இனிமே இப்படித்தான்

‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமடைந்த சந்தானம் இன்று தன்னைத் வளர்த்து விட்ட இரட்டை இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். ‘இனிமே இப்படித்தான்’ ஹீரோவாக நடிப்பாரா? என்பதை பார்ப்போம்.

நடிகர்கள்: சந்தானம், அஸ்னா ஷாவேரி, அகிலா கிஷோர், தம்பி ராமையா, FEFSI விஜயன், பிரகதி, ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ், சிங்கமுத்து மற்றும் பலர்
ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்
இசை: சந்தோஷ் குமார் தயாநிதி
இயக்கம்: ‘லொள்ளு சபா’ புகழ் முருகானந்தம் (இருவர்)
தயாரிப்பு: சந்தானத்தின் ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்

கதைக்களம்…

ஹீரோ சந்தானத்திற்கு பெண் பார்க்கிறார்கள் இவரது பெற்றோர் நரேன்-பிரகதி. ஆனால் சந்தானமோ ஒரு சூப்பர் பிகரை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறார். ஒரு சின்ன சண்டையில் அஸ்னா ஷாவேரி சந்திக்கும் சந்தானம் அவரை காதலிக்கிறார். ஆனால் நாயகியோ இவரை வெறுக்கிறார். இதற்கிடையில் தாய்மாமன் தம்பிராமையா சந்தானத்திற்கு அகிலா கிஷோரை நிச்சயம் செய்து வைக்கிறார். அதன்பின்னர் அஸ்னா சந்தானத்தின் காதலை ஏற்றுக்கொள்கிறார்.

அஸ்னாவிடம் உள்ள காதலை அகிலாவிடம் தெரிவிக்க வரும் நேரங்களில் பெப்சி விஜயன் தடை போட திருமணம் தேதி நெருங்கிவிடுகிறது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் சந்தானம் யாரை கழட்டி விட்டார்? எப்படி தப்பித்தார் என்பதே ‘இனிமே இப்படித்தான்’ கதை.

கதாபாத்திரங்கள்…

படம் முழுக்க சந்தானத்தின் ராஜ்ஜியம்தான். முழு ஹீரோவாக இனிமே இப்படித்தான் என்பதை சொல்லியிருக்கிறார். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வரை கலகலப்பாக்கியிருக்கிறார்.
பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல், டிரஸ்ஸிங், டான்ஸ், பைட் முக்கியமாக செண்டிமெனட் என எதையும் விட்டு வைக்கவில்லை. சிக்ஸர் அடித்திருக்கிறார். ஆனால் ஓவர் மேக்கப். அழும் காட்சிகளில் கூட ப்ரெஷ்ஷாகவே இருக்கிறார். சில காட்சிகளில் சீரியஸாக வருகிறார்.

முதல் நாயகி அஸ்னா ஷாவேரி. இவரின் முகம் போலவே தன் திறமை பளிச்சிட நடித்திருக்கிறார். காதலை வெறுப்பதும், ஏற்றுக் கொள்வதும், ஏமாற்றினால் பொங்குவதும் என ஸ்கோப் உள்ள பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

அமைதியான பெண்ணாக அகிலா கிஷோர். அடக்கமாக வந்து அசத்தலாக நடித்திருக்கிறார். இப்படி அழகான இரு நாயகிகள் இருந்தால் கண்டிப்பாக நாயகன் மாட்டத்தானே செய்வார்? இருவரும் சபாஷ் பெறுகிறார்கள்.

சந்தானத்தின் நண்பராக விடிவி கணேஷ் தன் காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்கவைக்கிறார். கூடவே வரும் நண்பர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

தம்பிராமையா வந்த பின் படத்தின் காமெடி களைகட்டுகிறது. நரேனை பார்த்து ஏன் மூக்கை மிளகாய்பொடி போட்ட மாதிரி வைத்திருக்கிறார் என்று கிண்டல் செய்யும் போதும், நிச்சயம் ஏற்பாடு செய்யும் போதும், திருமணத்தை நிறுத்த ப்ளான் போடுவதும் என ஒவ்வொரு காட்சியிலும் தன் பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

நரேன், பிரகதி, பெப்சி விஜயன், சிங்கமுத்து, வித்யூலேகா, ‘லொள்ளு சபா’ மனோகர், அஸ்னாவின் தோழிகள் என எவரும் குறை வைக்கவில்லை.

ஏ.ஆர்.ரகுமானின் சீடர் சந்தோஷ் குமார் தயாநிதி பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கானா பாலாவில் குரலில் ‘பார்த்த ஒரு லுக்குல…’ பாடல் நிச்சயம் குழந்தைகளை ஆடவைக்கும். மதன் கார்க்கி வரிகளில் ‘இனிமே இப்படித்தான்…’ பாடல் நல்ல மெலோடி. மற்ற பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும் காட்சிகளில் பாடல்கள் தேவையில்லாமல் வருகிறது.

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் அனைத்து முகங்களும் படுப்ரெஷ்ஷாக வருகிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா கவிதை பாடியுள்ளது.

லொள்ளு சபா இயக்குனர்கள் ஆயிற்றே… வசனங்கள் மூலம் தனித்து தெரிகிறார்கள். முக்கியமாக காதலை நிரூபிக்க சொல்வதை போல காதலிக்கவில்லை என்பதை நீரூபிக்க சொல்லும் சீன் ‘செம’. காதலுக்காக அடிவாங்கலாம், ஆனால் காதலை ஏற்றுக்கொள்ளாதபோது ஏன் அடி வாங்கனும்? போன்ற சீன்களுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.

படத்தை தொய்வில்லாமல் இயக்கியுள்ளனர். இடைவேளை ப்ரேக் நச். படத்தின் க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது. வெறும் காமெடிதானே என்றில்லாமல் கதையுடன் சொன்னதற்கு சபாஷ்.
கல்யாண மாலை நிகழ்ச்சியின் இடையே வரும் சந்தானத்தின் வசனங்கள் இடைசெருகலாக தெரிகிறது. எல்லா படங்களிலும் ரிப்பீட் ஆகும் சந்தானத்தின் சில வசனங்களை தவிர்த்து பாடல்களை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘இனிமே இப்படித்தான்’ செல்லும் சந்தானத்தின் ஹீரோ ட்ராக்!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்