காக்கி சட்டை

‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றிக் கூட்டணி காக்கி சட்டை படத்திலும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பில் படம் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ராசியான ஜோடி ஸ்ரீதிவ்யாவும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளதே நிதர்சன உண்மை.

கலைஞர்கள் விவரம் :

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு,  மனோபாலா, இமான் அண்ணாச்சி, மயில்சாமி மற்றும் பலர்.
ஒளிப்பதிவு : சுகுமார்
பாடல்கள் : நா. முத்துக்குமார், யுகபாரதி, அருண் ராஜா காமராஜ், ஆண்டனி தாசன்
இசை :  அனிருத்
தயாரிப்பு : தனுஷ்
இயக்கம் : துரை செந்தில்குமார்

சிறுவயதிலேயே காவல்துறை அதிகாரியான தன் தந்தையை இழந்த மதிமாறன் (சிவகார்த்திகேயன்), தன் வாழ்நாள் லட்சியமாக காவல் துறையில் கான்ஸ்டபிளாக சேர்கிறார். ஆனால், அவர் கனவில் கண்ட நேர்மை, கடமை இதையெல்லாம் அவரால் காவல்துறையில் காண முடியவில்லை.

போலீஸ் குற்றவாளிகளை பிடிப்பதும் அவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு செல்வதும், பொய் சாட்சியங்களை கைது செய்வதும், சில உயர் அதிகாரிகளே சட்டத்திற்கு மாறாக நடந்து கொள்வதும்… இப்படியாக காவல்துறையில் நடைபெறும் அக்கிரமங்களை கண்டு வெறுத்துப் போகிறார். இதுகுறித்து தன் உயர் அதிகாரியான பிரபுவிடம் தட்டி கேட்க அப்போது, நீ ஒருமுறை அனைத்து ஆதாரங்களோடு ஒரு பவர்ஃபுல் கேஸை பிடித்துக் கொண்டு வா, அப்போது உனக்கு துணை நிற்கிறேன் என்கிறார்.

அதுபோல சிவகார்த்திகேயனும் நர்ஸாக பணிபுரியும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து மனித உடல் உறுப்புகளை திருடும் சர்வதேச கும்பலை பிடிக்க முற்படுகிறார். அவருக்கு காவல்துறை உதவி புரிந்ததா? ஆதாரங்களை நிரூபித்தாரா? உயர் பதவிகளை அடைந்து நேர்மையாக பணிபுரிந்தாரா? என்பதற்கு காக்கி சட்டை விடை சொல்லும்.

இதுவரை காதல் பாதி, காமெடி பாதி என்றிருந்த சிவகார்த்திகேயன், இப்படத்தின் மூலமாக காதல் பாதி, ஆக்ஷன் மீதி என்று கலக்கியிருக்கிறார். அசத்தலான ஆரவாரத்தோடு அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். முதல்பாதி முழுவதும் ரகசிய போலீஸ் போல செயல்படுவதால், காக்கி சட்டை அணியாமல் கலர்புல்லாக வந்திருக்கிறார். ஆனாலும் அணியும் காட்சிகளில் இவருக்கு காக்கி சட்டை பொருத்தமாகவே உள்ளது. ஆனால் இவரது குரலில்தான் அதற்கான கம்பீரம் குறைவாகவுள்ளது.

ஆக்ஷன் படத்தில் ஹீரோயினுக்கு என்ன வேலை இருக்க போகிறது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். கதாநாயகனுக்கு உதவி செய்வதால் கதையோடும் காதலோடும் வந்து செல்கிறார் ஸ்ரீதிவ்யா. ஆனால் கொஞ்சம் சீரியஸ் நர்ஸாகவே வந்து செல்கிறார். (நர்ஸ்ன்னா அப்படித்தான் இருக்கனுமோ?) சில காட்சிகள் அதிக மேக்கப் தெரிகிறது. குறைத்திருக்கலாம்.

இமான் அண்ணாச்சியும் ஹீரோவோடு கான்ஸ்டபிளாக வருவதால், இருவரும் இணைந்து சில காட்சிகளில் மட்டும் காமெடி செய்திருக்கிறார்கள். (ஆக்ஷன் படத்தில் காமெடி வேண்டாம் போல?)

இன்ஸ்பெக்டராக வரும் பிரபுவும் கலர் சட்டையோடு வந்து செல்கிறார். நேர்மையாக இருக்க முடியாமல் தவிப்பதும் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதும் இவரது நடிப்பில் கட்சிதம்.

அரசியல்வாதியாக வரும் மனோபாலா, அம்மாவாக வரும் கல்பனா, திருடனாக வரும் மயில்சாமி உள்ளிட்டோர் அவரவர் கேரக்டர்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கும் விஜய் ராஸ் இப்படத்தில் ரொம்ப மிரட்டாமல், நிறைவாக செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இதிலும் பாடல் மற்றும் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயனோடு இணைந்து பாடியிருக்கும் ஐயம் சோ கூல் பாடலில் இருவரும் தாளம் போட வைக்கின்றனர். யுகபாரதி வரிகளில் காதல் கண் கட்டுதே பாடலும் அதனை படமாக்கிய விதமும் அருமை. சுகுமாரின் ஒளிப்பதிவில் சில காட்சிகளில் தடுமாற்றம் தெரிந்தாலும் இந்தப்பாடலில் லொக்கேஷன் ஸ்ரீதிவ்யாவை போல் அழகாக இருக்கிறது.

‘எதிர்நீச்சல்’ படம் தந்த துரை செந்தில்குமார், கதாநாயகனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கும் கொடுத்திருக்கலாம். அலெக்ஸ் பாண்டியன், ஆறுசாமி, துரைசிங்கம் போன்ற கதாபாத்திரங்களை கண்முன் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். படமாக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தபோதிலும் ஏற்கெனவே பார்த்த கதையாக இருப்பதால் சற்று தளர்வு வருகிறது.

முன்பெல்லாம் போலீஸ் கதை என்றால், கடத்தல், கஞ்சா, கொலை என்றிருக்கும். இப்பொழுதுதெல்லாம் உடல் உறுப்பு திருட்டு போன்ற கதைகள் நிறைய வருகிறது என்பதை இயக்குனர் மறந்துவிட்டார் போலும்.

சினிமாவில் நுழைந்த சிலவருடங்களிலேயே சிவகார்த்திகேயனுக்கு காக்கி யூனிஃபார்ம் அணிந்து பார்க்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர் தனுஷை பாராட்டியாக வேண்டும். சிவகார்த்திகேயனும் நண்பரின் ஆசையை நிறைவேற்றி வெற்றிமாலையிட முயற்சித்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ‘காக்கி சட்டை’க்கு வழக்கமான மாமூல் கிடைக்கும்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்