ஜித்தன் 2 விமர்சனம்

வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. அதில் மறைந்து போகும் மாய மனிதனாக வந்த ரமேஷ், இதில் பேயுடன் போராடுகிறார். அந்த போராட்டத்தை பார்த்து வருவோமா..?

நடிகர்கள் : ஜித்தன் ரமேஷ், ஸ்ருட்டி டாங்கே, கருணாஸ், மயில்சாமி, யோகிபாபு, ரோபா சங்கர், சுவாமிநாதன், சோனா மற்றும் பலர்.
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : எஸ் கே மிட்சல்
படத்தொகுப்பு : மாருதி க்ரிஷ்
இயக்கம் : ராகுல்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : ஆர்பிஎம் சினிமாஸ் (ராகுல்)

கதைக்களம்…

ஜித்தன் முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. தனது தந்தை ஆசைப்பட்ட மாதிரியே ஒரு அழகான வீட்டை ரூ. 50 லட்சத்திற்கு வாங்குகிறார் சூர்யா (ஜித்தன் ரமேஷ்).

ஆனால் அதில் இருக்கும் பேய் இவரை துரத்த நினைக்கிறது. எனவே இவர் வீட்டை விற்க முயல்கிறார். எனவே பேய் வீட்டை வாங்க வருபவர்களையும் விரட்டுகிறது.

பின்னர் பேயுடன் பேசும் ரமேஷ், அதன் கோரிக்கையை கேட்கிறார். பேயின் கோரிக்கை என்ன..? அதை ஹீரோ நிறைவேற்றினாரா? என பல கேள்விகளுக்கு படம் விடை சொல்கிறது.

கதாபாத்திரங்கள்..

ஜித்தன் ரமேஷ், ஒரு பாடலுக்கு ஆடி, சில காட்சிகளில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

ஸ்ருட்டி டாங்கே கவர்ச்சி பதுமையாக வருகிறார். இருட்டில் பல் எடுப்பாக வரும் பேய் யார்? இவர் யார்? என்பதற்கான விளக்கம் படத்தில் இல்லை.

சோனா ஓரிரு காட்சிகளில் வந்து கவர்ச்சியான தரிசனம் தருகிறார். ஜித்தன் காதலியாக வரும் நாயகி என்ன ஆனார்? எதற்கு வந்தார்? எதுவும் தெரியவில்லை.

ஆந்திரா ரவுடியாக வரும் யோகிபாபு கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும், தூங்கி கொண்டிருக்கும் ஆடியன்ஸை எழுப்ப உதவுகிறார்.

இவர்களுடன் கருணாஸ், ரோபா சங்கர், மயில்சாமி, லொள்ளு சபா சுவாமிநாதன் என பலர் இருந்தாலும் அவர்களுக்கான படம் இது இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் டைட்டில் கார்டு போர்டும் போதே பின்னணி இசை எரிச்சல் ஊட்டுகிறது. அதன்பின் கேட்க வேண்டுமா என்ன…?

எஸ் கே மிட்சலின் ஒளிப்பதிவு மற்றும் மாருதி க்ரிஷின் எடிட்டிங் ஆகியவை சொல்லும்படியாக இல்லை.

படத்தின் ப்ளஸ்…

  • ஒரே ஒரு குத்துப் பாடல்.
  • யோகிபாபுவின் காமெடி காட்சிகள்

படத்தின் மைனஸ்…

  • முதல் பாக தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. அதில் காதலிக்காக பைத்தியமாக ஏங்குபவருக்கு ஏன் இந்தப் படத்தில் இன்னொரு காதலி.
  • பேய் சில பேர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் ரகசியம் என்ன? அதற்கான விளக்கம் என்ன ஆனது?
  • பேய்யை தொடமுடியாது என்பது போல் பல காட்சிகளை வைத்துவிட்டு க்ளைமாக்ஸில் கை குலுக்குவது எப்படி..?
  • இரைச்சலின் உச்சம் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை.
  • பேயுடன் மயில்சாமி பேசி, அழைத்துச் செல்வது காதில் பூ சுற்றும் காட்சிகள்.
  • தந்தையுடன் கஷ்டப்படும் ரமேஷ், எப்படி ரூ. 50 லட்சம் வீட்டை வாங்கினார். அவர் என்ன வேலை செய்கிறார்..?

இயக்குனர் ராகுல் இடைவேளை வரை ஏதோ சொல்ல வருகிறார். அதன்பின்னர் ஏதோ சொல்லி படத்தை முடிக்கிறார். க்ளைமாக்ஸ் அடுத்த தொடர்ச்சியுடன் முடிகிறது.

மொத்தத்தில் ஜித்தன் 2… சொல்ல ஒன்றுமில்லை…!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்