கதம் கதம் விமர்சனம்

‘சதுரங்க வேட்டை’ வெற்றியைத் தொடர்ந்து ‘நட்டி’ என்றழைக்கப்படும் நட்ராஜன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கதம் கதம். இவருடன் நந்தா, ஷனம் ஷெட்டி, சரிகா, நிழல்கள் ரவி, சிங்கமுத்து, கிரேன் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மற்ற கலைஞர்கள்
இசை : தாஜ் நூர்
ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்
தயாரிப்பு : ஜி. கார்த்திக் மற்றும் முஸ்தாரி
எழுத்து மற்றும் இயக்கம் : பாபு தூயவன்

பெரியண்ணன் எம்.பியும் அவர் மகனும் அந்த ஊரில் கட்டப்பஞ்சாயத்து, விடிய விடிய டாஸ்மாக் கடை மற்றும் அனைத்து விதமான ரவுடிஸம் செய்து வருகின்றனர். இவர்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு செயல்படுகிறது அந்த காவல் நிலையம். அதாவது எஸ்.பி நிழல்கள் ரவி, டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் மற்றும் அந்த ஒட்டு மொத்த காவல் நிலைய அதிகாரிகளும்.

ஒரு நேர்மையான அதிகாரியான நந்தா அங்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். இதனால், நேர்மையான இவருக்கும் இவரின் உயர் அதிகாரியான இன்ஸ்பெக்டர் நட்ராஜ்க்கும் மோதல் வலுக்கிறது. கடமை தவறிய காக்கிக்கும் நேர்மையான காக்கிக்கும் நடக்கும் யுத்தமே கதம் கதம்.

ஒரு ஒளிப்பதிவாளராக நிறைய ஸ்கோர் செய்த நட்ராஜ் நடிப்பிலும் நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு நேர்மையற்ற அதிகாரியாக ஒரு அரசியல்வாதியின் கீழ் செயல்படும் அதிகாரியாக வாழ்ந்திருக்கிறார்.

முக்கியமாக வசனங்களில் கைத்தட்டல்களை தட்டிச் செல்கிறார் நட்டி. படத்திற்கு பக்கபலமே வசனங்கள்தான். அதிலும் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வசனக் காட்சிகளில் பின்னிய நட்டி இதிலும் நக்கல் கலந்த யதார்த்த நாட்டு நடப்புகளை நச்சென்று உரித்திருக்கிறார்.

முக்கியமாக… சிகப்பு கலர் காக்கி கலர் வசனங்கள், வால்டர் வெற்றிவேல் மாதிரியே பீல் பண்றான், நீ வெட்கப்படுறது பொய்தான் தெரியுது. ஆனா நல்லாயிருக்கு என்ற வசனங்களால் பளிச்சிடுகிறார். நிறைய காட்சிகளில் ரஜினியை நினைவுப்படுத்துகிறார்.

நந்தா வேலூர் மாவட்டம் படத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை போலும். அதே முறுக்கு, கம்பீரம், இறுக்கம். காதல் காட்சிகளில் கூட காதல் நாயகனாக தெரிய வேண்டியவர் காவல் நாயகனாகவே தெரிகிறார். (இயக்குனர் கவனிக்கவும்)

நந்தாவின் ஜோடியாக வரும் ஷனம் ஷெட்டி இதற்கு முன்பு தமிழில் 3, 4 படங்களில் நடித்திருந்தாலும் நடிப்பில் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும். நட்ராஜின் ஜோடியாக வருபவர் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் மெருக்கேற்றியிருந்தால் இரண்டு ஹீரோக்களும் சதம் அடித்திருப்பார்கள்.

தாஜ் நூர் இசையில் பாடல்கள் ஒன்றிரண்டு தவிர மற்றவை சொல்லும்படியாக இல்லை. ஆனால், மச்சம் பார்க்க லட்சம் தாரியா? பாடல் செம குத்து. பாடல் மட்டமல்ல ஐட்டம் டான்சும் செம. பாடலில் உள்ள இசையை விட ஆக்ஷன் கதைக்கேற்ற பின்னணி இசையில் இவரை பாராட்டலாம்.

இப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் தூயவனின் வாரிசான பாபு தூயவன் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். தன் முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் ஜெயித்திருக்கிறார். ஒரு நேர்மையான அதிகாரிக்கும் கடமை தவறிய அதிகாரிக்கும் நடக்கும் போராட்டத்தை மிகக் கவனமாக கையாண்டு இருக்கிறார்.

ஆனால், காதல் காட்சிகளில் இன்னும் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. படத்தில் காதலும் இல்லை. காமெடியும் இல்லை. படத்தின் பெயர் கதம் கதம் என்றிருந்தாலும் படத்தின் முடிவைப் பார்க்கும் போது இதன் தொடர்ச்சி அடுத்த பாகமாக வெளிவரலாம் போலிருக்கிறது. ஆனால் படத்தின் வெற்றியை வைத்து அதை தொடராலாமா வேண்டாமா என்பதை பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டார் இயக்குனர்.

கதம் கதம் – இரு நாயகர்கள் சேர்ந்து சதம் அடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்