பூலோகம் விமர்சனம்

தனி ஒருவன் தந்த வெற்றியால் தனித்து காணப்படுகிறார் ஜெயம் ரவி. எனவே, நீண்ட நாட்களாக இந்த பூலோகம் கிடப்பில் இருந்த பூலோகத்தை தனி ஒருவனை நம்பி களம் இறக்கியிருக்கிறார் தயாரிப்பாளர். படம் எப்படி என்பதை பார்ப்போம்..

நடிகர்கள் : ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், நாராயணன், நாதன் ஜோன்ஸ், அர்பித் ரங்கா, பொன் வண்ணன், சண்முகராஜன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : எஸ் ஆர் சதீஷ்குமார்
இயக்கம் : வி. டி. விஜயன்
இயக்கம் : என். கல்யாண கிருஷ்ணன்
தயாரிப்பாளர் : ஆஸ்கர் ரவிச்சந்திரன்

 

கதைக்களம்….

பல வருடங்களுக்கு முன்னால் இருந்தே பரம்பரை பரம்பரையாக குத்து சண்டை இடுகின்றனர் இரு பிரிவினர். பின்னால் அதுவே ஒரு தீரா பகையாக மாறுகிறது. இதில் ஜெயம் ரவியின் தந்தை குத்து சண்டையில் தோற்றதால் தற்கொலை செய்து கொள்கிறார்.

பின்னர் வளரும் நாயகன் எதிரியின் மகனை வெல்கிறார். ஆனால் தன்னால் தோற்ற அந்த வீரர் உயிருக்கு போராடுவதால் குத்து சண்டைக்கு விடை கொடுக்கிறார் நாயகன்.

இதனிடையில் ஜெயம் ரவியை வைத்து மார்க்கெட் செய்து தன் டிவியை பிரபலமாக்க நினைக்கிறார் டிவி சேனல் ஓனர் பிரகாஷ்ராஜ். இதனால் தடை செய்யப்பட்ட ஒரு குத்து சண்டை வீர்ரை இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்திய குடிமகனை தோற்கடிக்க நினைக்கிறார். இதனால் வெகுண்டெழும் நாயகன் பூலோகம் என்ன செய்கிறார்? என்பதை படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

ஜெயம் ரவியின் பெயர்தான் பூலோகம். பெயருக்கு ஏற்றார் போல் அந்த ஏரியாவே இவரை நம்பிதான் இருக்கிறது. மற்றவர்களுக்கு என்ன வேலை என்று தெரியவில்லை.(???)

ஜெயம் ரவியின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. குத்து சண்டை யூனியனுக்காக போராடுவதும், மக்களுக்கு தேவையான கருத்துக்களை கூறுவதும் நச் காட்சிகள்.

பிரகாஷ்ராஜ் போன்ற மீடியா முதலாளிகள் ஒரு விளையாட்டை எப்படி வியாபாரம் செய்கின்றனர்? அவர்கள் கோடிக்கணக்கில் லாபம் பெறுவதும், பணத்தாசை பிடித்து அலைவதும் அப்பட்டமாக காட்டியிருக்கின்றனர்.

இவரின் ஜோடியாக த்ரிஷா… பெரிதாக வேலை இல்லை. மார்பு, தொடை ஆகிய இடங்களில் டாட்டூஸ் போட்டு கொஞ்சம் சூடேற்றுகிறார். பாடல் கூட இல்லையே ஏன்?

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சண்முகநாதன், பொன் வண்ணன், நாராயணன் ஆகியோர் பொருத்தமான தேர்வு. இவர்களால் கேரக்டர்கள் பலமாக நிற்கிறது. இவர்களில் நாதன் ஜோன்ஸ் ஒருபடி எக்ஸ்ட்ரவாக பளிச்சிடுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஸ்ரீகாந்தின் தேவாவின் இசையில் பாடல்கள் சுமார்தான். பின்னணி இசையும் பெரிதாக இல்லை. ஒளிப்பதிவில் எஸ் ஆர் சதீஷ்குமார் ஜஸ்ட் பாஸ். எடிட்டர் விஜயன் நிறைய காட்சிகளை கட் செய்ய மறந்துவிட்டார்.

படத்தின் ப்ளஸ்…

  • ஜெயம் ரவியின் உழைப்பு
  • மீடியாக்களின் மார்கெட் தந்திரம்
  • க்ளைமாக்ஸ் பாக்ஸிங் + சோஷியல் மெசேஜ்

படத்தின் மைனஸ்…

  • காமெடி, பாடல், ரொமான்ஸ், அடிதடி எதுவும் இல்லை.
  • பலவீனமான திரைக்கதை + நீளமான காட்சிகள்
  • தமிழில் பேசி ஒரு இங்கிலீஷ்காரனை மனம் மாறச் செய்வது.

மாநில அளவில் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரை நாராயணனுக்கு தெரியவில்லை. தெரிந்த பின்னும் மோத நினைப்பது எதனால் என்பது புரியவில்லை.

இயக்குனர் என். கல்யாண கிருஷ்ணன்… ஒரு அருமையான கதையை எடுத்துக் கொண்டாலும் படத்தின் ஆரம்ப காட்சி முதல் க்ளைமாக்ஸ் காட்சி நொடிக்கு நொடி… பாக்ஸிங்… பாக்ஸிங் என்றே போரடித்து விடுகிறார். கொஞ்சம் எக்ஸ்ட்ரவாக ஏதாவது கொடுத்து நீளத்தை போரடிக்காமல் செய்திருக்கலாம்.

மொத்தத்தில் பூலோகம்… நாக்அவுட் பாதி.. வாக் அவுட் மீதி…!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்