‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ -முன்னோட்டம்


‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ -முன்னோட்டம்

பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சேரன். தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து தேசிய விருதுகளை தட்டிச் சென்றார். முன்னணி இயக்குனராக பின்பு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

இந்நிலையில், தான் தயாரித்து இயக்கிய “ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை” என்ற படத்தை வெளியிட முடியாமல் தவித்து வந்தார். விஸ்வரூபம் பட ரிலீஸின்போது கமல்ஹாசன் கையாளவிருந்த புதிய வழிமுறையை தனது படத்திற்காக கையில் எடுத்தார் இயக்குநர் சேரன்.

புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடாமல், டி.வி.டி.மூலம் வீடுதோறும் விற்பனை செய்யும் ஒரு புதிய திட்டத்தை அவர் தொடங்கியிருக்கிறார். ‘சினிமா டூ ஹோம்’ என்ற இந்த திட்டம் டி.டி.எச், இண்டர்நெட், கேபிள் டி.வி. உள்பட பல வழிகளில் புதுப் படங்களை வீடுதோறும் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் தயாராகி உள்ளது. இதில் 154 வினியோகஸ்தர்கள், 5 ஆயிரம் முகவர்கள் இருக்கின்றனர். மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணம் செலுத்தி டி.வி.டியில் படம் பார்க்கலாம்.

‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்துள்ள “ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை” படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது, ஜனவரி 30ஆம் தேதி இந்த திட்டத்தின் வழியே இப்படத்தை வீட்டிலேயே பார்க்கும் வகையில் வெளியிட இருக்கிறார் சேரன். கிட்டத்தட்ட 50 லட்சம் டி.வி.டி.கள் தயார் நிலையில் உள்ளன.

இதனையடுத்து, ‘அர்ஜுனன் காதலி’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘வாராயோ வெண்ணிலாவே’, ‘அப்பாவின் மீசை’ உள்ளிட்ட படங்களை இந்த திட்டத்தின் வழியே ரிலீஸ் செய்ய இருக்கிறார் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது.