மாஸ் (மாசு என்கிற மாசிலாமணி)

‘அஞ்சான்’ படத்திற்கு பிறகு சூர்யாவும், ‘பிரியாணி’ படத்திற்கு பிறகு வெங்கட்பிரபுவும் இணைந்து கொடுத்துள்ள படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இருவருக்கும் தற்போதைய தேவை வெற்றி. அதை இவர்களின் ‘மாஸ்’ கொடுக்குமா? என்பதை பார்ப்போம்…

கதைக்களம்…

மாசிலாமணியின் சுருக்கமே மாஸ். மாஸ் சூர்யாவும் ஜெட் ப்ரேம்ஜியும் நண்பர்கள். இருவரும் பிக்பாக்கெட், திருட்டு என கொள்ளையடித்து வருகின்றனர். இதனிடையில் நர்ஸ் மாலினியுடன் (நயன்தாரா) காதல் கொள்கிறார் மாஸ். இடையில் ஒரு விபத்தில் ப்ரேம்ஜி மட்டும் இறந்து போகிறார். மரணம் வரை சென்று தப்பித்த சூர்யாவின் கண்களுக்கு மட்டும் ப்ரேம்ஜி பேயும் 10 பேர் கொண்ட பேய் கூட்டமும் தெரிகிறது.

அப்பேய்கள் நிறைவேறாத ஆசையை சூர்யா மூலம் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். கூடவே ஷக்தி என்ற மற்றொரு சூர்யா பேய் தன்னை கொன்ற வில்லன்களை கொலை செய்ய துடிக்கிறது. ஆனால் ‘மாஸ்’ சூர்யாவோ பேய் ஓட்டி சம்பாதித்து செட்டிலாக நினைக்கிறார். பேய்களின் ஆசை நிறைவேறியதா? இந்த பேய்களை வைத்து ‘மாஸ்’ சூர்யா மாளிகை கட்டினாரா? ‘ஷக்தி’ சூர்யா வில்லன்களை எப்படி பழிவாங்கினார் என்பதை முழுப்படம் சொல்லும்.

கதாபாத்திரங்கள்…

அறிமுக காட்சியிலேயே அமர்களப்படுத்தியிருக்கிறார் சூர்யா. லுக்கிங் வெரி ஹேண்ட்சம். ‘தெறிக்குது தெறிக்குது மாஸ்…’ பாடல் ஒரு மாஸ் ஹீரோவுக்கான பாடலாக அமைந்து விட்டது.

எந்த டாப் ஹீரோஸ் செய்யாத பேய் கேரக்டரை கையில் எடுத்திருக்கிறார். வழக்கம்போல டபுள் ஆக்டிங் ரோலில் அசத்தியிருக்கிறார். குடும்பம், வில்லன் பழிவாங்கல், காதல், ரொமான்ஸ் என தன்னுடைய ட்ராக்கை சரியாக செய்திருக்கிறார். (ஆனால் பேய்… நம்ம சூர்யாதானே என்பதால் நமக்கு பயம் வரவில்லை) இது ரொம்ப நல்ல பேய்ப்பா…

நயன்தாரா, ப்ரணித்தா என 2 ஹீரோயின்கள் இருந்தும் படத்தில் க்ளாமர் குறைவே. சில காட்சிகளில் மட்டுமே இருவரும் வந்து செல்கிறார்கள். நயன்தாராவை இன்னும் ‘நச்’சென்று பயன்படுத்தியிருக்கலாம்.

ப்ரேம்ஜி படம் முழுக்க வருகிறார். கிச்சுசிச்சு மூட்டினாலும் சிலசமயம் சலிப்பை தட்டுகிறது.  (தம்பியை விட முடியாது. ஆனால் ரசிகர்களின் நிலைமை?)

குணச்சித்திர கேரக்டரில் பார்த்த சமுத்திரக்கனியை வில்லன் வேடத்தில் பயத்தோடு பார்க்க முடியவில்லை. போலீஸாக பார்த்திபன் நக்கலுடன் நடிக்கவும் செய்திருக்கிறார். ரியாஸ்கான் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ், ஸ்ரீமன், கருணாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, சண்முக சுந்தரம், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களை வைத்து பெரியளவில் செய்ய வேண்டிய காமெடி ட்ராக் மிஸ்ஸிங். கௌரவ தோற்றத்தில் ஜெய் வந்து கைத்தட்டல் பெறுகிறார்.

யுவனின் இசையில் ‘தெறிக்குது மாஸ்…’, ‘நான் அவள் இல்லை…’ பாடல்கள் நிச்சயம் ரசிக்க வைக்கும். வைக்கம் விஜயலெட்சுமி குரலில் ‘பிறவி…’ பாடல் இதயத்திற்கு இதமானது. பாடல் படமாக்கப்பட்ட காட்சிகளும் அருமை. ராஜசேகரின் ஒளிப்பதிவில் ப்ரணித்தாவின் கண்களும் வெளிநாட்டு காட்சிகளும் கவிதை சொல்லும்.

பேய் படம் என்றால் ட்ரெர் பின்னணி இசை கொடுத்து காதை கிழிக்காமல் நல்ல இசையை கொடுத்துள்ளார் யுவன். (ஆனால் டைட்டில் கார்டில் இசையமைப்பாளர் தமனுக்கு நன்றி ஏன்?)

இடையிடையே கத்தி, வீரம் மியூசிக் மற்றும் விஜய், அஜித் ஆகியோரின் பாடல், வசனங்கள் வருகிறது. (அதில் சூர்யாவின் நல்ல மனசு தெரிகிறது)

காலத்திற்கேற்ப தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து விலகியுள்ளார் வெங்கட்பிரபு. அதில் கொஞ்சம் வெற்றியும் கண்டிருக்கிறார். இறந்தவர்களுக்கு மனசு இருக்கிறது. ஆசை இருக்கிறது என்பதை நன்றாகவே காட்டியிருக்கிறார்கள். ஒரு சில லாஜிக் குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் ரசிக்கும்படியாக படத்தை தந்திருக்கிறார்.

‘பூச்சாண்டி’ பாடல் க்ராபிக்ஸில் கவனம் செலுத்தியிருக்கலாம். பேய்களை மனிதர்களோடு கலந்து பயமுறுத்தாமல் சொன்ன வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள்.

படத்தில் லாஜிக் பெரும் குறையாகவுள்ளது.  மனிதர்களை பயமுறுத்தும் பேய் எதற்காக மனிதரின் உதவியை நாடவேண்டும். பொருட்களையும், மிகப்பெரிய கிரேன் போன்ற சாதனங்களை இயக்கும்போது அவர்களே பழிவாங்கிவிடலாமே.

சூர்யாவின் மாஸ் : ருசிக்கத்தக்க பக்கா (பொடி) மாஸ்…

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்