சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘காக்கி சட்டை’ – பட முன்னோட்டம்


சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘காக்கி சட்டை’ – பட முன்னோட்டம்

‘எதிர்நீச்சல்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ்-சிவகார்த்திகேயன்- அனிருத்-துரை செந்தில்குமார் என இவர்களின் கூட்டணி தற்போது ‘காக்கி சட்டை’ படத்திற்காக இணைந்துள்ளது.

இந்தக் கூட்டணியில் சிவகார்த்திகேயனின் ராசியான ஜோடி ஸ்ரீதிவ்யாவும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை காதல், காமெடி கலந்த கேரக்டரில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து, முழுக்க ஆக்ஷனில் கலக்கி இருக்கிறாராம்.

சமீபத்தில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன் கூறியதாவது…  “காக்கி சட்டையை அணிந்ததும் என் அப்பா ஞாபகம் வந்தது. நான் ஐ.பி.எஸ். படித்து பெரிய போலீஸ்காரனாக வரவேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. இப்படத்தில் நான் போலீஸ்காரராக நடித்ததன் மூலம் ஒரு சிறிய மனதிருப்தி கிடைச்சிருக்கு. ‘காக்கி சட்டை’யில் என்னை பார்த்த என் அம்மாவுக்கும் அப்பாவுடைய நினைவுகள் நிச்சயமாக வந்திருக்கும். ஆனால் அவர் என்னிடம் கூறாவிட்டாலும், ஒரு தாயை என்னால் புரிந்து கொள்ளமுடியும்” என்று கண்கலங்கிய படி கூறினார்.

சிவகார்த்தி-ஸ்ரீதிவ்யா ஜோடியுடன் பிரபு, மனோபாலா, இமான் அண்ணாச்சி, மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நா. முத்துக்குமார், யுகபாரதி, அருண் ராஜா காமராஜ், ஆண்டனி தாசன் உள்ளிட்டோர் எழுதிய இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கலக்கி வருகிறது என்பது தாங்கள் அறிந்ததே.

வருகிற 27-ஆம் தேதி ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை வெளியிடுகிறார். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்  வெளியாக உள்ளது.  ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படத்திற்கும் உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளதாக படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் நடித்த ‘காக்கி சட்டை’ படம் 1985 ஆம் ஆண்டு சத்யா மூவிஸ் படத்தை வெளியிட்டிருந்தது. எனவே, இதே பெயரை மீண்டும் பயன்படுத்துவதற்கு பல லட்சங்கள் கொடுக்கப்பட்டதாக படக்குழுவினர் கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.