காக்கா முட்டை திரை விமர்சனம்

நடிகர் தனுஷ்-இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் வந்திருக்கும் படம் ‘காக்கா முட்டை’. படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளையும், தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. அப்படி என்னதான் உள்ளது இந்த காக்கா முட்டையில் என்று பார்ப்போமா?

காக்கா முட்டையின் கதைக்களம்

விக்னேஷ் (பெரிய காக்கா முட்டை), ரமேஷ் (சின்ன காக்கா முட்டை) இருவரும் சேரியில் வாழும் ஏழை சிறுவர்கள். இவர்களின் அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்களுக்கு காக்கா முட்டையை உடைத்து குடிப்பது வழக்கம். ஒரு நாள் இவர்கள் வசிக்கும் தெருவின் அருகே பீட்சா கடை திறக்கப்படுகிறது.

வாழ்க்கையில் ஒரு நாளாவது அந்த பீட்சாவை சுவைத்திட வேண்டும் என்பதால் 300 ரூபாயை சிறுக சிறுக சேமிக்கின்றனர். பணம் சேர்ந்ததும் கடைக்கு செல்கின்றனர். ஆனால் அவமானப்படுத்தப்பட்டு திரும்புகின்றனர். இந்த காட்சி ஒருவரால் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அதன்பின் நடக்கும் சம்பவங்களே கதை. அவர்கள் பீட்சாவை சுவைத்தார்களா? அதன்பின் என்ன நடந்தது?

காக்கா முட்டையின் கதாபாத்திரங்கள்…

பீட்சா வாங்குவது அவ்வளவு கஷ்டமா? அப்படி என்ன படத்தில் சொல்லியிருக்க போகிறார்கள் என்று டிரைலர் பார்க்கும்போது பலர் நினைத்திருக்கலாம். அவர்களின் எண்ணத்தில் காக்கா ‘நாசம்’ செய்துவிட்டது என்று அடித்து கூறலாம்.

விக்னேஷ், ரமேஷ் இருவருமே நடிக்கவில்லை. கதைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்கள். படுக்கும்போது பாயில் சிறுநீர் போவதாகட்டும், வீட்டிற்கு புது டிவி வந்தவுடன் அவர்கள் மகிழ்வதாகட்டும், இவர்களுக்கு ஒரு பணக்கார சிறுவன் எச்சில் பீட்சா கொடுக்கும்போது அதை மறுத்து உழைத்துதான் பீட்சா வாங்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணங்களாகட்டும் இப்படி நிறைய நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எதையும் விட்டு வைக்கவில்லை கேரக்டர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

படத்தின் முற்பகுதியில் சிறியதொய்வு ஏற்பட்டாலும் இந்த சிறுவர்கள் படத்தினை தாங்கி நிற்கின்றனர். சிறிய சிறிய வசனங்கள், குறும்புத்தனங்கள் மூலம் நம் வீட்டு பிள்ளையாக இருவரும் மாறிவிடுகின்றனர்.

எந்த ஹீரோயினும் செய்ய தயங்கும் கேரக்டர். ஐஸ்வர்யா ராஜேஷ் துணிந்து நடித்திருக்கிறார். நிச்சயமாக இவருக்கும் ஒரு விருது கொடுத்திருக்கலாமே என்று எண்ணத்தோன்றுகிறது. ஹேட்ஸ் ஆப் ஐஸ்வர்யா.

திருடுதல், ஏமாற்றி பிழைத்தல் என நடித்திருக்கும் ‘சூதுகவ்வும்’ ரமேஷ் திலக் மற்றும் ‘பன்னி மூஞ்சிவாயன்’ யோகி பாபு என இருவரும் வெளுத்து வாங்கியுள்ளனர். ஒன்றாக திருடினாலும் ஒருவரை ஒருவர் ஏமாற்றினால் என்னவாகும் என்பதை ‘நச்’சென்று சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

பீட்சா கடை அதிபராக வரும் பாபு ஆண்டனி, சிறுவர்களின் நண்பராக வரும் ரயில்வே தொழிலாளி ஜோமல்லூரி, சிறுவர்களின் பாட்டி, காவல்துறை அதிகாரியாக வரும் ‘வழக்கு எண்’ முத்துராமன் என ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர். கௌரவ தோற்றத்தில் சிம்பு நடித்து தன் நண்பரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

பாடலிலும், பின்னணி இசையிலும் ஜி.வி. பிரகாஷ் பின்னி எடுத்திருக்கிறார். சிறுவர்கள் அவமானப்பட்ட பின்னர் எழும் இசை நம் கண்களை குளமாக்கும். எடிட்டர் கிஷோரின் அருமையான படத்தொகுப்பு. மறைந்தும் தன் படத்தொகுப்பை பேசவைத்திருக்கிறர். வீ மிஸ் யூ கிஷோர்.

பீட்சா கடையில் அவமானப்படுத்தபட்ட விவகாரம் வெளியுலக வெளிச்சத்திற்கு வர, அதனை வைத்து அரசியல் செய்ய முற்படும் அரசியல்வாதிகளையும், அதற்கு சேரிப்பகுதி மக்களை பயன்படுத்த நினைப்பதும் என ஒவ்வொன்றையும் தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

எம்எல்ஏ-வின் உதவியாளர் ஐஸ்வர்யாவை ஒரு மாதிரியாக பார்க்கும்போது எங்கே திரைக்கதை மாறிவிடுமோ என்ற எண்ணத் தோன்றினாலும் அங்கேயும் வித்தியாசப்பட்டிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் மணிகண்டனே ஒளிப்பதிவாளர் என்பதால் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிக்கும் படியாக செய்திருக்கிறார். அந்த சேரிப் பகுதியின் சந்து, பொந்துகளில் எல்லாம் நுழைந்து காட்சிகளை கவிதையாக சொல்லியிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கி, சிம்பு வந்திருந்த கௌரவ தோற்றத்தில் தனுஷ் நடித்திருக்கலாம். ஆனால் இருவருமே இதில் வேறுபட்டிருக்கின்றனர். ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் மணிகண்டனும் அந்த வாய்ப்பை ஒரு சதவிகிதம் கூட நழுவவிடாமல் கையாண்டுள்ளார்.

மொத்தத்தில் ‘பீட்சா’வை விட ‘காக்கா முட்டை’ ருசிக்கத்தக்கது.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்