பெங்களூர் நாட்கள் விமர்சனம்

அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீமேக் இது. மலையாளத்தை போன்று தமிழிலும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அந்த நட்சத்திரங்களுடன் நாமும் பெங்களூர் சென்று பார்த்து வருவோமா…?

நடிகர்கள் : ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, ராய் லட்சுமி, பார்வதி, பிரகாஷ்ராஜ், சரண்யா, எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
ஒளிப்பதிவு : கே வி குகன்
படத்தொகுப்பு : மார்தாண்ட் கே வெங்கடேஷ்
இயக்கம் : பொம்மரிலு பாஸ்கர்
தயாரிப்பாளர் : பிரசாத் வி பொட்லுரி

கதைக்களம்..

பெற்றோர்கள் விவகாரத்து பெற்றதால் ஆதரவின்றி இருக்கும் ஆர்யா, ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பாபி சிம்ஹா, திருமணம் ஆனாலும் எம்பிஏ படிக்க ஆசைப்படும் ஸ்ரீதிவ்யா ஆகிய மூவரும் உறவுக்காரர்கள். சிறுவயது முதலே பெங்களூர் சென்று ஜாலியாக வாழவேண்டும் என்பது இவர்களின் ஆசை.

ராணாவை திருமணம் செய்யும் ஸ்ரீதிவ்யா பெங்களூரில் வசிக்கிறார். எனவே ஆர்யாவும் பாபி சிம்ஹாவும் அங்கு வேலை தேடி செல்கிறார்கள். இதன்பின்னர் ராணாவுக்கு சமந்தா என்றொரு காதலி இருந்தார் எனத் தெரிய வருகிறது. அதன்பின்னர் ஸ்ரீதிவ்யாவுக்காக ஆர்யா, பாபி என்ன செய்தார்கள்? என்பதே இப்படத்தின் நீளமான கதை.

கதாபாத்திரங்கள்…

நிறைய நட்சத்திரங்கள் இருப்பதால் படத்தின் காட்சிகளை போல நீ…ட்டாமல் ஸார்ட்டாக சொல்லி விடுகிறோம். ஆர்யா, பாபி, ஸ்ரீதிவ்யா இந்த மூவர்களைப் பார்க்கும்போது இப்படி உறவு நமக்கு கிடைக்காதா? என்று நிச்சயம் ரசிகர்கள் ஏங்குவார்கள்.

குடும்ப உறவு என்ற இந்த அழகான உறவை கலகலப்பாக கொண்டுச் செல்ல ஆர்யா ரொம்பவே முயற்சித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாத நடிப்பாக இருந்தாலும் பாபி சிம்ஹாவின் நடிப்பில் யதார்த்தம் கொஞ்சம் குறைவே. ஸ்ரீதிவ்யாவின் குறும்பான நடிப்பு கைகொடுத்திருக்கிறது. உறவாக இருந்தாலும் நட்புக்காக செய்யும் இவர் செய்யும் ஒவ்வொன்றும் இவரைப் போலவே அழகு.

ரேஸ் காட்சிகளில் அசத்தும் ராணா, குடும்ப பாத்திரத்தில் பொருந்த மறுக்கிறார். சமந்தாவுக்கு காட்சிகளிலும் நடிப்பிலும் பெரிதாக வேலையில்லை. ராய் லட்சுமி, சில காட்சிகளில் ராவான சரக்கை போல போதையூட்டுகிறார்.

இவர்களில் அதிகம் ஸ்கோர் செய்பவர் ஆர்ஜே.வாக வரும் பார்வதிதான். இவரின் நடிப்பை மற்றவர்கள் கொடுக்கமுடியாது என்பதால்தான் இந்த ரீமேக்கிலும் இவரை ஒப்பந்தம் செய்தார்களோ என்னவோ? தன்னுடைய கேரக்டருக்கு மேலும் அழகூட்டியிருக்கிறார்.

இடைவேளைக்கு பின்னர் சரண்யா பொன்வண்ணன் மாடர்ன் ஆன்ட்டியாக வந்து கலகலப்பூட்டியிருக்கிறார். மகளை இழந்த தந்தையாக பிரகாஷ்ராஜ் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் வந்து செல்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மாங்கல்யம் தந்துனானே பாடல் தாளம் போட வைக்கும். மாட்டிக் கொண்டேன் பாடல்வரிகள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் மாட்டிக் கொள்ளும். ஆனால் பைக் ரேஸ் காட்சியில் பொருந்தாத பின்னணி இசை. மிரட்டல் இல்லை.

குகனின் ஒளிப்பதிவில் குடும்பம், நட்பு என அனைத்து உறவுகளும் கலர்புல்லாக இருக்கிறது. மார்தாண்ட் கே வெங்கடேஷ் மட்டும் தன் கட்டிங் வேலைகளில் இன்னும் செய்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படியாக வந்திருக்கும்.

படத்தின் ப்ளஸ்…

  • நட்பினை கொண்டாடும் உறவுகள்..
  • தமிழுக்கு புதுமையான அனுபவம்
  • கலர்புல்லான கதாபாத்திரங்கள்..

படத்தின் மைனஸ்…

  • இரண்டாம் பகுதி இழுவை
  • நாடகத்தன்மை காட்சிகள்
  • பைக் ரேஸ் காட்சியில் பின்னணி இசை
  • வாய்ஸ் ஓவர் குரல் பொருந்தவில்லை

வில்லத்தனமே இல்லாத அருமையான கதைக்களம். கணவன் மனைவி புரிதலே குடும்பத்தின் வெற்றி என அருமையான குடும்ப படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர். ஆனால் இரண்டாம் பகுதி நிச்சயம் பொறுமையை சோதிக்கும்.

நிறைய நட்சத்திரங்கள் இருப்பதால் ஒவ்வொருவருக்கும் ஒரு சின்ன ஸ்டோரி சொல்ல வேண்டிய கட்டாயம் அடிக்கடி தெரிகிறது. ஒரிஜினலைப் பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் தரலாம்.

மொத்தத்தில் ‘பெங்களூர் நாட்கள்’… இளமையான நினைவுகள்!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்