பாகுபலி சினிமா விமர்சனம்

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பிரம்மாண்டமாக படம் என்ற எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது ‘பாகுபலி’. படத்தின் எதிர்பார்ப்பு அதை விட பிரம்மாண்டமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்தாரா இயக்குனர் ராஜமௌலி என்பதை பார்ப்போம்…

கதைக்களம்…

நாம் அடிக்கடி பார்த்த போஸ்டர்தான் படத்தின் ஆரம்ப காட்சி. கையில் குழந்தையுடன் தவிக்கும் ரம்யா கிருஷ்ணன். நீர்வீழ்ச்சியை கடக்கும்போது தன் உயிரை மாய்த்து குழந்தையை காப்பாற்றுகிறார். அக்குழந்தையை எடுத்து வளர்க்கும் தாயாக ரோகிணி மற்றும் அம்புலி கிராம மக்கள்.

அந்தக் குழந்தை பிரபாஸ் வளர்ந்து பெரியவனாகிறார். 100 அடிக்கும் மேல் உள்ள நீர் மலைமீது ஏறி அங்கு என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறார். அங்கு செல்லும் பிரபாஸ் தமன்னாவை சந்தித்து காதல் கொள்கிறார். அப்போது மகில்மதி என்ற நகரத்தில் அடிமையாக அனுஷ்காவை காப்பாற்ற வேண்டும் என தமன்னா கூறுகிறார். அங்குள்ள மன்னர் ராணா டகுபதி, அவரது தந்தை நாசர், படைத்தளபதி சத்யராஜ் இவர்களிடமிருந்து அனுஷ்காவை காப்பாற்றுகிறார்.

இந்நிலையில் அங்குள்ளவர்கள் பிரபாஸை பாகுபலி என்றழைக்கின்றனர். அப்படியென்றால் இவர் யார்? இவருக்கும் பாகுபலிக்கும் என்ன சம்பந்தம்? என்று ப்ளாஷ்பேக் தொடர்கிறது….

கதாபாத்திரங்கள்..

இப்படத்தில் நடித்துள்ள எவரையும் எளிதாக கூறிவிட முடியாது. ஒவ்வொருவரும் நடிக்காமல் கதாபாத்திரமாக மாறி மிரட்டியுள்ளனர். அதில் முதல் இடம் பெறுகிறார் நாயகன் பிரபாஸ்.

படத்தின் ஆரம்ப காட்சிகளில் பிரபாஸ் மலையேறும் காட்சிகள் பார்ப்பவர்களை நிச்சயம் பரவசப்படுத்தும். அவர் கீழே விழுந்து விடுவாரோ? என்ற பதட்டம் நிச்சயம் உங்களை தொற்றிக் கொள்ளும். மலையேறும் காட்சி முதல் காதல் காட்சிகள், போர்களக் காட்சிகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. சிவலிங்கத்தை சுமக்கும் காட்சிகள் உட்பட… நல்ல உடற்கட்டுடன் தோன்றி ஒரு போர்வீரனாய் ஜொலிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் மெய்சிலிர்க்க வைக்கிறார். இவர் மட்டும்தான் நடிப்பாரா? என போட்டி போட்டு நடித்திருக்கிறார் ராணா. பிஜூ பல்லவதேவனாக மன்னர் காட்சியிலும், இளவரசர் காட்சியிலும் கண்களில் வில்லத்தனம் தெறிக்க நடித்திருக்கிறார். இருவரும் நடிப்பில் சபாஷ் சரியான போட்டி ரகம்.

தமன்னா காதல் தேவதையாகவும் ஆக்ரோஷ பெண்ணாகவும் மாறி மாறி அசத்தியுள்ளார். நீர்வீழ்ச்சியில் இவர் தோன்றும் காட்சியில் அருவியை ரசிப்பதா? அழகை ரசிப்பதா? என் கன்ப்யூஸ் செய்கிறார். அனுஷ்காவுக்கு பாகுபலி முதல் பாகத்தில் நடிக்க வாய்ப்பில்லை. இருந்தபோதிலும் இதில் அவரின் அறிமுக காட்சி அசத்தல்.

இவர்களை போல் படத்தின் மற்ற கலைஞர்கள்… ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர்… நடிப்பில் தேர்ந்த இவர்களுக்கு இதுஒரு சாதாரண விஷயம்தான். அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணனுக்கு இது அடுத்த நீலாம்பரி. படத்தில் அவரது மேக்கப்பும் அதனை நினைவுபடுத்துகிறது. சத்யராஜ் படைத்தளபதியாக கண்களில் நிற்கிறார். காலகேயனாக நடித்திருக்கும் பிரபாகர், ரோகினி, சுதீப் என இவர்களைப்போல் ஒவ்வொருவரும் தன் பாத்திரம் அறிந்து பணியாற்றியுள்ளனர்.

மரகதமணியின் இசையில் படத்தின் பாடல்கள் பெரிதாக ரசிக்கும்படியில்லை. அச்சமயம் ரசிகர்களை தியேட்டர் கேண்டீனில் பார்க்க முடிகிறது. ஆனால் பிரபாஸ், தமன்னா டூயட் பாடல் மற்றும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும் அந்த பனிமலை சறுக்கல் காட்சிகள்… ஹாலிவுட்டுக்கு சவால் விட்டுள்ளன. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.

இப்படி ஒரு பிரம்மாண்டத்தை நிச்சயம் கலை இயக்குனர் இல்லாமல் கொடுக்க முடியாது. அரண்மனை, பனி சறுக்கல், அருவி, சிவலிங்கம், போர் ஆயுதங்கள், ஆடை அணிகலன்கள் என ஒவ்வொன்றையும் தத்ரூபமாக கண்களுக்கு விருந்தளித்துள்ளார் சாபு சிரில். ஹேட்ஸ் ஆஃப்.

போர்க்களத்தில் பயன்படுத்தும் யுக்திகள் சபாஷ் ரகம். போருக்கு தயாராவது எப்படி? எதிரியை எதிர்கொள்வது என ஒவ்வொரு காட்சியிலும் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. இயக்குனர் ராஜமௌலியும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். ஆனால் ஒரு குத்து பாடல் தேவையா என்று கேட்க தோன்றுகிறது. முதல் பாதியில் ஒரு சில நொடிகள் படம் நீள்கிறது. குறைத்திருக்கலாம். இப்படி ஒரு பிரம்மாண்டத்திற்கு ஒரு முற்றிலும் புதுமையான கதையை கொடுத்திருக்கலாம்.

இத்தனை கலைஞர்களை கையாண்ட விதம் மிக அருமை. ‘பாகுபலி’ போல் இயக்குனரும் உயர்ந்து நிற்கிறார். ஒரு படம் வெற்றி பெற்றால்தான் இரண்டாம் பாகம் வெளிவரும். ஆனால் தன் உழைப்பின் மீது முழு நம்பிக்கை வைத்து இரண்டு பாகங்களை இயக்கிய ராஜமௌலிக்கு ஒரு சல்யூட்.

படத்தின் க்ளைமாக்ஸில் சத்யராஜ்தான் மன்னரை கொன்றார் என்பதுடன் முடியும் ட்விஸ்ட் செம.!

மொத்தத்தில் ‘பாகுபலி’ – பிரம்மாண்டத்தின் பலே… பலே…

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்