சண்டமாருதம் – பட முன்னோட்டம்


சண்டமாருதம் – பட முன்னோட்டம்

முழு நேர அரசியல்வாதியாகவும், கட்சி தலைவராகவும், நடிகர் சங்க தலைவராகவும் மாறி விட்ட சரத்குமார், நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பாக மிகுந்த பொருட்செலவில் R. சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் உருவ ஒற்றுமை, அப்பா – பிள்ளை போன்ற இரு வேடங்கள் இல்லாமல் வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை இப்படத்தில் ஏற்றிருக்கிறார் சரத்குமார். இது மட்டுமின்றி இப்படத்தில் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார்.  இவர் நடித்த மகாபிரபு படத்தின் முலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.வெங்கடேஷ் இப்படத்தை இயக்குகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதியிருக்கிறார்.

இப்படத்தில் சரத்குமாருடன் ஓவியா, மீராநந்தன் என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். இத்துடன் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும்  ராதாரவி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, வெண்ணிற ஆடை மூர்த்தி, நரேஷ், ஆதவன், சிங்கம்புலி,  நளினி, கானா உலகநாதன், டெல்லி கணேஷ், மோகன்ராமன், காதல் தண்டபாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் ஒரு வில்லனாக பெங்களூரைச் சேர்ந்த அருண்சாகர் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் குறித்து சரத்குமார் கூறுகையில், “வருகிற பிப்ரவரி 20-ந் தேதி திரைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 250 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. சென்னை நகர வினியோக உரிமையை ‘கலைப்புலி’ எஸ்.தாணு வாங்கியிருக்கிறார். மும்பை, டெல்லி மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் படம் திரையிடப்படுகிறது. வெளி மாநிலங்களில் மட்டும் 100 தியேட்டர்களில் படம் திரையிடப்பட உள்ளது. ஒரு வாரம் கழித்து ஆந்திராவில் படம் வெளியிடப்படும்,” என்றார்.

இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறுகையில், “பணம்…பணம்…என்று அதைத் தேடி அலையும் வில்லனையும், அவனுக்கு எதிராக களம் இறக்கிவிடப்படும் ‘என்கவுன்டர்’ போலீஸ் அதிகாரியையும் பற்றிய கதை இது. ‘சண்டமாருதம்’ என்றால் புயலை மிஞ்சிய காற்று என்று அர்த்தம். புயல் போன்ற வில்லனையும், அவனைத் தாண்டிய போலீஸ் அதிகாரியையும் கதை சித்தரிக்கிறது.

25 வருடங்களுக்குப்பின், இந்த படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.