இஞ்சி இடுப்பழகி விமர்சனம்

இடுப்பு… பெண்களை வர்ணிக்கும்போது முக்கியமாக குறிப்பிடும் பகுதி இது. இந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான மாற்றங்கள்தான் படத்தின் மையக்கரு. இதற்காக அனுஷ்கா ஏற்றுக் கொண்ட சவால்களை நாம் அறிந்துள்ளோம். எனவே திரையில் அந்த சவால்கள் எப்படி சாத்தியமாகியுள்ளது என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌகான், ஊர்வசி, பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம், மாஸ்டர் பரத் மற்றும் பலர்.
சிறப்புத் தோற்றங்கள் : நாகார்ஜுனா, ஹன்சிகா, தமன்னா, ரேவதி, ஸ்ரீதிவ்யா, ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால்…
இசையமைப்பாளர் : எம் எம் கீரவாணி, மரகதமணி
ஒளிப்பதிவு : நீரவ்ஷா
படத்தொகுப்பு : ப்ரவின் புடி
இயக்கம் : பிரசாத் வி பொட்டேலேரி,
தயாரிப்பாளர் : பிரகாஷ் கோவலமுடி

கதைக்களம்…

அப்பாவை சிறுவயதிலேயே இழந்துவிட்ட ஸ்வீட்டி அனுஷ்கா. அம்மா ஊர்வசி, தாத்தா அரவணைப்பில் செல்லமாக… ஸாரி குண்டாக வளர்கிறார். இவருக்கு ஒரு தம்பி மாஸ்டர் பரத். (போக்கிரி படத்தில் வரும் உப்புமா ஃமேபிலி தம்பி) அனுஷ்கா ஓவர் குண்டாக இருப்பதால் வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறது.

இதனால் வருத்தம் அடையும் ஊர்வசி, பிரகாஷ் ராஜ் நடத்தும் சைஸ் ஜீரோ கிளப்பில் அனுஷ்காவை சேர்க்கிறார். ஆனால் அங்கு கொடுக்கப்படும் மருந்துகளால் அனுஷ்காவின் தோழி ஜோதி உயிருக்கு போராடிகிறார். இதனால் தன் நண்பர் என்ற காதலர் (பாவம் அவருக்கே குழப்பம்தான்) ஆர்யா உதவியுடன் தோழியை மீட்க அனுஷ்கா போராடும் போராட்டமே மீதிக் கதை.

கதாபாத்திரங்கள்…

ஒட்டு மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார் பப்ளிமாஷ் அனுஷ்கா. எந்த நடிகையும் எடுக்க தயங்கும் குண்டு கேரக்டரை இவர் எடுத்ததற்கே இவருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து கொடுக்கலாம்.

தன்னுடைய கொஞ்சல் கலந்து க்யூட் நடிப்பால் ரசிகர்களை வசியம் செய்கிறார் இந்த 90 கிலோ தாஜ்மகால். சிறுசிறு எக்ஸ்பிரஸன்களிலும் உருகும்போது உள்ளத்தை பதம் பார்க்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளிலும் ஐஸ்கிரீமாய் உருக வைக்கிறார்.

என்னடா அனுஷ்காவை பத்தி ஓவர் பில்டப் பார்க்கிறீங்களா…? மற்ற கேரக்டர்கள் எதுவும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை.

ஆர்யா படத்தில் நடித்திருந்தாலும் இவர் ஹீரோயினுக்கான வேலையை செய்திருக்கிறார். இவர்களுடன் சோனம் சௌகான் தன் வளைவு நெளிவுகளை காட்டி கொஞ்சம் சூடேற்றுகிறார். தாய் பாத்திரத்தில் ஊர்வசி தனித்து நிற்கிறார்.

மேலும்  பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம், மாஸ்டர் பரத், தாத்தா, ஆன்ட்டி ஆகியோருக்கான பாத்திரங்களில் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் மிகப்பெரிய ஆறுதல் நீரவ்ஷா. பாடல் காட்சிகளிலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் தன் கேமரா மூலம் புது வண்ணம் கொடுத்திருக்கிறார்.

ஷாருக்கான் நடித்த ரா ஒன் படத்தின் திரைக்கதை ஆசிரியர் கன்னிகா திலோன்தான் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதி இருக்கிறாராம். அப்படியிருந்துமா இப்படி?

மரகதமணி இசையில் ‘சைஸ் செக்ஸி’ பாடல் ஓகே ரகம். மற்ற பாடல்களை மனதில் ஒட்ட வைத்த வைத்தாலும் ஒட்ட மறுக்கிறது.

படத்தின் ப்ளஸ்…

  • ஸ்வீட்டி அனுஷ்கா
  • நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு
  • கதைக்கரு

படத்தின் மைனஸ்…

  • தெளிவில்லாத திரைக்கதை
  • படத்தின் நீளம்
  • கேரக்டர்களின் அழுத்தமின்மை

படம்முழுவதும் இந்த பப்ளியை சுற்றியே சொல்வதால் கொஞ்சம் போர்தான். இறுதியில் தோழி ஜோதிக்காக போராடும் போராட்டங்கள், ஆர்யா கேர்ள் பிரண்ட் காதல், அனுஷ்கா பாய் பிரண்ட் காதல் என ஜவ்வாக இழுத்துவிட்டார்கள். தெலுங்கு வசனங்களுக்கு உதட்டசைத்துள்ளதால் தமிழ் உதடுகள் ஒட்டவில்லையோ? என்னவோ?

கேம் ஷோக்களில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தும் ரசிகர்கள் ரசிக்கவில்லை. இந்த பப்ளிமாஷ் கதையை ஒன்று காமெடியாக சொல்லியிருக்கலாம் அல்லது சீரியஸாக கூட சொல்லியிருக்கலாம். இரண்டும் கலந்து சொல்ல முடியாமல் தவித்து இருக்கிறார் இயக்குனர்.

ஆக மொத்தம்… இஞ்சி இடுப்பழகி: அழகை விட ஆரோக்கியம் முக்கியம்.

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்