கிருமி விமர்சனம்

நடிகர்கள்  : கதிர், ரேஷ்மி மேனன், சார்லி, வனிதா, தென்னவன், யோகி பாபு, டேவிட், மாரிமுத்து மற்றும் பலர் .
இசையமைப்பாளர் : கே
கதை : காக்கா முட்டை மணிகண்டன், அனுசரண்
ஒளிப்பதிவு : அருள் வின்சென்ட்
இயக்கம் : அனுசரண்
தயாரிப்பாளர் : கே. ஜெயராமன், பிரித்விராஜ், ராஜேந்திரன், ரஜினி எம். ஜெயராமன்
கதைக்களம்…

தன் அக்கா மகள் ரேஷ்மிமேனனை திருமணம் செய்து கொள்கிறார் நாயகன் கதிர். இவர் தன் நண்பர் யோகிபாபுவுடனே தங்கி வருகிறார். எனவே இவருக்காக போலீஸ் இன்பார்மர் சார்லி காவல்துறையில் சிறிய வேலை வாங்கி தருகிறார். ப்ரண்ட் ஆப் போலீஸாக செயல்படும் கதிர் ஒரு கட்டத்தில் தன்னை அடித்த வில்லன் கோஷ்டியை பழிவாங்க பார் என்ற பெயரில் சூதாட்டம் நடத்தும் வில்லனை போலீசுக்கு போட்டு கொடுக்கிறார்.

அது வேறு ஒரு போலீஸ் ஸ்டேஷன் எல்லை என்பதால் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்குள் பிரச்சினை உருவாகிறது. இதில் சிக்கிக் கொண்ட கதிர் தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

கதிர் ஒரு கதாநாயகனாக நடிக்காமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஹீரோயிசம் காட்டாமல் யதார்த்தம் காட்டி நடித்திருக்கிறார். நண்பர்களிடம் பேசுவதாகட்டும், சார்லியிடம் சவால் விடுவதாகட்டும், போலீசில் கெத்து காட்டுவதாகட்டும் என பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். பெண்களை சைட் அடிப்பதிலும் சபாஷ் பெறுகிறார்.

இவரின் மனைவியாக ரேஷ்மி மேனன். பொருத்தமான தேர்வு. கண்களாலும் நடித்திருக்கிறார். ”டேய் உனக்கு வேறு எதுவுமே தோனாதடா? என கேட்கும் போது ரசிக்க வைக்கிறார். கஷ்டப்படும் ஒரு நடுத்தர குடும்பம் என்பதாலோ என்னவோ சோகமாகவே காட்சி தருகிறார்.

இவர்களுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான நடிப்பால் நம்மை கட்டி விடுகிறார் சார்லி. பாதி படமே வந்தாலும் மனதில் முழுவதுமாக நிற்கிறார். இவரின் மனைவியும் நம்மை கவர்கிறார்.

யோகிபாபு… இனி தனியாக முழு காமெடியனாக வந்துவிடுவார் போல. இப்படத்தில் கானா பாலா பாடலுக்கு குத்து ஆட்டம் போட்டிருக்கிறார். கூடவே இவரது நடிப்பால் படம் கலகலப்பாகிறது. இறுதியில் இவருக்கு மனைவியாக வரும் பெண் கதிரின் சைட் என தெரிந்தும்… இவர் ஏற்றுக் கொள்ளும் காட்சி.. கல கல….

இரண்டு இன்ஸ்பெக்டர்கள் டேவிட் மற்றும் மாரிமுத்து. நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளார்கள். அதிலும் டேவிட் எந்த வில்லத்தனமும் காட்டாமல் கம்பீரத்தோடு தந்திரமாக கையாண்டு இருக்கிறார்.

கமிஷனரும் சில காட்சிகளில் வந்து காவல்துறையின் மாமூல் அவலம் பற்றி ஒரே வரியில் விளக்குகிறார். “அஞ்சு எருமை மாட்டை உங்ககிட்ட கொடுத்தா நாலு மாட்டை தொலைஞ்சுட்டுன்னு சொல்லிட்டு, மீதம் இருக்கிற ஒண்ணையும் வித்து திங்கிறவங்கதானய்யா நீங்க?” என பன்ச் கொடுத்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கேவின் இசையில் கானா பாலாவின் பாடல்கள் ஆட்டம் போடும் ரகம். ’நானல் பூவாய் நாணம் அசைந்தாட’ பாடல் இனிமை. அருள் வின்சென்டின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

தன்னுடைய இயக்கம் மூலம் தன்னை பேச வைத்திருக்கிறார் இயக்குனர் அனுசரண். இவருடன் கதைக்காக இணைந்துள்ளார் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன். கதைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.

கிருமிகள் நம்மிடம் வந்து சேர்ந்தால் நம் ஆரோக்கியம் கெட்டு விடும். நாம் கிரிமினல்களுடன் ஒன்று சேர்ந்தாலும் இதே நிலைதான். எனவே நாமே நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதை நிகழ்வாக பதிவாக்கியிருக்கிறார். ஆனாலும் சில காட்சிகளை நம் பொறுமையை சோதிக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிவதால் சுவராஸ்யம் குறைகிறது.

ரஜினியின் முன்னாள் உதவியாளர் எம். ஜெயராமன் ஒரு நல்ல படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதற்காக கை குலுக்கலாம்.

மொத்தத்தில் கிருமி தொடாதவரை ஆபத்தில்லை!

கிருமி விமர்சனம்

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்