கெத்து விமர்சனம்

தன்னுடைய கேரியருக்கு உதவிய சந்தானத்தை உதறிவிட்டு இதில் எமியுடன் ‘கெத்து’ காட்ட புறப்பட்டுள்ளார் உதயநிதி. வில்லனாக விக்ராந்த் நடித்து அவரும் ‘கெத்து’ காட்ட முற்பட்டுள்ளார். எனவே இவர்களின் ‘கெத்து’ கூட்டணி எப்படி என்பதை பார்ப்போமா?

நடிகர்கள் : உதயநிதி, எமி ஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன், அவினாஷ், அனுராதா ராஜேஷ், மைம் கோபி, பிரகதி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : சுகுமார்
படத்தொகுப்பு : தினேஷ் பொன்ராஜ்
இயக்கம் : திருக்குமரன்
தயாரிப்பாளர் : உதயநிதி (ரெட் ஜெயன்ட் மூவிஸ்)

 

கதைக்களம்…

உதயநிதியின் தந்தை சத்யராஜ் குமளியில் உள்ள பள்ளியில் பிடி மாஸ்டர். தன் பள்ளிக்கு அருகே பார் இருப்பதால் குடிமகன்கள் அங்கே போதையில் கிடக்க தட்டி கேட்கிறார் சத்யராஜ். இதனால் வெகுண்டெழும் மைம் கோபி அவரை தாக்க உதயநிதி கெத்து காட்டுகிறார்.

இதனிடையில் மைம் கோபி வேறு ஒருவரால் கொலை செய்யப்பட சத்யராஜ் ஜெயிலுக்கு செல்ல நேரிடுகிறது. தன் தந்தையை காப்பாற்ற இறங்கி அடிக்கிறார் உதயநிதி. தந்தை விடுதலை பெற்றாரா? உண்மையான கொலையாளி யார்? என்பதை மீதமுள்ள கெத்து சொல்லும்.

கதாபாத்திரங்கள்…

தான் ஹீரோ என்றாலும் சத்யராஜ் பெயரை டைட்டில் கார்டில் முதலில் இட்டது உதயநிதியின் பெருந்தன்மையை காட்டுகிறது. உதயநிதி படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி வருகிறார். இதில் அதிரடி ஆக்ஷனில் கொஞ்சம் கெத்து காட்டியுள்ளார். அதற்காக படம் முழுவதும் முகத்தை ஏன் இவ்வளவு சீரியஸாக வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை சந்தானம் இல்லாத குறையோ?

எமி ஜாக்சன்…  லைப்ரரி புக் திருடி, செய்தி வாசிப்பாளர் என சில காட்சிகளில் மட்டுமே இவர்.  பல காட்சிகளில் டவுசரை போட்டு கொண்டு ஏங்க வைத்தாலும், இடையே படத்தில் காணாமல் போகிறார். காட்சிகளில் இவரின் உதட்டருகே இருக்கும் மச்சம் பாடல் காட்சிகளில் எங்கே?

சத்யராஜ் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார். ஆனால் இன்னும் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம். இவருக்கும் உதயநிதிக்கும் ஏதாவது பிரச்சினையா? காட்சிகளில் கொஞ்சமே பேசிக் கொள்கின்றனர்.

கருணாகரன் இருந்தும் கருணைக்கு கூட காமெடியில்லையே. என்னாச்சு சார்? இவர் போலீசாக இருந்தாலும் பல ஐடியாக்களை உதயநிதியே தருகிறார்.

நல்ல உடற்கட்டு, மிரட்டும் பார்வை என கெத்தாகவே வருகிறார் வில்லன் விக்ராந்த். ஆனால், இவரை விட பின்னணி இசையே அதிகமாக மிரட்டுகிறது. சரி க்ளைமாக்ஸில் மிரட்டுவார் என்று பார்த்தால் பைனல் டச் சரியில்லையே பாஸ்?

இவர்களுடன் மைம் கோபி, பிரகதி, ராஜேஷ், அனுராதா, சச்சு, வாசு விக்ரம், ஆடுகளம் நரேன், உமா பத்மநாபன் என பலரும் ஜஸ்ட் இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை கைகொடுத்த அளவு கூட பாடல்கள் கை கொடுக்கவில்லை. ஒரு சில பாடல்களை ஒருமுறை கேட்கலாம்.

அன்புறிவின் சண்டை காட்சிகள் சபாஷ். கெத்து காட்டியிருக்கிறார். எம். சுகுமாரின் ஒளிப்பதிவில் முட்ட பஜ்ஜி பாடல் கண்களுக்கு மட்டுமே விருந்து.

படத்தின் ப்ளஸ்…

  • த்ரில்லர் திரைக்கதை
  • குளுமையான ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்..

  • படத்தில் ஒட்டாத பாடல்கள்
  • வில்லனுக்கான ஓவர் பில்டப் இசை
  • கொஞ்சம் நீளமான காட்சிகள்

மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன், அதில் காமெடியுடன் விருந்து படைத்தார். இதில் ஆக்ஷனுக்கு மாறியது ஆறுதலே. ஆனால் பல காட்சிகள் தடுமாற்றம் தெரிகிறது.

மொத்தத்தில் கெத்து – இன்னும் கொஞ்சம் தேவை..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்