மகாபலிபுரம்

கடல் அலைகளும் சிற்ப கலைகளும் கொஞ்சி விளையாடும் இடம் மாமல்லபுரம் என்றழைக்கப்படும் மகாபலிபுரம். இந்த இடத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் இது. அங்கு வாழும் ஐந்து இளைஞர்களும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு அதிர்ச்சியான சம்பவமும் தான் படத்தின் கதை.

நடிகர்கள் : கருணாகரன், கார்த்திக், ரமேஷ் திலக், வெற்றி, விநாயக் மணி, அங்கனா ராய், விருத்திகா
இசை : கே
ஒளிப்பதிவு : சந்திரன் பட்டுச்சாமி
இயக்குனர் : டான் சாண்டி
இயக்குனர் : விநாயக்

கருணாகரன், கார்த்திக், ரமேஷ், வெற்றி, விநாயக், ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இதில் வெற்றி என்பவர் தன் நண்பர்கள் உதவியுடன் காதலியான  அங்கனாவை திருமணம் செய்துக்கொள்கிறார். சிற்பம் செதுக்கும் தொழில் செய்து வரும் மற்றொரு நண்பர் விநாயக் மற்றொரு நாயகி விருத்திகாவை காதலிக்கிறார்.

இந்நிலையில் ஒருநாள் நண்பர்கள் அனைவரும் இணையதளத்தில் செக்ஸ் படத்தை பார்க்கும் போது அதில் அங்கனாவும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதுகுறித்து மனைவியிடம் விசாரிக்க வெற்றி வீட்டுக்கு செல்ல அங்கே அங்கனா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அந்த அதிர்ச்சியில் வெற்றியும் மாடியில் இருந்து குதித்து மரணமடைகிறார்.

தங்கள் நண்பனும் அவனின் மனைவியும் இந்த முடிவுக்கு வர காரணமானவர்கள்  யார்? என்று அலசி, ஐந்து நண்பர்களும் அடுத்த கட்டத்திற்கு செல்ல, மீண்டும் நடக்கும் வேறு ஒரு சம்பவத்தால், அனைத்து உண்மையும் வெளியே வருகிறது. அப்படி என்ன நடந்தது என்பதை இப்படத்தின் க்ளைமாக்ஸ் சொல்லும்.

நண்பர்களாக நடித்துள்ள ஐந்து பேரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அவர்களின் பணியைச் செவ்வென செய்திருக்கிறார்கள். கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள்.

இரு நாயகிகள் இருந்தும் அவர்களுக்கு பெரிதான வேலை இல்லை. ஆனாலும் கதைக்களம் அவர்களை சுற்றி நகர்வதால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுவரை பார்க்காத மகாபலிபுரத்தையும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்திரன் பட்டுச்சாமி. இசையமைப்பாளர் கே-வின் இசையில் பாடல்களை ஒருமுறை கேட்கலாம். ஒரு மெலோடி பாடல் நன்றாக உள்ளது.

இன்று இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். எதுவும் மிஞ்சினால் நல்லதல்ல என்பதே உண்மை. நமக்கு உயிர் நண்பர்களாக இருப்பவர்களே சில நேரங்களில் நமக்கு எமனாக மாறுவார்கள் என்பதை தைரியமாக சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் டான் சாண்டி. ஒரு பலி, அதை ஆயுதமாக கொண்டு திரைக்கதையை பயணிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.

வித்தியாசமான முயற்சி போன்ற திரைக்கதை எதுவுமில்லாமல் நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் இணைய தகவல்களை சேகரித்து அதற்கு திரைக்கதை வடிவம் கொடுத்து மகாபலிபுரமும் அதன் உள்ளிட்ட பகுதிகளை நம்மையும் சுற்றி வர வைத்திருக்கிறார் இயக்குனர்.

ரிலாக்ஸ் செய்ய நினைப்பவர்கள் இந்த மகாபலிபுரத்தில் ஒரு முறை இளைப்பாறலாம்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்