ஐ விமர்சனம்

விக்ரம்-ஷங்கர்-ஆஸ்கர் ரவிச்சந்திரன் இவர்கள் இணைந்த அந்நியன் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியின் மற்றொரு வெற்றிபடம்தான் இந்த ‘ஐ’. இம்முறை ஏ.ஆர். ரகுமானும் பி.சி.ஸ்ரீராமும் கைகோர்த்து இருக்கிறார்கள்.

வித்தியாசம் என்றால் இனி விக்ரமை மட்டும நம்பி அழைக்கலாம். மனிதர், கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். தனது நிஜ உருவத்தையே சிதைத்து இருக்கிறார். ஒரு முன்று மணி நேரம் ஓடும் சினிமாவிற்கு இவ்வளவு ரிஸ்க் தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது. ஷங்கரின் கதைக்கு ஏற்ற தீனி போட்டிருக்கிறார் விக்ரம்.

கதை சுருக்கம் : வெயிட் லிப்ட்டும், பாடி பில்டப்புமாக சென்னை தமிழ் பேசிக் கொண்டு திரியும் ‘லீ’ எனும் லிங்கேசன்தான் விக்ரம். மிஸ்டர் இந்தியா ஆக வேண்டும் என்ற வெறியோடு சின்னதாக ஒரு ஜிம்மை நடத்திக் கொண்டு வருகிறார். அதன் முதல்படியாக தடை பல கடந்து மிஸ்டர் மெட்ராஸ் ஆகிறார். விக்ரமின் நண்பராக வருகிறார் சந்தானம். மிஸ்டர் மெட்ராஸ் ஆனதை தொடர்ந்து, சின்னதாய் விளம்பரங்களில் நடிக்க தொடங்குகிறார் லீ. இவர் மிஸ்டர் மெட்ராஸ் ஆனதால் மற்றொரு பாடிபில்டர் ரவி பாதிக்கப்படுகிறார். (வில்லன் 1)

விளம்பர படங்களில் நடிக்கும் மாடல் அழகியாக வருகிறார் எமிஜாக்சன். இவர்மீது பைத்தியமாக இருக்கிறார் விக்ரம். இந்நிலையில் ஒருநாள் விளம்பர படப்பிடிப்புக்காக எமிஜாக்சனின் பாதுகாப்பிற்காக விக்ரம் செல்லும்போது அவரின் அறிமுகம் கிடைக்கிறது.

எமி, தன் சக மாடல் நடிகர் ஜானின் செக்ஸ் டார்ச்சர் பொறுக்க முடியாமல், ஜானுக்கு போட்டியாக விக்ரமை பெரிய மாடலாக்கி விட நினைக்கிறார். முதலில் மறுக்கும் விக்ரம் பிறகு எமிக்காக தனது மிஸ்டர் இந்தியா ஆசையை துறந்து மாடலாக நடிக்க ஒப்புக் கொள்கிறார். சீனாவில் நடைபெறும் ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக இருவரும் செல்கின்றனர். ரொமான்ஸ் விளம்பர படமான அதில் விக்ரமுக்கு தன் தேவதை எமியுடன் இணைந்து நடிக்க கூச்சமாக இருக்கிறது. அவரது கூச்சத்தை போக்க, விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடி என எமியிடம் அட்வைஸ் செய்கிறார் இயக்குனர். முதலில் மறுக்கும் எமி, ஜானுடன் மீண்டும் நடிக்க நேரிடுமோ என பயந்து, இக்கட்டான சூழலை தவிர்க்க விரும்பி விக்ரமை காதலிப்பது போல் நடிக்கிறார்.

ஆரம்பத்தில், ”நான் சாக்கடை நீங்கள் தேவதை..” என எமியின் காதலை மறுக்கும் விக்ரம், பின்பு தன் இஷ்ட தேவதையே தன்னை காதலிப்பதால் இயல்பாக நடிக்கிறார். இந்த விளம்பர படம் தயாரித்த நிறுவனத்தின் லாபம் வளர வளர, இவர்களிடையே காதலும் வளர்கிறது.

மாடலிங் உலகில் இவர்களின் ஜோடி பொருத்தம் கொடி கட்டி பறக்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார் பழைய மாடல் ஜான். (வில்லன் 2) விக்ரம் – எமியின் நிஜக்காதலால், விக்ரம் மீதான தன் ஒரு தலைக்காதல் பாதிக்கப்பட்ட வருத்தத்தில் இருக்கிறார் விக்ரமின் காஸ்ட்லி மேக்கப் திருநங்கை. (வில்லன் 3)

நச்சு தன்மையுள்ள குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்து, அதுப்பற்றி தொலைக்காட்சிகளில் பேட்டியும் கொடுத்த விக்ரமால் பெரிதும் நஷ்டமடைகிறார் விக்ரமை வளர்த்துவிட்ட தொழில் அதிபர் ராம்குமார் (வில்லன் 4) எமியின் பேமிலி டாக்டர் சுரேஷ் கோபிக்கு எமி மீது வயது மீறிய காதல். விக்ரமின் காதலியை தன் மனைவியாக்கி கொள்ள கடைசியாக களம் இறங்கும் மெயின் வில்லன் இவர். (வில்லன் 5)

