இவனுக்கு தண்ணில கண்டம்

சின்னத்திரை நடிகர் தீபக் அறிமுகமாகியிருக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ இவர் சின்னத்திரை நடிகர் என்பதால் படத்தின் மையக்கருவும் சின்னத்திரை சுற்றியே சுழல ஆரம்பிக்கிறது.

கலைஞர்கள் விவரம்
தீபக், நேகா, சென்ட்ராயன், குமரவேல், நான்கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்.
இசை : ஏ7
ஒளிப்பதிவு : ஆர். வெங்கடேசன்
படத்தொகுப்பாளர் : ஏ.எல். ரமேஷ்
எழுத்து & இயக்கம் : எஸ்.என்.சக்திவேல்

சென்னைக்கு வந்து தனது ஊர் நண்பர்களான சென்ட்ராயன் மற்றும் குமரவேல் ஆகியோருடன் தங்கி முன்னணி தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்கிறார் தீபக். பெரிய ஸ்டாராக வரவேண்டும் என்பதால் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அதுநிறைவேறாமல் போக பணக்கார பெண்ணை திருமணம் செய்தால் சொந்த சேனல் தொடங்கி விடலாம் என்பதால் ஐந்து லட்சம் வட்டிக்கு வாங்குகிறார்.

மணப்பெண் ஓடிவிட, தலைக்கு மேல் கடன் சுமையேற, வாழ்க்கையில் முன்னேற முடியாத விரக்தியில் நண்பர்களுடன் சரக்கடிக்க, அன்றுமுதல் ஆரம்பாகிறது ‘இவனுக்கு தண்ணில கண்டம்’

சின்னத்திரை நடிகர்கள் பெரிய திரைக்கு வந்து வெற்றிப்படி ஏறும் நேரமிது. சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் தற்போது தீபக் இணைந்துள்ளார். முதல் படத்திலேயே நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார்.

தீபக்கின் நண்பர்களாக வரும் சென்ட்ராயனும், குமரவேலுவும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். சென்ட்ராயனும் தன் பங்குக்கு காதல் காட்சிகளில் சென்ட்சுரி அடித்திருக்கிறார்.

கதாநாயகி நேகா கதையின் நாயகியாக தன் திறமைக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், சுவாமிநாதனும் சிறிது நேரமே வந்தாலும் நம்மை வயிறு வலிக்க சிரிக்கவிட்டு பதம் பார்க்கின்றனர்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் மொட்டை ராஜேந்திரன். ஸாரி ஸாரி ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். (இரண்டும் ஒன்றுதானே…) ‘டார்லிங்’ படத்தில் கோஸ்ட் கோபால் ஆக வந்த மனிதர் இதிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்தை திரையில் ஓட விட்டு இவர் பின்னணி வாய்ஸ் கொடுத்து என்ட்ரி ஆவது செம சூப்பர்.

இவர் இல்லாவிட்டால் படம் எப்படி இருந்திருக்கும் என்பதை ஆராய நேரமில்லை. தொடர் காமெடியை வாரி வழங்கியிருக்கிறார். திட்டமிட்ட கொலைகள் தானாகவே நடக்க, அதை நினைத்து அழும்போது முகபாவனையில் பவுண்டரி தொட்டிருக்கிறார்.

இரண்டு குத்து பாடலிலும் யார் இந்த இசையமைப்பாளர் என்று கேட்க வைக்கிறார் இசையமைப்பாளர். கானா பாலா பாடலில் ‘எப்பவுமே…’ பாடல் தண்ணி ரகம். ஸாரி தனி ரகம். பின்னணி இசை பரவாயில்லை. ஆர்.வெங்கடேஷின் ஒளிப்பதிவு நன்றாகவே உள்ளது.

இயக்குனர் சக்திவேல் காமெடியை நம்பி களம் இறங்கியிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். நிச்சயமாக இவருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

‘இவனுக்கு தண்ணில கண்டம்’ நிச்சயம் காமெடி ‘கிக்’ ஏற்றும்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்