என்னை அறிந்தால் – திரை விமர்சனம்

இந்தப் புத்தாண்டு நள்ளிரவு முதல் அஜித்தின் என்னை அறிந்தால் ஃபீவர் தொற்றிக் கொண்டது. படம் எப்போது வரும்? எப்படி இருக்கும்? அஜித் ஆக்டிங் எப்படி? என்ற பல கேள்விகளுக்கு இன்று விடை தெரிந்து விட்டது. கௌதம் மேனனின் வழக்கமான பார்முலாவோடு கதை நகர்கிறது. அவரது முந்தைய படங்களில் உள்ள நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான ப்ளாஷ்பேக் இருக்கும். அந்த விதியின்படியே இப்படத்தையும் ஆனால், ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார்.

சத்யதேவ்வின் (அஜித்) சகபயணியாக விமானத்தில் பயணிக்கிறார் தேன்மொழி (அனுஷ்கா). பார்த்தவுடனே அஜித்தின் மேல் காதல் கொள்கிறார். இருவரும் சென்னை திரும்பி ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்கிறார்கள். இவர்களை ஒரு கும்பலுடன் தாக்க வருகிறார் விக்டர் (அருண்விஜய்). அஜித்தை தாக்க வரவில்லை அவர்கள் தன்னை தாக்கவந்தனர் என்பதை பின்னர் அறிகிறார் அனுஷ்கா. எதற்காக தன்னை தாக்க வருகிறார்கள்? என்ற அனுஷ்காவின் கேள்விக்கு அஜித் சொல்லும் ப்ளாஷ்பேக்தான் கதை.

தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்து, பின்னர் ஐபிஎஸ் ஆக உருவாகும் சத்யதேவ் ரகசிய போலீஸாக இருந்து, ரவுடி கும்பலைச் சேர்ந்த அருண்விஜய்யுடன் நட்புகொள்கிறார். ஆனால், காத்திருந்த அஜித் அந்த ரவுடி கும்பலை போட்டுத்தள்ளுகிறார், அருண்விஜய் மட்டும் தப்பிக்கிறார்.

இதற்கிடையில், ஒரு என்கவுண்டருக்காக செல்லும் அஜித் நாட்டிய பேரொளி ஹேமாநிக்கை (த்ரிஷா) சந்திக்கிறார். இவர்கள் சந்திக்கும் முதல்காட்சியிலேயே நிறைமாத கர்ப்பிணியான த்ரிஷா ஒரு பெண் குழந்தையை பிரசவிக்கிறார். இரண்டு வருடங்கள் கழித்து, மீண்டும் சந்திக்கின்றனர். கணவர் இல்லாத த்ரிஷா மீது காதல் கொள்கிறார் அஜித். நான்கு வருடங்களாக உயிருக்கு உயிராக காதலிக்கும் இவர்கள் 6 வயது குழந்தை ஈஷாவின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவுசெய்கின்றனர்.

இந்நிலையில் த்ரிஷா, ரவுடி கும்பலால் கொல்லப்பட குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு போலீஸ் வேலையில் இருந்து விலகி வாழ்கிறார் அஜித். ஒருநாள், நண்பரின் மகள் அதே ரவுடி கும்பலால் கடத்தப்பட நண்பருக்கு உதவி செய்ய போய், அனுஷ்காவும் அவர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட இருப்பதை அறிகிறார். அந்த கும்பலிடம் இருந்து அனுஷ்காவையும் காப்பாற்றினாரா? குழந்தையின் நிலைமை என்ன ஆனது? அருண்விஜய் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இது வழக்கமான அஜித்படம் என்று நம்பி செல்பவர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால், அஜித்தின் கேரியரில் இந்த படம் சற்று வித்தியாசமானதுதான். மாஸ் ஹீரோவான அஜித்திற்கு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான அறிமுகம். ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி, ஒரு கேங்ஸ்டர், ஸ்மார்ட்டான காதலன், அன்பான அப்பா என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

நிறைய சென்சார் செய்யப்பட்ட கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். வெறும் உதட்டசவை வைத்தே தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார் அஜித்.