இந்த 5 வில்லன்களும் சேர்ந்து வெளி உலகுக்கு தெரியாமல் விக்ரமை ஒழித்துகட்ட போடும் திட்டம் தான் ஐ எனும் வைரஸ்! அயல்நாட்டில் இருந்து, வரவழைக்கப்படும் ஐ வைரஸை விக்ரமின் உடம்பிற்குள் அவருக்கே தெரியாமல் ஊசி மூலம் ஏற்றுகிறார்கள். விளம்பரப் படவுலகில் முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் முடி இழந்து, முகம் இழந்து, பல் இழந்து, கூன் விழுந்து, கொடூரமாக மாறுகிறார். தன்னுடைய இந்த நிலைக்கு காரணமான ‘ஐ’வரையும் அவர்கள் பாணியிலேயே கொலை செய்யாமல் “அதுக்கு மேல’ பிளான் செய்து எடுக்கும் அவதாரம் தான் இந்த மொத்த ‘ஐ’ படமும்.

இதுவரை வந்த தமிழ் படங்களில், தன் கதாநாயகனை எந்த இயக்குனரும் இப்படி கொடூரமாக அறிமுகப்படுத்தி இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு முகத்துடன் அறிமுகமாகிறார் விக்ரம். படத்தின் அறிமுக காட்சியிலே ஹீரோயினை அள்ளிச் செல்கிறார். பின்பு ப்ளாஸ்பேக் காட்சிகள். அதுதான் ரொம்பவே நீ…..…ள்கிறது.

சேதுவில் ஆரம்பித்த கலை தாகத்தை இம்மியளவு கூட குறைக்காமல் இதிலும் மெனக்கெட்டு நடித்திருக்கிறார் விக்ரம். பாடி பில்டராகவும், மாடலாகவும், கூனன் கேரக்டரிலும் உயிரை கொடுத்து, நடித்திருக்கிறார். காதல்காட்சியிலும், சண்டைக்காட்சிகளிலும் தன் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அடுத்து எமிஜாக்சன். மொத்த கவர்ச்சியையும் வாரி வழங்கி இருக்கிறார் இவர். இனி பேலன்ஸ் இருக்கிறதா? என்று தெரியவில்லை. அதுபோல நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார். விக்ரம் எமியை நிராகரிக்கும் காட்சியில், ஒரு வேளை நான் உன்னை போல இருந்தால், நீ என்னை விட்டு போய்விடுவாயா? என்று கேட்கும் போது, காதலின் ஆழத்தை உணரவைக்கிறார்.

இதுபோல சீரியஸான சப்பெஜக்ட் உள்ள படத்திற்கு சந்தானம் போன்ற ஒரு நபர் தேவைதான் என்பதை நிருபித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளிளெல்லாம் பறக்கும் விசில் சப்தங்கள் காதை பிளக்கின்றன.

விஜய் மல்லையா போலவே தோற்றத்தில் ராம்குமார் மற்றும் எமியின் ஃபேமிலி டாக்டராக வந்து அதுக்கு மேல…அதுக்கு மேல என்றபடி ”ஐ” வைரஸை செலுத்தும் சுரேஷ்கோபி, அந்த மேக்கப் திருநங்கை உள்ளிட்ட எல்லோரும் பலே சொல்ல வைக்கின்றனர்.

ஏ.ஆர். ரகுமானின் இசையில், ”மெர்சலாயிட்டேன்…, பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்…, என்னோடு நீயிருந்தால்…, உள்ளிட்ட ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகம். நான் மெர்சலாயிட்டேன் பாடலில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் நாம் மெர்சலாவது உண்மைதான். அப்படி ஒரு ஒளிப்பதிவு. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டீமும் அதுக்கு மேல மெனக்கெட்டு இருக்கிறார்கள். சபாஷ்.

இப்படி ஒரு படத்தை ஷங்கரால் மட்டுமே கொடுக்கமுடியும் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். கதை, அதற்கேற்ற நடிகர், ஒளிப்பதிவு, இசை அனைத்தையும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், ஷங்கரின் இயக்கத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது இதுக்கும் மேல. இப்படி ஒரு படத்திற்கு மிகவும் எளிதான பழிவாங்கல் அதை. (ஏன் சார் இந்த படத்துல மெசெஜ் சொல்லல?) சமீபத்தில் லிங்கா படத்தில் ரஜினியை லிங்கேஸ்வரனாக பார்த்தோம்… இதில் விக்ரம் லீ எனும் லிங்கேசன் என்பதுதான் கொஞ்சம் உறுத்துகிறது.

மொத்தத்தில் ”ஐ” படம் ஆச்சர்யப்படுத்தும்!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்