தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் – திரை விமர்சனம்

படத்தின் தலைப்பை போன்றே ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற அலைபேசியை மையாக வைத்து, கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். அவருக்கு வாழ்த்துக்கள் கூறி நம் திரை விமர்சன பதிவை அழுத்துவோம்…

நகுல், தினேஷ், சதீஷ் இவர்கள் மூவரின் முக்கோண காதலுடன் அறிவியலை கலந்து அசத்தியிருக்கிறார் இயக்குனர். ஆனால், மூவரையும் இணைய விடாமல், திரைக்கதையோடு இணைத்து வித்தியாசமான திரைக்கதையை அழுத்(எழு)தியிருக்கிறார்.

நகுல் ஒரு திறமையான விஞ்ஞானி. முதல் காட்சியிலேயே அதற்கான அர்த்ததோடு அறிமுகமாகிறார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே காலேஜ் மாணவர்களுக்கு புராஜக்ட் செய்து கொடுப்பதும் சோலார் பைக் கண்டுபிடிப்பு, கேமரா பொருத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் விளையாட்டு பொம்மைகள் போன்ற அறிவுச்சார்ந்த பல விஷயங்களை செய்துகாட்டி தன் அக்கம்பக்கத்தினரை அசத்துபவர். இவரிடம் புராஜக்ட் செய்ய வரும் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா தத்தா, இவரின் திறமையை கண்டு காதலிக்கிறார். இதுஒரு புறம் இருக்க…

கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் ப்ளாட் சேல்ஸ்மேனாக தினேஷ் மற்றும் வங்கியில் பணிபுரிந்து கொண்டே நேசம் தற்கொலை தடுப்பு மையத்தில் பகுதிநேரமாக சேவை புரியும் பிந்துமாதவி என இவர்கள் இருவரும் ஒரு சமயத்தில் சந்திக்கின்றனர். தற்கொலைக்கு கவுன்சலிங் தரும் பிந்துமாதவியை காதலிக்கிறார். இதற்கிடையில், சிறுவிபத்தில் பிந்துமாதவி சிக்கி கொள்ள, செல்போன் சிக்னல் கிடைக்காமல் தொடர்பில்லாமல் தவிக்கிறார்கள்.

கால் டாக்சி டிரைவராக வரும் சதீஷ், திருமணத்திற்காக பெண் தேடி அலைந்து, நிறைய பாய் ப்ரண்ட்ஸை வைத்திருக்கும் பெண்ணை சந்திக்க இவரின் காரோடு காதலையும் ஓட்டுகிறார்.

செல்போன் வெடிகுண்டை வைக்க சென்னை வரும் தீவிரவாதி (ஆசிப்) சதீஷ் காரில் பயணிக்கிறார். சூரியன் மேற்பரப்பில் இருக்கும் காந்த புயல் பூமியை நோக்கி வருவதால், எந்தவொரு செல்போன் சிக்னலும் கிடைக்காமல் போகிறது. இதனிடையே விஞ்ஞானி நகுல் அதற்கான தீர்வை கண்டுபிடிக்க, வெடிகுண்டு வெடித்ததா? காரில் பயணம் செய்த காதலர்களின் கதி என்ன? விபத்தில் சிக்கி கொண்ட பிந்து மாதவி என்ன ஆனார்? நகுல், ஐஸ்வர்யா காதல் போன்ற அனைத்திற்கும் க்ளைமாக்ஸில் விடை சொல்லியிறுக்கிறார் இயக்குனர்.

நகுல் மிக யதார்த்தமாக, காதலிக்கும் பெண்ணிடம் அலட்டிக் கொள்ளாமல் தன் திறமையை நம்பும் நபராக நடித்திருக்கிறார். இவரின் அப்பாவி காதலியாக வரும் ஐஸ்வர்யா தத்தா அவருக்கான கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். அடிக்கடி கண்களால் கொஞ்சியிருக்கிறார்.

