டார்லிங் – திரை விமர்சனம்

பிரேமகதா சரித்திரம் என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்தான் டார்லிங். பாலியல் கொடுமை  செய்து கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, மற்றொரு பெண்ணின் உடலில் புகுந்து தனக்கு கொடுமை விளைவித்த ஆண் வர்க்கத்தை மிரட்டி, காரணமானவர்களை பழிவாங்கும் கதைதான் டார்லிங். தற்போதைய தமிழ் சினிமாவை பயமுறுத்திக் கொண் டிருக்கும் பேய்கள் படவரிசையில் இந்த ஆண்டின் முதல் படம்.

‘புத்தம் புது காலை’ புகழ் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டியை ஒருதலையாக காதலிக்கிறார் நாயகன் கதிர் (ஜி.வி.பிரகாஷ்). ஒரு டுயட் கூட பாடிவிடுகிறார். ஆனால், நாயகிக்கு ஏற்கெனவே வேறு ஒரு பாய்பிரண்ட் இருப்பதை அறிந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இவரது முடிவை, ஹீரோவை ஒருதலையாகக் காதலிக்கும் நிஷாவும் (நிக்கி கல்ராணி), நண்பன் ஜேம்ஸ் குமரனும் (பாலசரவணன்) தடுக்கிறார்கள். இருப்பினும் தற்கொலை முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறார் ஹீரோ.
இவரது முடிவை மாற்றுவதற்காக திட்டம் போடுகிறார்கள் இருவரும். தங்களுக்கும் பிரச்சினை உள்ளது. வாழபிடிக்கவில்லை என்று மூவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி நாடகம் போடுகிறார்கள்.

அதற்காக ஒரு பங்களாவை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களைப் போல் தற்கொலை லட்சியத்தோடு இருக்கும் அதிசயராஜ்-வும் (கருணாஸ்) இவர்களோடு சேர்ந்து கொள்கிறார். அந்தப் பங்களாவில் இருக்கும் பேய் நிக்கியின் உடலில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. பின்பு தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஹீரோவிடம் சொல்கிறது. பேயை விரட்ட வேண்டுமென்றால், அந்தப் பெண்ணை கற்பழித்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமல்லவா? ஹீரோ. அதன்பிறகு தன் காதலியை ஏற்றுக் கொண்டாரா? பேயை விரட்டினாரா? என்பதை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சொல்லும்.

ஜி. வி.பிரகாஷுக்கு முதல்படம். தாடியோடு தோன்றி நடித்திருக்கிறார். (காதல் தோல்வியாம்) இருந்தாலும் அப்பாவி தோற்றத்தில் நன்றாகவே பொருந்துகிறார். இசையமைப்பாளராக ஜெயித்த இவர் ஹீரோவாக நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். வாழ்த்துக்கள் ஜி.வி.பி. சார்.

படத்தின் ஹீரோ இசையமைப்பாளர் ஜி.வி.பி. என்றாலும் நன்றாகவே பாஸ் செய்திருக்கிறார் பாலசரவணன். படத்தின் உயிரோட்டத்திற்கு கை கொடுத்திருக்கிறார். இனி நிறைய வாய்ப்புகள் வந்து இவரது அலைபேசியை அதிரவைக்கும்.

கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார். அவ்வளவே. ஆனால், படத்தில் டிரவுசர் மட்டுமே போட்டுக்கொண்டு வரும் (அட டீஸர்ட் கூட போட்டு இருக்காங்க) நிக்கி கல்ராணி  அழகில் ரசிக்கவும் சில சமயங்களில் பேயாகவும் பயமுறுத்த செய்கிறார்.

பாலாவும் கருணாஸும் பெரும்பாலான காட்சிகளில் இடம்பிடித்து சிரிக்க வைக்கிறார்கள். கருணாஸிக்கு இந்தப் படம் ஒரு வரப்பிரசாதமே. ஜெபகூட்ட கிறிஸ்தவர்கள் போன்று பேசும் ஒரு காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார்.  குறிப்பாக இரண்டு காட்சிகள் மட்டுமே வந்துபோகும் ‘கோஸ்ட் கோபால் வர்மா’ நான் கடவுள் ராஜேந்திரனுக்கு தியேட்டரில் மிகப்பெரிய க்ளாப்ஸ்.  இவரது பெயரை கிராப்பிக்ஸ் எல்லாம் செய்து, டைட்டில் கார்டு போல காட்டியிருக்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பாஸ்மார்க பெறுகிறது. கிருஷ்ணன் வசந்தின் கேமராவும்  சில காட்சிகளில் சொல்லும் படியாகவுள்ளது.  படத்தில் நிறைய லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் இந்தப் பழிவாங்கும் கதையை நகைச்சுவையோடு கொடுத்ததற்காக இயக்குனர் சாம் ஆண்டனை எவ்ளோ வேண்டுமானாலும் பாராட்டலாம். (ஒருவேளை யாமிருக்க பயமே படத்தின் வெற்றியைப் பார்த்து முடிவு செய்திருப்பாரோ?) நகைச்சுவையும் காட்சியமைப்புகளும் படத்தை உற்சாகமாக பயமின்றி தூக்கி நிறுத்துகின்றன.

இந்த டார்லிங் பயமுறுத்தும் பேய் அல்ல. சிரிக்க வைக்கும் பேய்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்