ஆம்ப’ள படத்தில் ஒரு சிலகாட்சிகளில் விஷால் காக்கி யூனிபார்ம் அணிந்து வந்தார். படத்தில் அவரின் கேரக்டர் அப்படியல்ல. ஆனால், கடந்தவாரம் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் ஏற்றிருந்தது காவல்துறை அதிகாரி வேடமே. தற்போது வரவிருக்கும் ‘காக்கிசட்டை’ படத்தில் சிவகார்த்திகேயனின் வேடமும் அதுதான்.

படத்தின் கதாநாயகர்கள் இருவரும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதுதான் இரண்டு படத்திற்குமான ஒரே ஒற்றுமை. மற்றபடி கௌதம் மேனனின் மேக்கிங் வேற. துரை.செந்தில்குமாரின் மேக்கிங் வேறு போல இருக்கும். ஆனால், கௌதம் மேனன் இதற்கு முன்னர் இயக்கிய ‘காக்க காக்க, வேட்டையாடு விளையாடு’ ஆகிய இரண்டு படங்களும் மறக்க முடியாதவை. அந்தப் படங்களின் தாக்கம் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அதிகமாகவே இருந்தது.

‘என்னை அறிந்தால்’ படம் சீரியசான கதை. ஆனால், ‘காக்கி சட்டை’ கலகலப்பான படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளதாம். ‘எதிர் நீச்சல்’ வெற்றிப் படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார்- சிவகார்த்திகேயன் கூட்டணி இதிலும் இணைவதால் இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என்கிறார் இதன் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா இருவரும் இந்தக் கூட்டணியில் இணைகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

காக்கியில் அஜித் கலக்கியது போல சிவகார்த்திகேயன் கலக்குவாரா?