கங்காரு

சர்ச்சை படங்களை இயக்கிய சாமியின் அடுத்த படைப்பு ‘கங்காரு‘. அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்து சொன்ன பாசமலர், முள்ளும் மலரும் வரிசையில் இப்படத்தையும் சேர்க்கலாம். ஆனால் ஒரு நிபந்தனையோடு.

கங்காருவின் கதை…

பெற்றோரை இழந்த சிறுவன் அர்ஜூனா தன் ஒரு வயது தங்கையை தன்னோடு துக்கிக் கொண்டு நடக்கிறான். இவர்களுக்கு  அடைக்கலம் தருகிறார் தம்பி ராமையா. கூடவே இவரின் நண்பர் ஆர் சுந்தர்ராஜனும்  உதவி புரிகிறார்.

தங்கை பெரியவளானதும் காதலிக்க, அவள் காதலித்தவனை திருமணம் செய்ய வைக்க நினைக்கிறார் அண்ணன். ஆனால் ஒரு விபத்தில் காதலன் இறந்து விட,  பின்னர் வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ய அவரும் திருமணத்திற்கு முன்பே இறந்து விடுகிறார். இந்நிலையில் மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவரை கொல்ல முயற்சி நடக்கிறது. இது ஒரு நிகழ்வாக தொடர்கிறது. அப்படியென்றால் மாப்பிள்ளைகளின் மரணம் திட்டமிட்ட கொலை என்று தெரியவருகிறது. யார்? எதற்காக கொலை செய்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

அர்ஜூனா தன் முத்திரையை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். காரணம் படம் முழுக்க அழுத்தமாகவே வருகிறார். தன் பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார். சாப்பிடும் காட்சிகளில் ராஜ்கிரணை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிறுக்கிறார்.

நாயகன் அர்ஜூனாவை ஒருதலையாகக் காதலிக்கிற வேடத்தில் வர்ஷா அஸ்வதி நடித்திருக்கிறார். ஹீரோ முரடனாக இருப்பதால் பாவம் அவர் என்ன செய்வார்? ஒரு பாடலில் நனைந்து நம்மை கொஞ்சம் குளிர செய்திருக்கிறார்.

தங்கையாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா படம் முழுக்க வந்து காட்சியளிக்கிறார்.  அடுத்தடுத்து விபத்துக்கள் நடப்பதால் திருமணத்தை வெறுக்கும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார்.

இவரைப் போலவே தம்பி ராமையாவும் படம் முழுவதும் வந்து தன் கேரக்டரை நிறைவுடன் செய்திருக்கிறார். கலாபவன் மணி தன் மிமிக்கிரியுடன் வில்லத்தனம் செய்திருக்கிறார்.  ஆர். சுந்தர்ராஜன் மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோரும் அவரவர் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இயற்கை தந்த கொடைக்கானலின் அழகையும் தன் கேமராவில் அள்ளித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜரத்னம். பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகி வைரமுத்துவின் வரிகளுக்கு ‘தாயும் கொஞ்ச காலம், தகப்பன் கொஞ்ச காலம்’ பாடலில் தாளம் போட வைக்கிறார்.  பின்னணி இசையில் முன்னணிக்கு வர இன்னும் நாட்கள் ஆகும் போல.

போலீஸ் கேரக்டரில் இயக்குனர் சாமி நடித்திருக்கிறார்.  யூனிபார்மில் நல்ல மிடுக்காகவே வருகிறார். பிரியங்காவின் கணவராக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே நடித்திருக்கிறார். இருவரும் ஒரு சில காட்சிகளிலே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சொல்ல வந்த விஷயத்தை இழுத்தடிக்காமல் 2 மணி நேரத்திற்குள் சொன்னதற்காக சாமிக்கு ஒரு சலாம் போடலாம். ஆனால், இப்படி ஒரு அண்ணன் இருப்பாரா என்ற கேள்வியோடு நம்மை தியேட்டரை விட்டு எழ வைக்கிறார்.

பாசமலர் போன்ற படமாச்சே செண்டிமென்டில் அழ வைத்திடுவார்கள் என்று கைக்குட்டையோடு சென்றேன். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் முரட்டு பாசத்தோடு கதை சொல்லியிறுக்கிறார் இயக்குனர். (நல்லவேளை படம் முடிந்த பின்னர் மழை வந்ததால் கைக்குட்டை தேவைப்பட்டது).

மொத்தத்தில் ‘கங்காரு’ முரட்டு பாசத்தை சொன்னாரு!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்