மிருதன் விமர்சனம்

தமிழில் வெளிவந்துள்ள முதல் ஷாம்பி கதை இது. தனி ஒருவன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தன் கேரக்டர்களில் கூடுதல் கவனம் செலுத்தும் ஜெயம் ரவியின் நடிப்பில் இது வெளிவந்துள்ளதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. மிருதன் நம்மை கவர்ந்துள்ளாரா? என்பதை பார்ப்போம்.

நடிகர்கள் : ஜெயம் ரவி, லட்சுமி மேனன், காளி வெங்கட், ஆர் என் ஆர் மனோகர், ஜீவா ரவி, பேபி அனிகா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : இமான்
ஒளிப்பதிவு : எஸ் வெங்கடேஷ்
படத்தொகுப்பு : கே ஜே வெங்கட் ரமணன்
இயக்கம் : ஷக்தி சௌந்தர ராஜன்
தயாரிப்பாளர் : மைக்கேல் ராயப்பன்

கதைக்களம்…

ஜெயம் ரவி ஒரு டிராபிக் போலீஸ். இவரது உயிருக்கு உயிரான சகோதரி பேபி அனிகா. லட்சுமி மேனன் ஒரு டாக்டர். இவர்கள் ஊட்டியில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு வைரஸ் தெருநாய் ஒன்றிடம் ஒட்டிக் கொள்கிறது. அது மனிதர்களை கடிக்க, அந்த மனிதர்கள் மற்றவர்களை கடிக்க, ஊர் முழுக்க அந்த வைரஸ் பரவுகிறது.

அப்போது டாக்டர் லட்சுமி மேனனுடன் அந்த வைரஸை கொல்ல மருந்து கண்டுபிடிக்க ஊரை விட்டு வெளியில் செல்கின்றனர் ஜெயம் ரவி டீம்.

ஒரு நாள் அந்த வைரஸ் இவரின் சகோதரி அனிகாவை தாக்குகிறது. அதன் பின்னர் என்ன ஆனது? மருந்து கண்டு பிடித்தார்களா? சகோதரி காப்பாற்றப்பட்டாளா என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

ஜெயம் ரவி, படத்திற்கு படம் படு ஸ்மார்ட்டாக வருகிறார். லட்சுமியுடன் காதல் கொள்வதும், அதன்பின்னர் அவருக்கு பாய் பிரண்ட் இருப்பது தெரிந்ததும் மறைத்து வாழ்வதும் அருமையான நடிப்பு. இந்த வருடத்திலும் தன் வெற்றியை தொடக்கி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

miruthan jayam ravi

ஷாம்பிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்ற இவர் போராடும் சண்டைகள் ஆக்ஷன் பிரியர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும். தன் முன்னாள் காதலியாக இருந்தாலும் அவரை காப்பாற்ற இவர் எடுக்கும் ஷாம்பி அவதாரம் சூப்பர்.

நாயகி லட்சுமி மேனன்… இவருக்கு லவ் சீன்ஸ் இல்லையென்றாலும் கதையின் நாயகியாக படம் முழுக்க வருகிறார். ஒரு டாக்டராக இவர் தன் மற்ற உயிர்களை காப்பாற்ற நினைப்பது டாக்டர் டச்.

காளி வெங்கட் சீரியசான படத்தை கலகலப்புடன் கொண்டு செல்ல உதவுகிறார். ஸ்ரீமன் காஞ்சனா படத்தில் கொடுத்த பயந்த சுபாவத்தை கொடுத்திருந்தாலும் அந்த படமே இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளது எனலாம்.

இவர்களுடன் பேபி அனிகா, ஆர் என் ஆர் மனோகர் ஆகியோரும் அருமையான நடிப்பை கொடுத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு பெரிய பலம் பாடல்களும் பின்னணி இசையும். வெறி வெறி பாடல் நம்மை முருக்கேற்றும் ரகம் என்றால், மிருதா மிருதா பாடல் நம்மை உருக வைக்கும். முன்னாள் காதலி பாடல் இனி காதல் தோல்வியுற்றவர்களின் தேசிய கீதமாக மாறும்.

miruthan jayam ravi and lakshmi menon

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் ஷாம்பி ரத்தத்தை உறைய வைக்கும். பாடல்களில் இவரது பங்கு பேசப்படும். முன்னாள் காதலி + மிருதா பாடல்கள் படமாக்கப்ட்ட விதம் அருமை. ஒளிப்பதிவாளருக்கு பொக்கே கொடுத்து வரவேற்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • புதுமையான திரைக்கதை
  • படமாக்கப்பட்ட விதம்
  • 2 மணி நேரத்திற்குள் விறுவிறுப்பான படம்
    (எடிட்டர் வெங்கட் ரமணனுக்கு தேங்க்ஸ்)
  • பாடல்கள் + பின்னணி இசை
  • ஒவ்வொரு ஷாம்பிக்கும் மேக்கப்

ஒரு ஹாலிவுட் பாணியிலான கதையை நம் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வகையில் கொடுத்து, அதில் குடும்ப செண்டிமெண்ட்டை சேர்த்திருப்பது இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனின் புத்திசாலித்தனம்.

உச்சக்கட்ட காட்சியில் ஆயிரக்கணக்கான ஷாம்பிகள் வந்தாலும் அதை நம்பும்படியாக எடுத்திருப்பது டைரக்டர் டச். இரண்டாம் பாகத்திற்கு தயாராக படத்தை முடித்திருப்பது இன்னும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

மொத்தத்தில் மிருதன்… ரசிகர்களுக்கு பிடித்த ஷாம்பி

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்