இது என்ன மாயம் திரை விமர்சனம்

விக்ரம் பிரபுவும் இயக்குனர் விஜய்யும் முதன் முறையாக இணைந்துள்ள படம். தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே அரை டஜன் படங்களில் ஒப்பந்தமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் வெளியாகும் இவரது முதல் படம் இது. இவர்கள் கூட்டணியின் ‘மாயம்’ ரசிகர்களை என்ன செய்துள்ளது என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : விக்ரம் பிரபு, கீர்த்திசுரேஷ், நவ்தீப், அம்பிகா, நாசர், சார்லி, ஜீவா மற்றும் பலர்
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
இயக்கம் : விஜய்
தயாரிப்பாளர் :  சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்

 

கதைக்களம்…

உன்னால் முடியும் தம்பி (UMT) என்ற நிறுவனம் நடத்தி உண்மையான காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கிறார்கள் விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர்கள். இவர்கள் அதற்காக சில செட்டப்புகள் செய்து ஒரு தொகையை பெறுகின்றனர். எனவே கோடீஸ்வரரான நவ்தீப், தான் காதலிக்கும் மாயா (கீர்த்தி சுரேஷை) தன் காதலில் விழவைக்க இவர்களின் நிறுவனத்தை நாடுகின்றார்.

இதனிடையில் தன்னுடைய பழைய காதலிதான் இந்த மாயா என்பதால் முதலில் மறுக்கும் விக்ரம் பிரபு பிறகு சம்மதிக்கிறார். ஆனால் மீண்டும் கீர்த்தியை சந்திக்கும் போது காதல் கொள்வதால் ஒரு திட்டம் தீட்டுகிறார். இதனையறிந்த நவ்தீப் என்ன செய்கிறார்? யாருடைய காதலை கீர்த்தி ஏற்றுக் கொண்டார் என்பதே கதை..

 

கதாபாத்திரங்கள்…

ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் விக்ரம் பிரபு இதில் ரொமான்ஸ் பாதைக்கு திரும்பியிருக்கிறார். அதில் பாஸ் மார்க் பெற்றுள்ளார். ஆக்ஷன் வரும் அளவுக்கு இன்னும் காதல் வரவில்லை. காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் நேரத்தில் காதலில் இயக்குனர் ட்விஸ்ட் வைத்துவிட்டதால் அத்தோடு முடிந்து போகிறது.

கீர்த்தி சுரேஷின் முதல் படம் இது. படம் முழுவதும் மாடர்னாக வந்து மயக்குகிறார். இனி இளைஞர்களின் கனவுகன்னி லிஸ்ட்டில் இவரது பெயரும் இருக்கும். ஏற்கெனவே தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால் வசனங்களை நிறுத்தி நிதானமாக பேசுகிறார். டீன்ஏஜ் பெண்களிடம் உள்ள யதார்த்த கலகலப்பு இவருக்கு மிஸ்ஸிங்.

விக்ரம் பிரபுவின் நண்பர்களாக வரும் ஆர் ஜே பாலாஜி, ஜீவா என அனைவரும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சார்லி சில காட்சிகளே வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார்.

இவர்களுடன் நாசர், அம்பிகா, காவ்யா ஷெட்டி, பாலாஜி வேனுகோபால் உள்ளிட்ட அனைவரும் அவரவர் பாத்திரமறிந்து நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் இரண்டு மெலோடி பாடல் அருமை. அதிலும் இருக்கிறாய் பாடல் மனதில் இருக்கும். பாடலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் மிக அருமை. உருவமும் நிழலும் காதல் கொள்வது அருமையான கவிதை. மச்சி… மச்சி பாடலில் நடனத்தில் வித்தியாசம் காட்டியுள்ளனர். வாழ்த்துக்கள்.

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அருமையான காதல் கதையை தந்துள்ளார். காலேஜ் வாழ்க்கையும் அந்த விளையாட்டு போட்டிகளும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன. ரொமான்ஸ் படத்தை ஏன் இவ்வளவு ஸ்லோவாக எடுத்தார் எனத் தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் உணவு முதல் காதல் வரை பாஸ்ட் புட் போல வேகமாக எதிர்பார்க்கின்றனர். எனவே எல்லாம் இளைஞர்களையும் கவருமா? என்பது சந்தேகமே.

வசனங்களில் பளிச்சிடுகிறார் இயக்குனர் விஜய். முக்கியமாக நாசர் தன் கடந்த காதலையும் திருமணத்தையும் கூறும் காட்சிகளில் பளிச்சிடுகிறார்.

மொத்தத்தில் இது என்ன மாயம்… காதல் செய்யும் மேஜிக்…

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்