இசை – விமர்சனம்

‘அன்பே ஆருயிரே’ படத்திற்கு பிறகு, அதாவது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்திலும் இசையமைப்பிலும் வெளிவந்திருக்கும் படம் ‘இசை’. இதற்கு முன்பு இவரின் இயக்கத்தில் வெளியான படங்களில் உள்ள ‘சமாச்சாரங்களை’ இதிலும் எதிர்ப்பார்த்து நம்பிக்கையுடன் நீங்கள் செல்லலாம்.

கலைஞர்கள்:

நடிப்பு : எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், சாவித்ரி, தம்பிராமையா, கஞ்சா கருப்பு, அழகம்பெருமாள்

இசை மற்றும் தயாரிப்பு : எஸ்.ஜே. சூர்யா

ஒளிப்பதிவு : சௌந்தரராஜன்

கதை சுருக்கம் : இசை சக்கரவர்த்தி வெற்றிச்செல்வன் (சத்யராஜ்) தமிழ் திரையுலகையே தன் இசையால் தாலாட்டுபவர். இவரது குழுவில் உள்ள ஒருவர்தான் ஏ.கே.சிவா (எஸ்.ஜே.சூர்யா). ஒரு முறை இயக்குனருக்கு ஏற்ற இசையை சத்யராஜ் கொடுக்காத காரணத்தினால், அவர் குழுவில் உள்ள எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாய்ப்பளிக்க முன்வருகிறார் இயக்குனர் அழகம் பெருமாள்.

எஸ்.ஜே. சூர்யா இசையமைத்த முதல் படமே பெரிய ஹிட்டாக, திரையுலகில் தன் இசைக்கொடியை பறக்க விடுகிறார். இவரின் வெற்றியால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தனித்து காணப்படுகிறார் சத்யராஜ்.

இந்நிலையில் இயற்கை சப்தங்களை வைத்து SOUND OF NATURE எனும் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கிட இயற்கை கொஞ்சும் மலைச்சாரல் நிறைந்த பகுதிகளை தேடிச் செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இசை தேடி சென்ற இடத்தில், ஜெனியுடன் (சாவித்திரி) காமம் கொள்கிறார். மன்னிக்கவும் (படக்காட்சிகள் மனச விட்டு இன்னும் போகல. அந்த பீலிங்ஸ்ல சொல்லிட்டோம்) காதல் கொள்கிறார். பிறகென்ன கல்யாண கட்டிக்கொண்டு சென்னை வருகிறார்.

இதற்கிடையில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் வளைத்து போட்டு தன் வில்லத்தனத்தை ஆரம்பிக்கிறார். அதன்பின்பு எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும் தடுமாற்றங்களும்தான் இசையின் மீதி கதை. சத்யராஜ் இழந்து செல்வாக்கை மீட்டாரா? எஸ்.ஜே. சூர்யா தன் புகழை தக்க வைத்துக் கொண்டாரா? என்பதுதான் க்ளைமாஸ்.

முதலில் சத்யராஜ் பற்றி சொல்லியே ஆகவேண்டும். மீண்டும் இவர் வில்லன் வேடத்தில் தொடர இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு அமையாது. ஒரு முன்னணி இசையமைப்பாளராக இருந்து விட்டு பின்பு வாய்ப்பு இல்லாமல் தவிப்பதிலும், விட்ட இடத்தை பிடிப்பதற்கான முயற்சியிலும் தன் முத்திரையை பதித்து இருக்கிறார்.

அதற்கு ஒரு சான்று: தன் உதவியாளரான கஞ்சா கருப்புவிடம் தான் முதல் இடத்தில் இருந்தபோது அவர் தனக்கு எப்படி பணிவிடை செய்தார். இப்போது வாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது எப்படி அலட்சியமாக பணிவிடை செய்கிறார் என்பதை நடித்து காட்டச் சொல்லி கலாய்ப்பது அருமை.

இளம் இசையமைப்பாளர் ஏ.கே.சிவாவாக (இவரின் இன்ஷியல் உங்களுக்கு ஒரு இசையமைப்பாளரை நினைவுப்படுத்தினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல) எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். சத்யராஜின் வில்லத்தனத்தால், சூர்யா படும் அவஸ்தைகள், ‘இருக்கு ஆனா இல்லை’ என்பது போன்ற காட்சிகளில் தன்னை நிருபித்து இருக்கிறார். தனது சொந்த படம். தான்தான் ஹீரோ என்பதால் அடிக்கடி குளோசப்பில் வந்து பயமுறுத்தவும் செய்கிறார்.

படத்தின் நாயகியின் கேரக்டருக்கு வருகிறோம். சதையின் நாயகி.. சாரி.. சாரி.. கதையின் நாயகி சாவித்ரி. தன் அறிமுக பாடலான ‘இசை வீசி… பாடலில் தன் மாராப்பை வீசி எறிந்து, நம் இதயங்களை கொள்ளை கொள்கிறார். மேலும், இதயத்தை இடம் மாற்ற முயலும் காட்சிகள், இடுப்பில் இசை மீட்டும் காட்சிகள் மற்றும் கசக்கும் மருந்தை சுவையாக மாற்ற முயலும் முத்தக் காட்சிகள் போன்றவற்றில் இளைஞர்களை சூடேற்றி இதம் காணுகிறார் இந்த சாவித்ரி. எஸ்.ஜே.சூர்யாவுடன் இவர் இணையும் காட்சிகளை பார்க்கும் போது இசை படத்திற்கு வந்தோமா இல்லை இ(ச்)சை படத்திற்கு வந்தோமா என்ற எண்ணம் பெண்கள் மனதில் நிச்சயமாக இழையோடும்.

ஆனால், இடைவேளைக்கு பிறகு குடும்பபாங்கான நடிப்பிலும் வெளுத்து கட்டியிருக்கிறார் சாவித்ரி. பாதிரியாராக வரும் தம்பி ராமைய்யா எதற்காக இப்படி வசனங்களை ஏற்றி இறக்கி பேசியிருக்கிறார் என்பது தெரியவில்லை. பாதிரியார் இடத்தில் சூர்யா வந்து பாவமன்னிப்பு வழங்கும் காட்சிகளை கிறிஸ்தவர்கள் மன்னிப்பார்களாக என்பது தெரியவில்லை. வேலைக்காரனாக வரும் கஞ்சா கருப்பு, அழகம் பெருமாள் போன்றவர்கள் அவர்களின் பங்களிப்பை சரியாகச் செய்திருக்கின்றனர்.

விரசமான காட்சிகளாக இருந்தாலும், அதை ரசனையுடன் கொடுத்த சௌந்தர்ராஜனின் ஔிப்பதிவை பாராட்டியே தீர வேண்டும். இயற்கையின் சப்தங்களை படம் பிடிக்கும் காட்சிகளில், வண்டு முதல் குழந்தையின் பின்னழகு வரை காட்டி சபாஷ் பெறுகிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் இசையில், மதன்கார்க்கியின் பாடல் வரிகளில் இசை வீசி.. அதோ வானிலே நிலா போகுதே பாடல்கள் தனி சுகம்.

மொத்தத்தில் 3 மணிநேரம் ஓட கூடிய இந்தப்படத்தில் ‘இச்’சை காட்சிகளை நீக்கி விட்டு பார்த்தால் இந்த ‘இசை’ அனைத்து ரசிகர்களையும் தாலாட்டும்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்