தினேஷ் தன் வழக்கமான நடிப்பை இதிலும் வழங்கியிருக்கிறார்.  காதலியிடம் திட்டு வாங்கி கொண்டே தன் மார்கெட்டிங் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மிகவும் அமைதியான பெண்ணாக வந்து செல்லும், பிந்துமாதவி கண்களோடு அளவான காதலை பேசியிருக்கிறார். தினேஷை திட்டுவதற்காக பிந்து மாதவி அலைவதும் ஐடியா கேட்பதும், ப்ராக்டிஸ் செய்வதும் நல்ல நகைச்சுவை.

தன் காரில் செல்போன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது தெரியாமல், நிறைய காமெடி குண்டுகளை ஆங்காங்கே வீசி செல்கிறார் சதீஷ். சீரியஸாக செல்லும் சயின்ஸ் படத்தில், இவரது இரட்டை அர்த்த வசனங்களை ஆங்காங்கே வாரி வழங்கியிருக்கிறார்.  கஸ்டமர், பிக்அப், மேட்டர் போன்ற வார்த்தைகளை கெட்ட வார்த்தைகளாகவே மாற்றிவிட்டனர் என்று இவர் கூறுவது மிகவும் சரியானதே. இவரின் தோழியாக(?) வரும் ஷாலு ஷம்முவும் பாய் பிரண்ட்ஸின் பெயர்களை எல்லாம் கூறி, தன் பங்குக்கு கலகலப்பு ஊட்டியிருக்கிறார்.

மற்ற படங்களில் காட்டப்படாத அம்மாவாக ஊர்வசி வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய அறிவுத் திறமைக்கு தன் மகன்தான் காரணம் என்பதையும், படிப்பறிவை விட அனுபவமே சிறந்தது என்பதை தன் கேரக்டர் மூலமாக நிரூபித்துக்கிறார். ஐஸ்வர்யாவின் தோழிகளாக வருபவர்களும் கல்லூரி முதல்வராக வரும் மனோபாலாவும் தன் கதாபாத்திரங்களை புரிந்து செய்திருக்கிறார்கள். இவரின் நகைச்சுவையும் நன்றாக கைகொடுத்திருக்கிறது. ஆனால், ஒரு பிரின்சிபாலை ஏன் இவ்வளவு முட்டாளாக காண்பித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை?

கல்லூரி தோழிகளும் இரட்டை அர்த்த வசனங்களில் தைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார்கள். செல்போன் திருடனாக வரும் அஜய்யும் தன் கேரக்டரை கச்சிதமாக ரசிக்கும்படியாக செய்திருக்கிறார். தமனின் இசையில், பாடல்கள் சுமார் ரகம்.  யதார்த்த மனிதர்களை படம் பிடித்து பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பாண்டே. மதன் கார்க்கியின் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற பாடலோடு படம் முடிகிறது.

நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மிக யதார்த்த மனிதர்களை கொண்டு அதில் சயின்ஸை புகுத்தி, அதை சுவாரஸ்யமாக கொண்டு சென்ற இயக்குனருக்கு  நிச்சயமாக நிறைய லைக்ஸை அழுத்தலாம்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை அதற்கான காட்சிகளோடு கோர்த்திருக்கிறார்.  திறமையை உலகுக்கு அறியச் செய்தால் வேலையும் புகழும் தன்னை தேடிவரும் என்ற நல்ல தகவலையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. வேலைக்கு செல்லாத மகனை திட்டாத அம்மா, தன் மகனின் திறமையறிந்து, துணைநிற்பது போன்ற கதாபாத்திரங்களை நன்றாக வடிவமைத்திருக்கிறார்.

அமைதியான பெண்ணாக பிந்துவை காட்டி, அதற்கு காரணமாக ப்ளாஷ்பேக் காட்சியில் தன் கோபத்தால் குடும்பத்தை இழந்து நிற்பதாக காட்டியிருக்கிறார். ஆனால், அன்று அவர் கோபம்பட்டதால்தான் இன்று உயிரோடு இருக்கிறார். இல்லையென்றால் அவரும் அவர்களோடு மரணத்திருப்பார் என்பதை இயக்குனர் மறந்து விட்டார் போலும்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்து – தலையெழுத்தை மாற்ற திறமையை நீ உயர்த்து.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்