எனக்குள் ஒருவன் – விமர்சனம்

நாம் வாழ நினைக்கும் வாழ்க்கை வேறு ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை வேறு. நாம் வாழ முடியாத அந்த வாழ்க்கையை நம் கனவுலகில் வாழ்ந்தால் எவ்வளவு சுவாரஸ்யம் இருக்கும். அப்படிப்பட்ட நம் எண்ணம் நமக்குள் உருவெடுத்து வாழ்ந்தால் அதான் இந்த ‘எனக்குள் ஒருவன்’.

கதை சுருக்கம்

தூக்கமின்மையால் அவதிப்படும் கதாநாயகனுக்கு ஒருவரின் நட்பு கிடைக்க தூக்கம் தேடிச் செல்கிறார். நல்ல தூக்கத்தோடு போனஸாக நாம் வாழ நினைக்கும் வாழ்க்கையை கனவாக வாழ ‘லூசியா’ என்ற மாத்திரை வாங்கி செல்கிறார்.

அன்றிலிருந்து, நிஜ வாழ்க்கை ஒன்றும் கனவுலக வாழ்க்கை ஒன்றும் வாழ்கிறார். நிஜ வாழ்வில் சந்திக்கும் ஹீரோயின் தீபா சன்னதி, ஆடுகளம் ‘நரேன்’ உள்ளிட்ட நபர்களை தன் கனவுலகில் இணைத்து அதற்கான ஒரு கலர்ஃபுல் வாழ்க்கை வாழ்கிறார். இறுதியில் எது நிஜமான வாழ்க்கை, எது கனவுலக வாழ்க்கை என்பதற்கான முடிச்சுகளை அவிழ்த்து கதைக்கு உயிரூட்டிக்கிறார் இயக்குனர்.

கதாபாத்திரங்கள்

இருமாறுபட்ட கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார் சித்தார்த். தற்போது மிக கவனமாக தன் கேரக்டர்களை தேர்வு செய்கிறார். ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘ஜிகர்தண்டா’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களை போல் இப்படமும் இவருக்கு கை கொடுத்துள்ளது.

சித்தார்த்தை அழுக்கான தோற்றத்தில் கலர்புல்லாகவும், அழகான தோற்றத்தில ப்ளாக அண்ட் ஒயிட்டாக காட்டியிருப்பதால், சித்தார்த்தின் ரசிகைகள் மிகவும் சோர்வாக காணப்பட்டனர். (பாவம் காலேஜ் கட்டடிச்சிட்டு வந்தா இப்படி பண்ணிட்டாரே..)

தீபா சன்னதிக்கு தமிழில் இதுதான் முதல்படம். இரண்டு கதாபாத்திரத்திலும் நிறையவே ஸ்கோர் செய்திருக்கிறார். நன்றாக நடிக்கவும் தெரிந்திருப்பதால் நிறைய வாய்ப்புகள் தங்கள் சன்னதிக்கு வரும் அம்மணியே. வாழ்த்துக்கள். இவரும் ப்ளாக் அண்ட் ஒயிட் காட்சிகளில் மட்டும் கவர்ச்சியாக வருவதால் இவரின் அழகையும் சரியாக ரசிக்க முடியவில்லை. (இது ஆண்களின் மைன்ட் வாய்ஸ்)

சிலகாட்சிகளில் மட்டும் வரும் ஸ்ருஷ்டி டாங்கே தன் கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். முன்பை விட இப்படத்தில் சற்று குண்டாகவே தெரிகிறார். (உடலை நன்கு கவனிக்கவும்)

படம் முழுவதும் வரும் கேரக்டராக ஆடுகளம் ‘நரேன்’. திரைக்கதையோடு ஒன்றி பயணித்திருக்கிறார். என்றும் தனக்கு வழங்கப்படும் பாத்திரத்தில் குறை வைத்ததில்லை இவர். அமைதியான நடிப்பில் இதிலும் அசத்தியிருக்கிறார் மனிதர்.

இவர்களுடன் ஜான் விஜய், மகாதேவன், அஜய்ரத்னம், ‘முண்டாசுபட்டி’ ராம்தாஸ், ‘சூதுகவ்வும்’ யோக் ஜேபி, உதய் மகேஷ் போன்றோரும் தங்கள் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இயக்குனருக்கு அருமையாக கைகொடுத்துள்ளது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். முக்கியமாக ‘பிரபலமாகவே’, ‘ஏண்டி இப்படி’, ‘குட்டி பூச்சி’ போன்ற பாடல்கள் அருமை. ஆனால் பாடல்கள் நன்றாக அமைந்தும், அதை ரசிகர்களுக்கு பழைய படம் போல காட்டியதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

நிஜவாழ்க்கை, கனவுலக வாழ்க்கை என வேறுபடுத்தி காட்சிகளை அமைத்த ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தை நிச்சயமாக கைகுலுக்கி பாராட்டலாம்.

கதைக்கு ஏற்ற பாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்த இயக்குனர் பிரசாத் ராமரை பாராட்டியாக வேண்டும். அவர்களிடம் நன்றாகவே வேலையை வாங்கியிருக்கிறார். இருவாழ்க்கையை வேறுபடுத்தி காண்பிக்க வேண்டும் என்பதற்காகவும் ஹீரோவிற்கு Color Blindness என்பதற்காகவும் பாதி படத்தினை ப்ளாக் அண்ட் ஒயிட்டாக காட்டியதில் சற்று வருத்தமே.

நம் அன்றாட உணர்வுகளோடு திரைக்கதை பயணிப்பதால், படம் மெதுவாக செல்கிறது. அதை சற்று தவிர்த்திருக்கலாம். படத்தில் காமெடி காட்சிகள் அறவே இல்லை. அதையும் சற்று கவனித்திருந்திருந்தால் ரசிகர்களும் இன்னும் கவனித்திருப்பார்கள். ஒருவர் வாழும் சிறிய வாழ்க்கை மற்றொருவரின் பெரிய கனவு என்ற கருத்தை பலமாக பதிவு செய்திருக்கிறது இப்படம்.

எனக்குள் ஒருவன் – நாம் வாழ்வது மற்றொருவரின் கனவு. நம் கனவு மற்றொருவரின் வாழ்க்கை.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்