இந்தியா பாகிஸ்தான்

‘நான்’, ‘சலீம்’ படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. இரண்டு படங்களில் ‘சீரியஸான’ வெற்றியை கொடுத்த இவர் இம்முறை காமெடியை தேர்ந்தெடுத்து இருக்கிறர். ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறாரா? என்பதை பார்ப்போம்…

நடிகர்கள்… விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், ஊர்வசி, பசுபதி, ஜெகன், மனோபாலா, எம் எஸ் பாஸ்கர், டி.பி. கஜேந்திரன், காளி வெங்கட், யோகி பாபு மற்றும் பலர்.

இசை… தீனா தேவராஜன்
ஒளிப்பதிவு… என். ஓம்
படத்தொகுப்பாளர்… எம். தியாகராஜன்
பாடல்கள்… அண்ணாமலை
இயக்கம்…
என் ஆனந்த்
தயாரிப்பாளர்… பாத்திமா விஜய் ஆண்டனி

கதையின் களம்…

காதலுக்கு மரியாதை டிவிடி வாங்கும்போது யதார்த்தமாக சந்திக்கும் கார்த்திக் (விஜய் ஆண்டனி) மெலினா (அறிமுக நாயகி சுஷ்மா ராஜ்) இருவரும் பார்த்த நிமிடத்தில் காதல் கொள்கின்றனர். அவர்கள் வாங்கிய ஒரு டிவிடியில் நிஜக் கொலை வீடியோ ஒன்று பதிவாகியிருப்பது அவர்களுக்கு தெரியாது. ஒரு சூழ்நிலையில் இருவரும் தங்கள் ஆபிஸை ஷேர் செய்து கொண்டு ஒரே இடத்தில் இருக்கின்றனர். இருவரும் வக்கீல் என்பதால் படம் முழுக்க ஈகோ கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் சண்டை போட்டு கொண்டே இருக்கின்றனர். (இப்போ புரியுதா படம் டைட்டில்).

கேஸ் (வழக்கு) கிடைக்காமல் அலையும் போது நண்பர் புரோக்கர் ஜெகன் மூலமாக பசுபதியும் எம்.எஸ். பாஸ்கரும் இவர்களிடம் சிக்குகின்றனர். கிராமத்தில் இருக்கும் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் பசுபதிக்காக விஜய் ஆண்டனியும் பாஸ்கருக்காக சுஷ்மாவும் வாதாடுகின்றனர்.

வழக்கில் ஜெயித்தார்களா? இல்லை காதலில் ஜெயித்தார்களா? அந்த டிவிடி என்ன ஆனது? அதில் சிக்கிய குற்றவாளி யார்? போன்ற கேள்விகளுக்கு காமெடியுடன் கதை சொல்லியிறுக்கிறார்கள்.

கதாபாத்திரங்கள்

விஜய் ஆண்டனியின் இதற்கு முந்தைய படங்கள் சீரியஸ். இதில் சிறிது ரொமான்ஸ், டூயட் பாடல், காமெடி கலவையாக தந்திருக்கிறார். சிறிது முயன்றிருக்கிறார். ஆனால்? இனிவரும் படங்களில் சரி செய்வார் என்று நம்புவோம்.

புதுமுக நாயகி சுஷ்மா படம் முழுக்க வருகிறார். அதற்காகவே அவர் இயக்குனருக்கு நன்றி சொல்ல  வேண்டும். சில காட்சிகளில் பாஸ் மார்க் வாங்குகிறார். இவரது உயரம், கண்கள் மற்றும் பாடல், காதல் காட்சிகளில் அனுஷ்காவை நினைவுப்படுத்துகிறார். (இது அனுஷ்காவுக்கு தெரியுமா சுஷ்மா?)

ஜெகன், பசுபதி, எம். எஸ். பாஸ்கர், மனோபாலா,  ‘பன்னி மூஞ்சி வாயன்’ யோகி பாபு என இவர்களின் பட்டாளம் நுழைந்த பின்புதான் படம் காமெடி களை கட்டுகிறது. கிரிக்கெட் மேட்சிற்கு கேப்டன் மட்டும் போதாது. வீரர்களும் வேண்டும் என்பது போல புகுந்து விளையாடியிருக்கிறார்கள். 1 ரன் முதல் ஃபோர், சிக்ஸர் என அடித்து நொறுக்கியிறுக்கிறார்கள்.

இவர்களுடன் சில காட்சிகளில் வரும் ஊர்வசி, காளி வெங்கட், டி.பி. கஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை நிறைவாக ரசிக்கத்தக்க வகையில் செய்திருக்கின்றனர்.

விஜய் ஆண்டனி ஒரு இசையமைப்பாளராக இருந்தாலும் வேறு ஒரு இசையமைப்பாளருக்கு வாய்ப்பினை வழங்கியதற்கு தீனா தேவராஜன் குறை வைக்கவில்லை. மூன்று பாடல்களில் தன்னை நிரூபித்து இருக்கிறார். அண்ணாமலை வரிகளில் ‘பல கோடி பெண்கள்…’, ‘ஒரு பொண்ண பாத்தேன் மாமா…’ போன்ற பாடல்கள் புரிந்துக் கொள்ளும்படியாக உள்ளது.

‘உன்னை தினமும் நினைக்கிறேன்…’ பாடலில் யார் இந்த ஒளிப்பதிவாளர் என்று கேட்க வைக்கிறார் என். ஓம். இவரின் இந்த கை வண்ணத்தால் சீட்டை விட்டு எழ தோன்றவில்லை.

இயக்குனர் என் ஆனந்த் அவர்களுக்கு காமெடி நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. வில்லனாக வந்த பசுபதியை நன்றாக காமெடியில் கலக்க செய்திருக்கிறார். ஆனால் படத்தில் இத்தனை அனுபவமிக்க நடிகர்கள் இருந்தும் சில காட்சிகளில் நாடகம் பார்ப்பதை போன்ற உணர்வு வருவதை தவிர்கக முடியவில்லை.

இந்தியா பாகிஸ்தான்… இது டென்ஷன் மேட்ச் இல்ல. ஜஸ்ட் ரிலாக்ஸ்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்