36 வயதினிலே

ஜோ இஸ் பேக். திருமணத்திற்கு பிறகு ஜோதிகாவின் ரீஎன்ட்ரி படம். குடும்ப வாழ்வில் சிக்கிக்கொண்ட இவரிடம் பழைய ஆற்றல் இருக்கிறதா? தொடர்ந்து வாய்ப்புகள் வருமா? என்பதை பார்ப்போம்…

நடிகர்கள்: ஜோதிகா, ரகுமான், டெல்லி கணேஷ், அபிராமி, தேவதர்ஷினி, அமிர்தா, ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர்
ஒளிப்பதிவு: திவாகரன்
வசனம்: விஜி
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: ரோஷன் ஆன்ட்ரூஸ்
தயாரிப்பு: சூர்யா

கதைக்களம்…

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 36 வயதான வசந்தி (ஜோதிகா) ஒரு அரசாங்க ஊழியர். கல்லூரி காலங்களில் சுதந்திரப் பெண்ணாகவும், எதையும் எதிர்க்க துணிந்த தைரியமாக இருந்த இவர், திருமணத்திற்குப் பிறகு கணவன், மகள், மாமனார், மாமியார் ஆகியோருக்காக தன் அடையாளத்தை தொலைத்து, சீரியல் பார்த்துக் கொண்டு வாழ்கிறார்.

தன் மனைவி என்ற சொல்ல வெட்கப்படும் கணவர் ரகுமான். தன் அம்மா என்ற சொல்வதற்கு கூச்சப்படும் மகள் அமிர்தா. ஒரு சூழ்நிலையில் தங்கள் லட்சிய கனவை நிறைவேற்ற இருவரும் அயர்லாந்து நாட்டிற்குச் செல்கின்றனர்.

இந்நிலையில் தன் கல்லூரி தோழி அபிராமியை சந்திக்கிறார் வசந்தி. உன் அடையாளம் எங்கே? எனக்கு பழைய வசந்தியை பார்க்க வேண்டும் என அபிராமி கேட்கிறார். தொலைந்த தன் அடையாளத்தை மீட்டெடுக்கவும் தன் கணவன், மகளின் அலட்சியத்தை மாற்ற ஒரு சமூகப் புரட்சி செய்கிறார்.

என்ன செய்தார் வசந்தி? குடும்பம் மற்றும் சமூகத்தில் அந்தஸ்தைப் பெற்றாரா? என்பதே இப்படத்தின் முழுக்கதை.

கதாபாத்திரங்கள்…

கதையின் நாயகி, நாயகன் அனைத்தும் ஜோ மயமே. கதாபாத்திரங்கள் என்று சொல்வதைவிட இவர் ஒருவரை மட்டுமே சொல்லலாம். இவர் இல்லாத காட்சிகள் இல்லை. வெல்கம் ஜோ.

குடியரசு தலைவரை இருமுறை சந்திக்கும் காட்சிகளில் சபாஷ் பெறுகிறார். முதல் சந்திப்பில் கண்களில் பயத்தை கொண்டு கதை சொல்லியிருக்கிறார். தன் மகள் இன்னொரு வசந்தியா வளரக்கூடாது என்று கணவர் சொன்னதை தோழியிடம் சொல்லும்போது கண்கலங்க வைக்கிறார்.

கணவனாக ரகுமான். மகளாக அமிர்தா இருவரும் ஜோவை அலட்சியப்படுத்தும் போதும் பெருமைப்படும் போதும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மகள் அமிர்தா இன்றைய 13 வயது சிறுமிகளின் எண்ணங்களையும் அவர்களின் செயல்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

தன் மனைவிக்கு ஒன்றும் தெரியாது என நினைக்கும் கணவனும், தன் அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது என அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு மகளும் இப்படத்தை பார்த்த பின் கொஞ்சமாவது மாறினால் அதுவே இயக்குனருக்கு கிடைத்த வெற்றி.

அலுவலக தோழியாக வரும் தேவதர்ஷினியும், கல்லூரி தோழியாக வரும் அபிராமியும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், பஸ் பாட்டி, அலுவலக நண்பர்கள் உள்ளிட்டோர் கேரக்டகளுக்கேற்ப தங்கள் பணியை செய்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘வாடி ராசாத்தி…’ பாடல் பெண்களை நிச்சயம் கவரும். இனி அவர்களது காலர் டியூனாக கூட மாறலாம். திவாகரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பல இடங்களில் கைத்தட்டல்களை பெறுகிறார் வசனகர்த்தா விஜி. வாழ்த்துக்கள்.

எந்த ஒரு மசாலா ஐட்டங்களை நம்பாமல் திரைக்கதை மட்டுமே நம்பிய இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸை பாராட்டலாம். ஹவ் ஓல்டு ஆர் யூ? என்ற ஒரிஜினல் மலையாள படத்தை தந்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் சில மாற்றங்களை தந்து ரசிக்கும்படியாக தந்திருக்கிறார்.  சில காட்சிகளில் சீரியல் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது.

ஒரு பெண்ணின் உணர்வுகள் மட்டுமல்லாது சமூகத்தில் இன்று நிலவும் பூச்சி மருந்து உணவு முறையையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார். வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நல்ல உணவை வழங்கிட வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு ஹேட்ஸ் ஆஃப்.

தொலைந்து போன வசந்தியை மட்டுமல்ல தமிழ் சினிமா தொலைத்த ஜோதிகாவையும் திரும்ப கொண்டு வந்திருக்கிறார் தயாரிப்பாளர் சூர்யா.

36 வயதினிலே – ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்