மாலை நேரத்து மயக்கம் விமர்சனம்

செல்வராகவனின் வசனங்களில் அவரது மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. பெண் இயக்குனர் என்பதால் நாயகி வாமிகாவை நம்பி களம் இறங்கியுள்ளார். இவர்களின் கூட்டணி எப்படி என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : பாலகிருஷ்ணா கோலா, வாமிகா கபி, பார்வதி நாயர், அழகம் பெருமாள், கல்யாணி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : அம்ரித்
வசனம் : செல்வராகவன்
ஒளிப்பதிவு : ஸ்ரீதர்
படத்தொகுப்பு : ரூகேஷ்
இயக்கம் : கீதாஞ்சலி செல்வராகவன்
தயாரிப்பாளர் : கோலா பாஸ்கர்

கதைக்களம்…

நாயகன் பிரபு (பாலகிருஷ்ணா) அப்பா பிள்ளை. அவரின் பேச்சை கேட்டே வளர்ந்த இவர் காதலுக்காக ஏங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலி கிடைக்காமல் அப்பா (அழகம் பெருமாள்) பார்த்த பெண்ணான மனோஜிதாவை (வாமிகா) மணக்கிறார்.

வாமிகாவோ டோட்டல் மாடர்ன். நிறைய ஆண் நண்பர்களை கொண்டவர். கணவன், மனைவியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் செக்ஸ்க்கு தடை போடுகிறார் வாமிகா. இதனால் ஒருமுறை பலவந்தமாக உறவு கொள்ளும் நாயகனை விட்டு பிரிந்து செல்கிறார் வாமிகா. விவாகரத்து வரை சென்ற இவர்களது வாழ்க்கை பின்னர் என்ன ஆனது? மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

படத்தின் நாயகனை பற்றி சொல்வதை விட நாயகி பற்றித்தான் அதிகம் சொல்ல வேண்டும். காரணம் இயக்குனரும் பெண்தானே. ஒட்டு மொத்த படத்தை தாங்கி நிற்கிறார் வாமிகா. தமிழுக்கு இதுதான் அறிமுக படம் என்றாலும் மிக அழுத்தமான கேரக்டர். காட்சிகளில் இவர் கண்கள் நடித்திருக்கிறது என்றால், சரக்கடித்து விட்டு ஆட்டத்தில் நடனத்தால் கவர்கிறார். வாமிகாவுக்கு வார்ம் வெல்கம் டூ தமிழ் சினிமா.

நாயகன் பாலகிருஷ்ணா, அப்பாவி தோற்றத்தில் அசத்தல். ஆனால் நன்றாக படித்துவிட்டு ஹைடெக் கம்பெனி, ஹைடெக் வீடு என்றிருக்கும் இவரின் தோற்றம் மட்டும் ஏன் இப்படி? படம் பார்க்கும்போது 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகமாக என கேட்கத் தோன்றுகிறது. நாயகன் வாய்ஸ் கூட அதே படம்தான்.

நாயமி வாமிகா, அம்மா கல்யாணி… தோற்றத்திலும் இவர்களின் பேச்சிலும் அம்மா மகளாக தெரியவில்லை. ஒருவேளை அம்மாவும் மாடர்ன்?

நாயகனின் அப்பாவாக அழகம் பெருமாள் சில காட்சிகள் என்றாலும் நம்மை கவர்கிறார். ஒரு சில காட்சிகளில் பார்வதி நாயர் வருகிறார். மற்றபடி ஹீரோவுக்கு 2 நண்பர்கள். ஹீரோயினுக்கு 4,5 பாய் பிரண்ட்ஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் அம்ரித்துக்கு அருமையான அறிமுகம். மாலை நேரத்து மயக்கமா? பாடலில் மனதை கவர்கிறார். ஆனால் பாடல் வரிகளில் புதுமை இல்லை. தேவைக்கேற்ற பின்னணி இசை நச்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு… ஹீரோ + ஹீரோயின் இரண்டு பேரை மட்டுமே முழுவதுமாய் படம் பிடித்துள்ளார். அதிலும் வாமிகாவை கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.

படத்தின் ப்ளஸ்…

  • செல்வராகவன் டச் + வசனங்கள்
  • குறட்டை காட்சிகள் + யூத் சப்ஜெக்ட்
  • திருமணம் + டைவர்ஸ் பற்றிய அழகான பாடம்

படத்தின் மைனஸ்

  • இந்திய உணவுக்காக இத்தாலியன் ரெஸ்ட்ராண்டில் சண்டை? படித்த அவருக்கு தெரியாதா?
  • வெறுப்பை காட்டும் நாயகி மனம் மாறும் காட்சிகள் வலுவில்லை. வெறும் வார்த்தைகளே.
  • செல்வராகவனின் படங்களில் பார்த்த அதே காட்சிகள்.

மனைவி அனுமதியில்லாமல் கணவன் தொடக்கூடாது. தொட்டால் அது ரேப்தான் என்பதை ஆணித்தரமான சொன்ன இயக்குனருக்கு ஒரு சபாஷ். ஆனால் பெண் வாடையே இல்லாத கணவர் 3 வருடங்களுக்கு பிறகும் ஏன் மனைவியிடம் எதிர்பார்க்கக்கூடாது? என்பதுதான் புரியவில்லை.

டைவர்ஸ் ஆன பிறகு தன் கணவனை நேசிக்க தொடங்கிய நாயகி திடீரென்று வேறு ஒரு பெண் கூறியதால் எப்படி மனம் மாறுகிறார்? அதுவும் தன் பழைய ஆண் நண்பருடன் ரூம் போடும் வரை சென்ற நாயகி. ஒருவேளை அந்த பெண் சொல்லாவிட்டால் என்ன செய்திருப்பார்?

கீதாஞ்சலி தன் முதல் படத்திலேயே உணர்வுபூர்வமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். கைகுலுக்கி வரவேற்போம். நிறைய எதிர்பார்ப்போம். படம் ஆரம்பிக்கும்போது இடம்பெற்ற ‘காதல் கதை கடினம்.. முயற்சித்திருக்கிறோம்…’ என்கிற வார்த்தைகளை போல முயற்சியை வரவேற்போம்.

மொத்தத்தில் மாலை நேரத்து மயக்கம்: தைரியமான சிலரை மயக்கும்!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்