சண்டி வீரன்

சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆனந்தி முதன்முறையாக இணைந்துள்ள படம் இது. நைய்யாண்டி படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் இயக்குனர். இவர்களின் கூட்டணியில் வந்துள்ள சண்டி வீரன் எப்படி இருக்கிறான் என்பதை பார்ப்போம்….

நடிகர்கள் : அதர்வா, ஆனந்தி, லால், அஸ்வின் ராஜா மற்றும் பலர்
இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இயக்கம் : சற்குணம்
தயாரிப்பாளர் : இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’

கதைக்களம்…

நெடுங்காடு, வயல்பாடி என ஊர் இடையே நடக்கும் குடிநீர் பிரச்சினைதான் படத்தின் கதை. ஆனால் ஹீரோ அதர்வாவும் வில்லன் லாலும் ஒரே நெடுங்காடு. வில்லனின் மகள் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் காதல். ஆனால் ஹீரோவின் நண்பர் வயல்பாடி. தண்ணீருக்காக திண்டாடும் நண்பருக்கு உதவுவதா? இல்லை வில்லனுக்கு அடிப்பணிந்து மகளை மணப்பதா? என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

அதர்வாவுக்கு இது சற்று வித்தியாசமான படம்தான். கிராமத்து நாயகனாக இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். அறிமுக காட்சிக்கும் படத்திற்கு பெரிதாக சம்பந்தம் இல்லையென்றாலும் ஆரம்ப காட்சி சற்று திருப்பம்தான். காதல் மோதல் என இரண்டும் கலந்து இருந்தாலும் அடக்கி வாசித்திருக்கிறார். ஆயுத கத்திக்கும்… கத்தி பேசுவதற்கும் வாய்ப்பில்லை.

இதில் அதிகம் ஸ்கோர் செய்தவர் ஆனந்திதான். கிராமத்து தாவணியில் இளம் நெஞ்சங்களை தவழ செய்துள்ளார். குறும்பும் துடிப்பும் இவரது ப்ளஸ் பாய்ண்ட். கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.

வில்லன் லால். முதல் பாதியில் நன்றாகவே மிரட்டியுள்ளார். ஆனால் இவரது பழைய படங்களை விட இது கம்மிதான். இடைவேளை காட்சி செம.

அதர்வாவின் பெற்றோராக போஸ் பாண்டி, ராஜஸ்ரீ. இருவரும் கச்சிதம். மற்றும் ஊர் தலைவர்கள், ஊர் மக்கள், நண்பர்கள் என அனைவரும் சரியாத தேர்வுதான். ஆனால் எல்லாவற்றையும் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர்.

அருணகிரி இசையில் மணி அமுதன் எழுதிய ”அலுங்குற.. குலுங்குற…” பாடல் தாளம் போடவைக்கும். ஆனால் மற்ற பாடல்கள் படத்தில் எதுவும் ஒட்டவில்லை. அதனால் அதை விட்டுவிடுவோம்.

ஆனால் ஒரு பாடலின் வரியை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். நிலவில் தண்ணீர் இருக்கா என ராக்கெட் விட்டு தேடுகிறோம். ஆனால் நிலத்தில் தண்ணீர் வியாபாரம் ஆகிவிட்டது என்ற வரிகள் கண்ணீரை வரவழைக்கும்.

சபேஷ் முரளியின் பின்னணி இசை படத்திற்கு நன்றாக கை கொடுத்துள்ளது. பி.ஜி. முத்தையா கிராமத்து அழகை விருந்தாக படைத்திருக்கிறார். ஒரு காட்சியில் நீரில் மீனை கொத்தும் பறவை, பாம்பு மற்றும் பூச்சிகள் காமம் கொள்வது ஆகியவை அருமையான ஷாட்ஸ்.

பெரும்பாலம் கிராமம், குடிநீர் பிரச்சினை என்றால் வன்முறைதான் இருக்கும். ஆனால் வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் தந்திருக்கிறார் இயக்குனர். எல்லாம் கொடுத்தும் படத்தின் க்ளைமாக்ஸை நகைச்சுவையாக முடித்திருப்பது படத்திற்கு பொருந்தவில்லை.

மொத்தத்தில் சண்டி வீரன்… எதிர்பார்க்கும் வீரன் இல்லை…

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்