அனேகன் – திரை விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் அனேகன். ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சைக்லாஜிக்கல் த்ரில்லர் கதையம்சத்தில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கதை சுருக்கம்

ஹீரோயின் அமைரா, ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவராக அறிமுகமாகிறார். திடீரென்று அவருக்கு முன்ஜென்ம ஞாபகம் வர, அதில், பர்மாவில் உள்ள ஏழை இளைஞனாக தனுஷ் வருகிறார். சந்திக்கும் நாயகன் நாயகி இடையே காதல் வராமல் இருக்குமா? காதலும் வருகிறது, ஆனால், தோல்வியில் முடிகிறது.

இதன்பின்னர், நவரச நாயகன் கார்த்திக் பாஸாக இருக்கும் அலுவலகத்தில், தனுஷ் வேலைக்கு சேர்கிறார். ஹீரோயின் வேலை பார்க்கும் அதே கம்பெனியில். அமைரா சொல்லும் கதையை யாரும் நம்பாமல் இருக்கிறார்கள். மீண்டும் மற்றொரு கதை தொடங்குகிறது.

இதுதான் சென்னை தனுஷ். சென்னையில் பிறந்து வளர்ந்த தனுஷ் ச்சும்மா இருப்பாரா? இந்தக் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். இந்த எபிசோட் தான் படத்தின் ஹைலட். ஆனால், இதிலும் காதல் கைகூடாமல் முடிகிறது . இந்த மேற்பட்ட கதைகள் எல்லாவற்றையும் ஒட்டவைத்து ஒரு அதிரடி க்ளைமேக்ஸ் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

தனுஷ், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கதையிலும், நன்றாகவே தன் சிகை அலங்காரம் கொண்டு வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். அதே நேரத்தில் சென்னை இளைஞனாக கலக்கியிருக்கிறார்.

அடுத்து, நவரச நாயகன் கார்த்திக் சார். அவருக்கு நடிப்பு சொல்லித் தரவா வேண்டும். மனிதர் பழைய எனர்ஜியோடு புகுந்து விளையாடியிருக்கிறார். குறிப்பாக ஹீரோயினிடம் கதை கேட்கும் தருணத்தில் செமயான எக்ஸ்பிரசன்ஸ்.

அனேகன் படம் பார்த்த, அநேக பேரின் பேச்சு கண்டிப்பாக கதாநாயகி அமைராவைப் பற்றித்தான் இருக்கும். புதுமுகம் என்று ஒரு இடத்தில் கூட சொல்லமுடியாதபடி தன் நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவரை தமிழ் சினிமா பயன்படுத்தி கொள்வது நல்லது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் டங்கா மாரி பாடலில் தியேட்டரே ரசிகர்களின் ஆட்டத்தில் அதிர்கிறது. இந்தப் பாடலை பாடிய ‘மரணகானா’ விஜிக்கு இனி வாய்ப்புகள் வாசல் தேடிவரும். மற்ற பாடல்களும் படமாக்கப்பட்ட விதம் நன்றாக உள்ளது. சுபா அவர்களின் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம் எனலாம். படத்தின் ஒளிப்பதிவும் மிகவும் அழகாக வந்துள்ளது. படத்தின் லொக்கேஷன் ஹாலிவுட் தரத்தில் உள்ளது.

இயக்குனரின் திரைக்கதை கொஞ்சம் தடுமாற்றம் தெரிகிறது, எல்லோருக்கும் இப்படம் புரியுமா? என்றால் சந்தேகம் தான். புரியும்படியாக கொடுக்கவில்லை என்பதே உண்மை. சில நீளமான காட்சியமைப்புகளை குறைத்திருக்கலாம்.

அனேகன் – தன்னை புரிந்தவர்களை எளிதாக கவரக்கூடியவன்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்