ஜிகினா

‘என்னமோ நடக்குது’, ‘தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்’ படங்களை தொடர்ந்து விஜய் வசந்த் நடித்துள்ள படம் ‘ஜிகினா’. இந்த கலர்புல் ஜிகினா இவருக்கு வண்ணங்களை கொடுக்குமா என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : விஜய் வசந்த், சானியா தாரா, சிங்கம் புலி, ரவி மரியா, ‘கும்கி’ அஸ்வின், குட்டி ஸ்ரீதேவி உள்ளிட்டோர்
இசையமைப்பாளர் : ஜான் பீட்டர்ஸ்
ஒளிப்பதிவு : பாலாஜி ரங்கா
இயக்கம் : ரவி நந்தா பெரியசாமி
தயாரிப்பாளர் : திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி

கதைக்களம்

கால் டாக்ஸி ஓட்டுபவர் பாவாடை (விஜய் வசந்த்). இவருக்கு தன் பெயரும் பிடிக்கவில்லை, தன் நிறமும் பிடிக்கவில்லை. பின்னர் ஒரு நாள் ஐடி துறை நண்பர்களான ‘கும்கி’ அஸ்வின், ‘டவுட்’ செந்தில் மூலம் முகநூல் (FACE BOOK) குறித்து அறிகிறார்.

தன் அழகிய நண்பரின் புகைப்படத்தை புரொபைல் போட்டோவாக வைத்து நாயகியுடன் சாட்டிங் செய்து காதல் கொள்கிறார். நாயகி சானியா தாராவும் காதலிக்கிறார் ஆனால் வேறு ஒருவரை. அப்படியென்றால் இவருடன் முகநூலில் சாட்டிங் அந்த பெண் யார்? என்பதை பல முடிச்சுகளுடன் சிக்கலாக்கி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கதாபாத்திரங்கள்…

விஜய் வசந்த் கதையின் நாயகன். இது அவருக்கு ஏற்ற கதைதான். நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் ‘கும்கி’ அஸ்வின் சொல்வது போல முக பாவனைகள் வர மறுக்கிறது. அவர் அழுகும் காட்சிகளில் நமக்கு சிரிப்பு வருகிறது. அதுவும் க்ளைமாக்ஸ்….

நாயகி சானியா தாரா… சிரிக்கிறார்.. தலையை கோதுகிறார்.. சிரிக்கிறார் அழுகிறார்…. காதலர்கள் பேசும்போது சிரிக்க வேண்டியதுதான். அதற்காக மொக்க ஜோக்கை அடித்து சிரிக்க சொல்வது. இன்னொரு காதல் ஜோடியும் உள்ளது. இரண்டு காதலையும் மாற்றி.. மாற்றி… ஒன்றும் சொல்வதற்கில்லை.

இவர்களுடன் ரவி மரியா, சிங்கம் புலி, ‘கும்கி’ அஸ்வின், ‘டவுட்’ செந்தில் என பலரும் படத்தில் உண்டு. காமெடி மருந்தளவிலும் இல்லை.

படத்தில் சற்று ஆறுதல் ஜான் பீட்டர்ஸின் பாடல்கள். ‘ரோசாப்பூ ரவிக்கை காரி…’, ‘பூமி சுத்துது… ’ பாடல் கேட்கலாம். ‘காதலோடு உன் வாசம்…’ பாடல் நல்ல மெலோடி என்பதற்காக படத்தில் அடிக்கடி பாடலை காண்பித்து ரசிகர்களை வெளியே அனுப்பி விட்டார்கள்.

பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவில் நாயகியை கொஞ்சம் அழகாக காட்டியிருக்கிறார். தற்கொலை செய்யப் போகும் இடம், அந்த கொடைக்கானல் சாலை பகுதிகள் மனதிற்கு இதம்.

பேஸ்புக்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் உண்மையான முகத்துடன் அறிமுகமாவதில்லை என்பதை அப்பட்டமாக சித்தரித்திருக்கிறார். உண்மையான காதல், நிறம், அந்தஸ்து பார்ப்பதில்லை. அதற்கு அழிவே இல்லை என்பதை நாடகத்தனமாக சொல்லிவிட்டார். சொன்ன விதம் போராடித்தாலும் சொன்ன கருத்துக்காக ஒரு சபாஷ்…

மொத்தத்தில் வண்ண ஜிகினா… சாயம் வெளுத்துப் போச்சு!

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்