எலி விமர்சனம்

‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் மீண்டும் வடிவேலுடன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘எலி’.  ரசிகர்களின் ரசனை வலையில் இந்த ‘எலி’ சிக்கியுள்ளதா என்பதை பார்ப்போம்…

நடிகர்கள்: வடிவேலு, சதா, “கஜினி வில்லன்” பிரதிப் ராவத், பெசன்ட் ரவி, மகாநதி சங்கர், சந்தானபாரதி, போஸ் வெங்கட், பூச்சி முருகன், ராஜ்கபூர் மற்றும் பலர்.

ஒளிப்பதிவு: பால் லிவிங்ஸ்டன்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: யுவராஜ் தயாளன்
படத்தொகுப்பு : VT விஜயன்
கலை :  தோட்டாதரணி
பாடல்கள் : புலமைப்பித்தன். விவேகா
நடனம் : தாரா, சிவசங்கர்
சண்டை : சூப்பர் சுப்புராயன்
மக்கள் தொடர்பு : நிகில்
தயாரிப்பாளர்கள் :  G சதிஷ் குமார், S அமர்நாத்

கதைக்களம்…

போலீஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் எலிச்சாமி (வடிவேலு). ஆனால் அந்த வேலை கிடைக்காததால் அந்த கிரிமினல் மூளையை தன்னுடைய திருட்டுத்தனத்துக்கு பயன்படுத்தி சம்பாத்திக்கிறார். ஒவ்வொரு வீடாக கொள்ளையடிக்கும் போது ஒரு நாள் காவல் துறையின் உயர் அதிகாரி (கிட்டி) வீட்டிலும் களவாடுகிறார். அச்சமயம் வேறு ஒரு போலீஸ் (ஆதித்யா) வந்தும் அவரை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறார்.

இதற்கிடையில் காவல்துறைக்கு வில்லனின் (கஜினி புகழ் பிரதீப் ராவத்) கடத்தல் தொழில் பெரும் தலைவலியாக இருக்கிறது. இவர்களை கூண்டோடு பிடிக்க நினைக்கும் காவல்துறை உளவாளியாக ஒருவரை அனுப்ப நினைக்கின்றனர். இதனால் கிரிமினல் புத்தி ‘எலி’யை அழைத்து, அவர்களை கைது செய்ய உதவினால் போலீஸாக ஆக்குவோம் என்கின்றனர். இதனால் கடத்தல் கும்பலில் சேருகிறார் வடிவேலு. அங்கே நாயகி சதாவை சந்திக்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? கடத்தல் கும்பலை பிடித்தார்களா? வடிவேலு போலீஸ் ஆனாரா? எல்லாம் இந்த ‘எலி’ சொல்லும்.

கதாபாத்திரங்கள்…

படம் முழுக்க வடிவேலுதான்… எலியாக வந்து சண்டை காட்சிகளில் புலியாக மாறுகிறார். (எல்லாம் காமெடிதான்). நண்பர்களுடன் சேர்ந்து திருட செல்வதும் சாமர்த்தியமாக தப்பிப்பதும் நன்றாகவே செய்துள்ளார். இது வடிவேலுவின் பழைய சரக்குதான். ஆனால் இதில் புதிதாக ஒன்றுமில்லையே.

மொட்டை ராஜேந்திரனை கொலை செய்தவர் இவர்தான் என நினைத்து மகாநதி சங்கர் இவரை வில்லனிடம் அழைத்து செல்வது, நெல்லை சிவாவின் வங்கி காட்சிகள் என இதுபோன்ற ஒரு சில காட்சிகளில் மாட்டிக்கொண்டு மட்டும் சிரிக்க வைக்கிறார். மற்றபடி நாம் ரசித்து விழுந்து விழுந்து சிரித்த வடிவேலுவா இது? என்று பல காட்சிகளில் நம்பிக்கை இழக்கிறோம்.

அந்நியன் சதா… அய்யோ… அநியாயத்துக்கு இந்த நிலைமைக்கு வந்துட்டாரே என்று எண்ணத் தோன்றுகிறது. சதாவுடன் இரண்டு டூயட்டும் உண்டு. இதில் ஒரு இந்தி பாடல்வேறு. 1969இல் வெளிவந்த ஆராதனா படத்தில் இடம்பெற்ற ‘மேரே சப்னோ கீ ராணி…’ அப்படியே பயன்படுத்தியிறுக்கிறார்கள்.

இவர்களைத் தவிர ‘கஜினி வில்லன்’ பிரதீப் ராவத், பெசன்ட் ரவி, மகாநதி சங்கர், ஆதித்யா, கிட்டி, சந்தானபாரதி, போஸ் வெங்கட், பூச்சி முருகன், ராஜ்கபூர், நெல்லை சிவா, முத்துக்காளை ஆகிய நட்சத்திரங்கள் இருந்தும் ஸ்வாரசியமே இல்லை.

தோட்டாதரணியின் கலை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 1960 காலகட்டங்களில் நடப்பது போன்று காட்சிகள் அதற்கு ஏற்ற வாகனங்கள் என அனைத்தையும் நன்றாக கவனித்து செய்திருக்கிறார். ஆனால் வசனங்கள்தான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உள்ளது.

கொள்ளை அழகு பாடல் சுமார். மற்றவை சொல்லும்படியாக இல்லை. வித்யாசாகர் இசையில் சில காட்சிகளில் பின்னணி நன்றாக இசைக்கிறது. பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவு ஓகே.

கதை நன்றாக இருந்தபோது அதை ஏன் காட்சியாக இயக்குனர் கொண்டு வரவில்லை என்ற எண்ணமே படம் முழுவதும் ஒட்டிக்கொள்கிறது. வடிவேலு போன்ற ஒரு மாபெரும் கலைஞனை இவர் சரியாக பயன்படுத்தவில்லையே என்று நம்மை ஏங்க வைக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன். தெனாலிராமனில் தவறவிட்ட வாய்ப்பை இதிலும் தவறவிட்டுள்ளார்.

மொத்தத்தில் ‘எலி’ தொல்லை தாங்கல; எப்படி தப்பிக்கலாம்?

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்