எது கிடைக்க எதை அழுத்த வேண்டும்? ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ – பட முன்னோட்டம்


எது கிடைக்க எதை அழுத்த வேண்டும்? ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ – பட முன்னோட்டம்

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் சரவணன். இவரின் உதவியாளர் ராம்பிரகாஷ் ராயப்பா  ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற பெயரிடப்பட்ட படத்தை தற்போது இயக்கியுள்ளார். செல்போன் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் ஒலிக்கும் பெண்ணின் குரலையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில்… அதனை பற்றி செய்தி ஒன்றை அழுத்தி (மன்னிக்கவும்) பதிவு செய்கிறோம்.

‘அட்டகத்தி’ தினேஷ்,  நகுல், பிந்து மாதவி மற்றும் புதுமுகம் ஐஸ்வர்யா தத்தா,  ஊர்வசி, மனோபாலா மற்றும் சதீஷ் நடித்துள்ள இப்படத்தை  உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. காதல், ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த ஒரு கமர்ஷியல் படமாக தயாராகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் தீபக் குமார் பாண்டே.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் டைட்டிலை முன்னிலைப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. எது கிடைக்க எதை அழுத்த வேண்டும்? என்பதை சூத்திரமாக கொண்டு அவர் எழுதியுள்ள பாடலின் சில வரிகள் இதோ…

அலைவரிசை மாற்றவே
தொலை இயக்கி அழுத்தவும்!

தலை எழுத்தை மாற்றவே –
உன் மூளையை நீ அழுத்தவும்!

வேகத்தை எடுக்க
முடுக்கியை அழுத்து!
நியாயத்தை உரைக்க
சொற்களை அழுத்து!   
என்று தொடங்கும் இந்தப் பாடல், இறுதியாக…

புகழுக்கு உன் இன்றை அழுத்தவும்!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்!  என்று முடிகிறது.

(இப்பவாச்சும் டைட்டில் புரிஞ்சுதா? எங்கள போய் தப்பா நினைச்சிட்டீங்களே பாஸ்..??)