ஜில் ஜங் ஜக் விமர்சனம்

சித்தார்த் தயாரித்து ஹீரோயின் இல்லாமல் நடித்திருக்கும் படம் ‘ஜில் ஜங் ஜக்’. ஏற்கெனவே, படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் படம் ஜில்? அல்லது ஜக்? என்பதை பார்ப்போம்..

நடிகர்கள் : சித்தார்த், ராதாரவி, அவினாஷ் ரகுதேவன், சனந்த், அமரேந்திரன், சாய் தீனா, பகவதி பெருமாள், நாகா, பிபின், ஜாஸ்மின் பாஸின் மற்றும் பலர். கௌரவ தோற்றத்தில் நாசர், ஆர் ஜே பாலாஜி.
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்பு : குருட்ஸ் ஸ்னைடர்
இயக்கம் : தீரஜ் வைத்தி
தயாரிப்பாளர் : சித்தார்த்

கதைக்களம்..

மிக பெரிய கடத்தல் மன்னனான தெய்வா, ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து நிற்கிறார். இறுதியாக அவரிடம் உள்ள கொக்கைன் போதை பொருளை வெளிநாட்டு நபரிடம் ஒப்படைக்க 3 புதிய இளைஞர்களை தேர்ந்தெடுக்கிறார். அவர்கள்தான் ஜில் ஜங் ஜக்.

அந்த போதை பொருளை காரில் பெயிண்ட் அடித்து, அதில் இருந்து மீண்டும் எடுக்கும் வகையில் அவர்களிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் தெய்வா ஆட்களே இந்த ரகசியம் தெரிந்துக் கொண்டு அவர்களை வழியிலே மடக்கி விடுகின்றனர்.

அதன்பின்னர் இந்த 3 இளைஞர்களும் என்ன செய்தார்கள்? எப்படி தப்பித்தார்கள்? சரக்கை சரியாக ஒப்படைத்தார்களா? என்பதே மீதிக்கதை.
கதாபாத்திரங்கள்…

சித்தார்த் (ஜில்) வித்தியாசமான முறையில் தன்னுடைய ஹேர் ஸ்டைல் மற்றும் தாடி, மீசை என ஸ்மார்ட்டாக வருகிறார். ஹீரோயின் வேண்டாம், வரிவிலக்கு வேண்டாம் என்றபடியே தில்லாக இறங்கியுள்ளார். படத்தில் இவரது வாய்ஸ் ஓவர் ஸ்லாங் நன்றாகே கை கொடுத்துள்ளது.
இவரின் நண்பர்களாக அவினாஷ் (ஜங்) சனந்த் (ஜக்) இருவரும் மாறி மாறி படத்தை ஓட்ட வைக்கின்றனர். ஒரு காட்சியில் அவர் முந்தினால், மறுகாட்சியில் இவர் முந்துகிறார்.

ரோலக்ஸ் ராவுத்தராக ராதாரவி.. தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்திருக்கிறார். ஆனால், ஒரு சிறந்த நடிகரை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம்.

இதுபோன்ற காமெடியான சப்ஜெக்டில் நாசர், ஆர் ஜே பாலாஜி இருவரும் இருந்தும் சில நிமிடங்களில் அவர்களுடைய சப்ஜெக்டையே க்ளோஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றி விட்டனர்.

வில்லன் தெய்வா, மருந்து பகவதி பெருமாள், அட்டாக் சாய் தீனா ஆகியோர் தங்கள் பணிகளை நிறைவாக செய்துள்ளனர். இதில் பை என்ற கேரக்டரில் வரும் பிபின் தன் குரலால் ரசிகர்களை அதிகம் கவர்கிறார். (டப்பிங் யாரோ?) நாம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி கேட்டு பழகி போன அதே டபுள் மீனிங் வாய்ஸ்தான். ஆனால் படத்திற்கு பெரிய பலமாக இது அமையும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்களை விட பின்னணி இசை பெரிதும் பேசப்படும். காட்சிகளுக்கு தேவையானதை கொடுத்திருக்கிறார்.

படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவு. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் சாலையோர காட்சிகள், க்ளப் காட்சிகள் பேண்டஸி கதைக்களத்திற்கு நம்கை கொண்டு செல்லும்.

தற்போது வரும் பெரும்பாலான படங்களில் பெரும் குறையாக தெரியும் எடிட்டிங்கே இதிலும் குறையாக உள்ளது. குருட்ஸ் ஸ்னைடர் கத்திரி போடாமல் நம் பொறுமையை சோதிக்கிறார்.

படத்தின் ப்ளஸ்…

  • ஒளிப்பதிவு.
  • பின்னணி இசை
  • வித்தியாசமான உருவாக்கம்

படத்தின் மைனஸ்…

  • ஹீரோயின் இல்லாததது குறையே.
  • படத்தின் நீளம்
  • படம் முழுவதும் ஒரே கௌபாய் காஸ்ட்யூம்.

தீரஜ் வைத்தி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களம் என்று சொல்ல முடியாவிட்டாலும் படமாக்கப்பட்ட விதம் வித்தியாசம்தான். 2019ஆம் ஆண்டில் படம் நடக்கும்படியாக உள்ளது. முக்கியமாக ஆங்கில படத்தில் காண்பது போன்ற கலர் டோன்கள் நிச்சயம் இளைஞர்களை கவரும்.

இதுபோல கடத்தல் கதையில் ஒரு சேஸிங் ஆக்ஷன் இருந்தால் இன்னும் ஜில்லாக இருந்திருக்கும். மாறாக காமெடி இருந்தாலும் படம் முழுவதும் இல்லை என்பது வருத்தமே. ஆர் ஜே பாலாஜியின் கேரக்டரை டெவலப் செய்திருந்தால் இன்னும் கவனிக்க வைத்திருக்கலாம்.

மிகவும் பாப்புலரான சூட் தி குருவி பாடலை படத்தின் இடையில் சொருகி இருந்தால் கூடுதல் பலம் கிடைத்திருக்கும். தியேட்டரை விட்டு அனைவரும் எழுந்தபின் ஏன் அந்த பாடல்?

படத்தின் அனைத்து கேரக்டர்களின் பெயர்களும் ஏதோ பட்டப்பெயர் என்றே தோன்றுகிறது. அதுவும் வித்தியாசமா..??

மொத்தத்தில் ‘ஜில் ஜங் ஜக்…’ சிட்டி இளைஞர்களுக்கான ஜில்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்