இப்படியே ஸ்மார்ட்டா ஆகிட்டே இருந்தா நாங்க என்ன பண்றது? என்று த்ரிஷா அஜித்திடம் கேட்பது உண்மைதான். அஜித் படு ஸ்மார்ட்டாகவே வருகிறார். ஆனால், அருண்விஜய் அஜித்திடம் பேசும்போது, என்ன ‘தல’முடி எல்லாம் நறைச்சு போச்சு என்று கிண்டலடிக்கும் காட்சிகளை அஜித்தை தவிர எந்த ஹீரோவும் அனுமதிக்க மாட்டார்கள்.

த்ரிஷா அமைதியான நடிப்பில் அழகாக நடித்திருக்கிறார். நாட்டிய மங்கையாக, ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தும் அஜித் மீது காதல் கொள்ளும் காட்சிகளில் சபாஷ் பெறுகிறார். ‘மழை வரப் போகுதே…’ பாடல் காட்சியில் த்ரிஷா என்றும் அழகுதான் என்று நம்மை சொல்லவைக்கிறார். (ஒளிப்பதிவாளருக்கு நன்றி) அனுஷ்கா பாத்திரமறிந்து நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்துடன் ரிவால்வர் ரிச்சர்ட் ஆக இணையும் விவேக் சீரியஸான படத்தில் தன் நகைக்சுவையை ஆங்காங்கே லேசாக தெளித்து இருக்கிறார்.

தன் படத்தில் வேறு ஒரு ஹீரோவுக்கு யாரும் இந்த அளவிற்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். ‘மங்காத்தா’ படத்தில் அர்ஜூன், ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யா போல இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு சமவாய்ப்பளித்துள்ளார் அஜித். அவரும் இதுநாள் வரை தராத நடிப்பை இந்தப் படத்தில் மொத்தமாக தந்திருக்கிறார். நண்பன் என்று நினைத்தவனே தனக்கு துரோகம் செய்து விட்டானே என்று அஜித்தை போட்டுத்தள்ள துடிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இவரின் காதல் மனைவியாக வந்து செல்லும் பார்வதி நாயரும் ‘வில்லன் மனைவியும் வில்லி’தான் என, தன்பங்கை நன்றாக செய்துள்ளார்.

த்ரிஷா மகளாக நடித்திருக்கும் அந்த குழந்தை, நாசர், ஸ்டண்ட் சில்வா, ஆசிஷ்வித்யார்த்தி, சுமன், டேனியல் பாலாஜி மற்றும் செல்முருகன் போன்றோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.

தாமரை மற்றும் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில், ஹாரிஸ் ஜெய்ராஜ்ஜின் இசை வழக்கம் போல உள்ளது. ‘அதாரு.. அதாரு…’ பாடல் ஆட்டம் போட வைக்கும் ரகம். ‘இதயத்தில் ஏதோ ஒன்று… பாடலில் ஒளிப்பதிவை பேச வைத்திருக்கிறார் டான் மெகதூர். இசை படத்திற்கு பலம் என்றாலும் அஜித்துக்குரிய அதிரடி இசை இல்லை.

கௌதம் மேனன் படம் என்றால் ‘ஸ்டைலிஸான க்ளாஸ்’ படம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். சில காட்சிகள் ‘வேட்டையாடு விளையாடு’ கமலையும், ‘காக்க காக்க’ சூர்யா-ஜோதிகா-ஜீவன் போன்ற கேரக்டர்களையும் நினைவுபடுத்துகின்றன. கதை சொல்லும் அந்தக் குரல்கள் இவரது பழைய படங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.  இனி வரும் படங்களில் இதை தவிர்க்கலாமே கௌதம் சார். முதல் பாதியில் மெதுவாக செல்லும் கதை, இரண்டாம் பாதியில் சூடு பறக்கச் செய்கிறது.

மொத்தத்தில் என்னை அறிந்தால் படம் அனைவரையும் கவரும்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்