‘மீண்டும் பழைய ரஜினியை பார்ப்பீர்கள்’ – ரஞ்சித் நம்பிக்கை!


‘மீண்டும் பழைய ரஜினியை பார்ப்பீர்கள்’ – ரஞ்சித் நம்பிக்கை!

முதன்முறையாக ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு. ரஞ்சித் இயக்கும் இப்படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. வருகிற ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு முரளி. எடிட்டிங்க்கு ப்ரவீன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் படத்தை ஒப்புக் கொண்டதிலிருந்தே மீடியா பக்கம் ரஞ்சித் தலை வைத்து படுப்பதில்லையாம். எங்கு சந்தித்தாலும் ரஜினி படத்தை பற்றியே கேட்க… ஏதாவது உளறி ரகசியம் வெளிவந்துவிட்டால் என்ன செய்வது என்பதால்தான் இப்படி ஒளிகிறாராம் ரஞ்சித்.

இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம் ரஞ்சித் கூறியதாவது… “எனது ‘மெட்ராஸ்’ படம் ரஜினி சாருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படத்தின் கேரக்டர்கள் ரொம்ப யதார்த்தமாக இருப்பது போன்று என்னுடைய படத்திலும் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். எனவே நாம் ரசித்த ‘முள்ளும் மலரும்’ காளியை திரையில் கொண்டு வரவிருக்கிறேன்” என்றார்.

இப்படத்தில் ரஜினியுடன் பிரகாஷ்ராஜ், தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.