சித்தார்த்தின் ‘எனக்குள் ஒருவன்’ – முன்னோட்டம்


சித்தார்த்தின் ‘எனக்குள் ஒருவன்’ – முன்னோட்டம்

ஒரு பக்கம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மறுபக்கம் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 6ஆம் தேதி அன்று 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளிவருகிறது. சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், ஆர்கே நடித்த என் வழி தனி வழி, இரவும் பகலும், மகா மகா, கனல், ரொம்ப நல்லவண்டா நீ, தொப்பி, சேர்ந்து போலாமா, இஞ்சி மொரப்பா, ஆயா வடை சுட்ட கதை உள்ளிட்ட நேரடித் தமிழ்ப்படங்கள் வெளிவர உள்ளன.

மிகுந்த எதிர்ப்பார்ப்போடு உள்ள படங்கள் வரிசையில் முன்னணியில் உள்ளது எனக்குள் ஒருவன். இப்படம் கன்னட படமான ‘லூசியா‘ படத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 110 நபர்களின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டிருந்த இப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றி கண்டது. பப்ளிக் ஃபண்டிங் (PUBLIC FUNDING) என்ற முறையையும் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் செய்தது இப்படம்.

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி போன்ற தரமான வெற்றிப் படங்களை கொடுத்த சி.வி.குமார், அவரது நிறுவனமாக திருக்குமரன் எண்டர்டெயின்ட்மெண்ட் சார்பில் தமிழில் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் சித்தார்த், தீபா சன்னதி ஆகிய இருவரும் இருவேடங்களில் நடித்துள்ளனர். நடிகை தீபா சன்னதிக்கு தமிழில் இதுவே முதல் படமாகும். ‘ஆடுகளம்’ நரேன், மேகா மற்றும் டார்லிங் படங்களில் நடித்த ஸ்ருஷ்டி, ஜான் விஜய், மகாதேவன், யோக்ஜேபி, மகேஷ், அஜய்ரத்னம் ஆகியோரும் நடித்துள்ளனர். உளவியல் சார்ந்த த்ரில்லரான இப்படத்தில் பிரசாத் ராமர் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இசை: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு: கோபி அமர்நாத், எடிட்டிங்: லியோ ஜான்பால்.